Monday, May 29, 2023

வாசிப்பு, எழுத்து, கவிதை, கவிஞன்

 


    கடந்த இரண்டு வாரங்களாக பொன்னியின் செல்வன் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். யூடியூபில் இப்படத்தில் பணியாற்றியவர்கள் குறிப்பாக மணிரத்னம், ஏ ஆர் ரஹ்மான், ஜெயமோகன் இளங்கோ கிருஷ்ணன் இவர்களின் பேட்டிகளையும், சில விமர்சன வீடியோக்களையும், பேராசிரியர். கு. ஞானசம்பந்தன் அய்யா அவர்களின் ஒரு வீடியோவையும் பார்த்தேன். இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியானவுடன் பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதனால் ஏற்பட்ட ஆர்வம்.  

  படத்தை பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும்  குறிப்பாக இரண்டு விசயங்களை கூறலாம்.

  1. கதை நாவலில் எழுதப்பட்ட மாதிரி எடுக்கவில்லை
  2. ஆதித்ய கரிகாலனை கொண்றது யார்? நந்தினியா?

    நான் நாவலை முழுதும் படித்ததில்லை முதல் பாகத்தில் 50 பக்கங்களுக்கும் குறைவாக தான் படித்த்தாக ஞாபகம். சோழர்கள் வரலாறு சுத்தமாக எனக்கு தெரியாது. என்னுடைய அறிவு தஞ்சாவூரை சோழர்கள் ஒரு காலத்தில் ஆண்டிருக்கார்கள், பெரிய கோயிலையும், கல்லனையும் அவர்கள் கட்டியவைகள் என்பன மட்டும் தான்.

     பொன்னியின் செல்வன் நாவலாகட்டும், படமாகட்டும் இரண்டுமே புனைவு கதைகள். இதில் அச்சுபிசகாத உண்மையை எதிர்பார்பதே அறியாமை. வணிக நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தை வரலாற்றை தவிர்த்து கலை நோக்கத்துடன் பார்க்க வேண்டும் என்பதே படக்குழுவினரின் வாதம். ஏனெனில் உண்மை வரலாறு சுயசரிதை புத்தகமாகவோ, கல்வெட்டுகளாகவோ முழுவதும் பதியப்படவில்லை. அப்படியே இருந்தாலும் அவைகள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்திருக்கும் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்தவை திட்டமாக அறிவுறுத்தி கூறிட யாராலும் முடியாது. ஆதாரத்தின் அடிப்படையில் யூகமாக இப்படி இருந்திருக்கலாம் என  கூறும் தகவல்கள் தான் நம்மிடம் இருக்கின்றன. இவை ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு படத்தில் நான் ரசிக்கும் இரண்டு விசயங்கள் வசனம் மற்றும் பாடல்கள். இசை நன்றாக இருந்தால் அந்த பாடல் வரிகளை யார் எழுதியது என்று தெரிந்து கொள்ள ஆவல் கொள்வேன். அதுபோலவே வசனத்திற்கும். சினிமாவில் வசனத்தை ரசிக்க ஆரம்பித்தது எழுத்தாளர் சுஜாதாவினுடைய படைப்புகளை படிக்க ஆரம்பித்த பிறகு தான். இயக்குநர் ஷங்கர் படங்களுக்காக அவர் எழுதிய வசனங்கள் குறிப்பாக இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன் ஆகியவை நான் விரும்பி ரசித்தவை. சுஜாதாவினுடைய சொற்சிக்கனம், ஒசை நயம் இரண்டும் என்னை கவர்பவை. அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயமோகன் எழுதியவ வசனங்களும் ரசிக்கும் படியாக இருநத்து.

 என்னை பொறுத்தவரையில் சிறந்த படைப்பாளிகள் வாசிப்பின் மூலமே உருவாகிறார்கள். கவிதை கதை இரண்டிற்கும் வாசிப்பு மற்றும் கூர்ந்து கவனித்தல் மிகவும் முக்கியமான அடிப்படை தகுதிகள். பொன்னியின் செல்வனில் பாடல் எழுதிய இளங்கோ கிருஷ்ணன் என்னுடைய கவனத்தை ஈர்த்தார். பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட தமிழை கொண்டு பாடல் வரிகளை இப்படத்திற்காக எழுதியுள்ளார். தனது பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார் படத்திற்கு எழுதவற்கு முன் பல கவிதைகளையும் கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளேன் ஆனால் அவைகள் இந்த அளவிற்கு கவனம் பெறவில்லை. பொன்னியின் செல்வனால் சமுதாயத்தில் சினிமா துறையின் வீச்சையும் தாக்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து எழுத ஒரு உத்வேகத்தை இது கொடுக்கிறது என்றார். இந்த படத்திற்கு பாட்டெழுத ஜெயமோகன் தன்னை பரிந்துரை செய்த்தாகவும் கூறினார். மிகவும் மகிழ்ச்சி திறமை இருக்குறவன் என்னைக்காவது ஒரு நாளைக்கு வெற்றி பெறுவான் என்பதற்கு இதுவே சாட்சி.

 

 

அன்புடன்

தா. அருள்.




1 comment:

  1. மிகவும் நல்ல பதிவு. Welcome back. Superb..

    ReplyDelete