Monday, May 29, 2023

வாசிப்பு, எழுத்து, கவிதை, கவிஞன்

 


    கடந்த இரண்டு வாரங்களாக பொன்னியின் செல்வன் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். யூடியூபில் இப்படத்தில் பணியாற்றியவர்கள் குறிப்பாக மணிரத்னம், ஏ ஆர் ரஹ்மான், ஜெயமோகன் இளங்கோ கிருஷ்ணன் இவர்களின் பேட்டிகளையும், சில விமர்சன வீடியோக்களையும், பேராசிரியர். கு. ஞானசம்பந்தன் அய்யா அவர்களின் ஒரு வீடியோவையும் பார்த்தேன். இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியானவுடன் பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதனால் ஏற்பட்ட ஆர்வம்.  

  படத்தை பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும்  குறிப்பாக இரண்டு விசயங்களை கூறலாம்.

  1. கதை நாவலில் எழுதப்பட்ட மாதிரி எடுக்கவில்லை
  2. ஆதித்ய கரிகாலனை கொண்றது யார்? நந்தினியா?

    நான் நாவலை முழுதும் படித்ததில்லை முதல் பாகத்தில் 50 பக்கங்களுக்கும் குறைவாக தான் படித்த்தாக ஞாபகம். சோழர்கள் வரலாறு சுத்தமாக எனக்கு தெரியாது. என்னுடைய அறிவு தஞ்சாவூரை சோழர்கள் ஒரு காலத்தில் ஆண்டிருக்கார்கள், பெரிய கோயிலையும், கல்லனையும் அவர்கள் கட்டியவைகள் என்பன மட்டும் தான்.

     பொன்னியின் செல்வன் நாவலாகட்டும், படமாகட்டும் இரண்டுமே புனைவு கதைகள். இதில் அச்சுபிசகாத உண்மையை எதிர்பார்பதே அறியாமை. வணிக நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தை வரலாற்றை தவிர்த்து கலை நோக்கத்துடன் பார்க்க வேண்டும் என்பதே படக்குழுவினரின் வாதம். ஏனெனில் உண்மை வரலாறு சுயசரிதை புத்தகமாகவோ, கல்வெட்டுகளாகவோ முழுவதும் பதியப்படவில்லை. அப்படியே இருந்தாலும் அவைகள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்திருக்கும் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்தவை திட்டமாக அறிவுறுத்தி கூறிட யாராலும் முடியாது. ஆதாரத்தின் அடிப்படையில் யூகமாக இப்படி இருந்திருக்கலாம் என  கூறும் தகவல்கள் தான் நம்மிடம் இருக்கின்றன. இவை ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு படத்தில் நான் ரசிக்கும் இரண்டு விசயங்கள் வசனம் மற்றும் பாடல்கள். இசை நன்றாக இருந்தால் அந்த பாடல் வரிகளை யார் எழுதியது என்று தெரிந்து கொள்ள ஆவல் கொள்வேன். அதுபோலவே வசனத்திற்கும். சினிமாவில் வசனத்தை ரசிக்க ஆரம்பித்தது எழுத்தாளர் சுஜாதாவினுடைய படைப்புகளை படிக்க ஆரம்பித்த பிறகு தான். இயக்குநர் ஷங்கர் படங்களுக்காக அவர் எழுதிய வசனங்கள் குறிப்பாக இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன் ஆகியவை நான் விரும்பி ரசித்தவை. சுஜாதாவினுடைய சொற்சிக்கனம், ஒசை நயம் இரண்டும் என்னை கவர்பவை. அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயமோகன் எழுதியவ வசனங்களும் ரசிக்கும் படியாக இருநத்து.

 என்னை பொறுத்தவரையில் சிறந்த படைப்பாளிகள் வாசிப்பின் மூலமே உருவாகிறார்கள். கவிதை கதை இரண்டிற்கும் வாசிப்பு மற்றும் கூர்ந்து கவனித்தல் மிகவும் முக்கியமான அடிப்படை தகுதிகள். பொன்னியின் செல்வனில் பாடல் எழுதிய இளங்கோ கிருஷ்ணன் என்னுடைய கவனத்தை ஈர்த்தார். பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட தமிழை கொண்டு பாடல் வரிகளை இப்படத்திற்காக எழுதியுள்ளார். தனது பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார் படத்திற்கு எழுதவற்கு முன் பல கவிதைகளையும் கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளேன் ஆனால் அவைகள் இந்த அளவிற்கு கவனம் பெறவில்லை. பொன்னியின் செல்வனால் சமுதாயத்தில் சினிமா துறையின் வீச்சையும் தாக்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து எழுத ஒரு உத்வேகத்தை இது கொடுக்கிறது என்றார். இந்த படத்திற்கு பாட்டெழுத ஜெயமோகன் தன்னை பரிந்துரை செய்த்தாகவும் கூறினார். மிகவும் மகிழ்ச்சி திறமை இருக்குறவன் என்னைக்காவது ஒரு நாளைக்கு வெற்றி பெறுவான் என்பதற்கு இதுவே சாட்சி.

 

 

அன்புடன்

தா. அருள்.




ஜாதகம், ஜோதிடம் நம்பலாமா? வேண்டாமா?

 


   நான் வணங்கும் குரு பேராசிரியர் க.மணி அவர்கள். சத்சங்கத்தில் ஒரு நாள் ஜோதிடம் உண்மை எனக் கூறினார். சத்குரு சாதரணமாக எதையும் கூறுவதில்லை அப்படி அழுத்தம் திருத்தமாக கூறினால் அதற்கு அர்த்தம் இருக்கிறது என்று பொருள். எதையும் நன்கு தெரிந்து கொண்டு ஆராய்ந்த பிறாகே சரி என ஏற்றுக்கொள்ளக் கூடியவர். இதை ஏன் சொல்கிறேன் என்றால் மணி சார் எனக்கு பரிட்சயம் ஆவதற்கு முன்பு வேதம், கடவுள், ஜோதிடம் இவைகள் மீது நம்பிக்கை இல்லாதவனாய் இருந்தேன். ஆனால் சார் சத்சங்கத்தில் புரியும் படி விளக்கியதால் எனக்குள் இருந்த அறியாமை விளகியது.

   ஒரு காலத்தில் ஜோதிடம் பொய் என்ற கண்ணோட்டத்தில் அதை முழுவதும் படிக்காமலும், தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாமலும் எதிர்த்து வந்தேன். குரு உண்மை எனக் கூறியவுடன் ஜோதிடத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. யூடியூபில் வீடியோக்களையும், இன்டர்நெட்டில் Blog கட்டுரைகளையும், ஜோதிட சம்பந்தமான புத்தகங்களையும் பார்க்கவும் படிக்கவும் ஆரம்பித்தேன். தற்சமயம் ஜோதிடத்தின்  தாத்பரியத்தை ஒரளவிற்கு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது,

   நான் அறிவியல் மாணவன் எதையும் ஆராய்ச்சி மனப்பாண்மையுடன் பார்க்கும் பழக்கம் கொண்டவன். இயற்கையில் எல்லாம் விதிப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன. அமானுஷ்யமாகவோ, தர்கரீதியாக விளக்க முடியாத விசயங்களையோ நான் உண்மை என ஏற்றுக் கொள்வதில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஜோதிடம் வானில் உள்ள கிரகங்கள் நம் வாழ்வை தீர்மானிக்கின்றன என்று கூறுகின்றது. எங்கோ பல லட்சம் கோடி கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள கிரகங்களின் நகர்வு எப்படி மனித வாழ்வை பாதிக்கும்? இது தான் பெரும்பாலனவர்களின் அடிப்படைக் கேள்வி. இதை சில உதாரணங்களை கொண்டு புரிந்து கொள்ள முயவோம்.

     அறிவியலில் Interpretation என்று சொல்லுவார்கள் ஒன்றை இன்னொன்றுடன் பொருத்தி பார்த்து விளக்க முயல்வது அதாவது Thermometer வெப்பநிலையை துல்லியமாக கூறுகின்றது. செயற்கையாக உருவாக்கப்பட்ட கருவியினால் எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்ல முடியும். இதற்கெல்லாம் ஒரு முறையை உருவாக்கி இருக்கிறோம். இதனை Standards என்று கூறுவார்கள். தூய நீர் கொதிக்கும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் என்பது ஒரு Standard Value. இயற்கையில் பலவிதமான உலோகங்கள் (Metals) இருக்கின்றன. உதாரணத்திற்கு இரும்பு, அலுமினியம், பாதரசம், பித்தளை என வித விதமான உலோகங்களை சூரிய வெளிச்சத்தில் இரண்டு மணி நேரம் வைப்பதாக கொள்வோம். இரண்டு மணி நேரம் கழித்து எல்லா உலோகத்தையும் தொட்டு பாருங்கள். ஒவ்வொன்றும் வேறு வேறு வெப்பநிலையை ஏற்றிருக்கும். இதை தன் வெப்ப ஏற்புத்திறன் (Specific Heat) என்று சொல்கிறார்கள்.

    இயற்கை இவ்வாறு இருக்கையில் வெப்பநிலையை துல்லியமாக அளவிட உலோகங்களின் வெப்ப ஏற்புதிறனை Standard Value-வுடன் Interpretation செய்து வெப்பநிலையை கணக்கிடுகிறார்கள். Mercury Thermometer-ல் வெப்பநிலை உயர உயர பாதரசம் மேலே எழுகிறது. பாதரசம் மேலே எழுவதை Standard Value-வுடன் Interpretation செய்து இவ்வளவு வெப்பநிலை என கணக்கிடுகிறோம். இதுமாதிரி அழுத்தம், வேகம், ஒலி மற்றும் ஒளி போன்றவைகளையும் துல்லியமாக கணக்கிட முடியும். ஒன்றை மற்றொன்றுடன் Interpretation செய்து பார்க்க நிறைய பரிசோதனைகள் (Experiments) தேவை. பயன்படுத்தப்படும் பொருட்களின் தன்மை (Material Properties) பற்றி நன்கு தெரிந்தால் மட்டுமே துல்லியமான கணக்கீடு என்பது சாத்தியம்.

ஜோதிடமும் இது மாதிரி Interpretation செய்து பார்க்கும் முறைதான். நமது முன்னோர்கள் வானியலை நன்கு ஆராய்ந்துள்ளனர். வானியல் மாற்றங்களை மனித வாழ்க்கையோடு Interpretation செய்து பார்பதே ஜோதிடம். இதிலும் துல்லியம் என்பது சாத்தியம் தான். ஒரு ஜோதிடர் துல்லியமாக பலன் சொல்வதற்கு மிகுந்த சாஸ்திர ஞானம் கொண்டிருக்க வேண்டும். மூல நூல்களை குருவின் உதவியுடன் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கும் திறனும் ஆராய்ச்சி மனப்பான்மையும் கொண்டிருக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து.

கிரகங்களும் இயற்கை விதிப்படிதான் இயங்குகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஜோதிட விசயங்கள் மூல நூல்களில் துல்லியமாக சொல்லப்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் நீண்ட நெடிய ஆராய்ச்சிகளுக்கு பிறகே இந்த சாஸ்திரம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆழ்ந்து படிக்கையில் தெரிந்து கொள்ள முடிகிறது.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும். மனித வாழ்க்கைப் பற்றி சில கருதுகோள்கள் நிலவுகின்றது அது என்னவென்று பார்ப்போம். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் இவை.

  1. மனித பிறவி என்பது நாம் செய்த பாவ புண்ணியங்களை கழிப்பதற்காக நமக்கு கொடுக்கப்படுகிறது. 
  2. பிறக்கும் முன்பே நமது இந்த ஜென்மத்தினுடைய விதி தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றது. அதன்பின் தான் பிறப்பு நடக்கிறது. 
  3. மறுபிறப்பு உண்டு. நாம் எடுத்திருக்கும் இந்த பிறவியே பல கோடி பிறவிகளில் ஒன்று. 
  4. நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் சித்தத்தில் சேமிக்கப்படுகிறது. முற்பிறவிகளில் நடந்தவைகளும் நம் சித்தத்தில் இருக்கின்றன.

   ஜோதிடத்தை ஏற்றுக்கொள்ளும் முன் நான் மேலே சொன்ன நான்கு விசயங்களை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும் ஏனெனில் ஜோதிடம் இந்த அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

   மறுபிறவி பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் நிறைய நடந்துள்ளன. ஆராய்ச்சி முடிவுகள் மறுபிறவி உண்மை  என கூறுகின்றது. நடைமுறை வாழ்க்கையிலும் மறுபிறவி என்பது உண்மை என நம்புவதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. நம் வாழ்க்கையில் சில விசயங்களை அனுமானத்தின் மூலம் யூகித்து உண்மை என புரிந்து கொள்கிறோம். உதாரணத்திற்கு மதிய வேலையில் வயிற்றில் எரிச்சலுடன் கூடிய சப்தம் வந்தால் வயிறு பசிக்கிறது என்று புரிந்து கொள்கிறோம். தூரத்தில் எங்கோ புகை வருவதை பார்த்து அங்கே ஏதோ எரிந்து கொண்டிருக்கிறதென்று பக்கத்தில் இருந்து பார்க்காமலேயே நமக்கு புரிந்துவிடுகிறது. நெருப்பில்லாமல் புகையாது என்பதுபோல அனுமானத்தின் வாயிலாக மறுபிறவி விசயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

    புள்ளியல் துறையில் கூறப்படும் நிகழ்தகவு கோட்பாடு போன்றதுதான் ஜோதிடமும். சராசரி 60 ஆண்டுகள் கொண்ட மனித வாழ்க்கையை பிறந்தது முதல் இறக்கும் வரையில் நடக்கும் அனைத்து சம்பவங்கள், பார்க்கும் மனிதர்கள் அனைத்தையும் நாள் வாரியாக, மணித்துளி வாரியாக கணித்து கூறுவது என்பது யாராலும் முடியாத ஒன்று. இன்றைய கால கட்டத்தில் அறிவியல் முன்னேற்றம் வானிலை முன்னறிவிப்புகளை நாள் வாரியாக, மணித்துளி வாரியாக மிகத் துல்லியமாக கூறுகின்றன. இது மாதிரி மனித வாழ்க்கை சம்பவங்களை மிகத் துல்லியமாக கணித்துக் கூற எந்தவிதமான கணித மாதிரிகளும் (Mathematical Model) இன்றுவரை உருவாக்கப்படவில்லை.

    எல்லோருக்கும் அவர்கள் வாழ்வில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆசையும் ஆர்வமும் இருக்கின்றது. பெரும்பாலனவர்களுக்கு பணம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என அனைத்தும் தமக்கு வேண்டும் என நினைக்கின்றனர். வாழ்க்கையில் துன்பமே வரக்கூடாதென்றும் நோய் நொடி ஏதுமின்றி இறப்பின்றி வாழவேண்டும் என்பதே இந்த பூமியில் வாழும் அனைவரின் எதிர்பார்ப்பும். ஆனால் இயற்கை மனித வாழ்க்கையை வேறுவிதமாக வடிவமைத்திருக்கிறது. முரண்பாடுகள் மனிதர்களுக்கு  தெரிந்தாலும் நிதர்சணத்தை ஏற்றுக்கொள்ள ஒரு தயக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த தயக்கத்திற்கு சமுதாயத்தில் மவுசு அதிகம்.

   இன்றைய போலி ஜோதிடர்கள் இதை நன்கு பயன்படுத்தி பணம் பார்க்கின்றனர். ஜோதிடம் என்பது ஒரு சிறந்த தொழில் என்பது அவர்களுடைய கண்ணோட்டம். தொழில் என்று வந்துவிட்டாலே லாபம் தான் முக்கியம். நல்ல ஜோதிடர் என்று நாலு பேர் சொல்லிவிட்டால், ஊடகங்கள் மதிப்பளித்து புரமோட் செய்ய  ஆரம்பித்து விட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம் தான். எனக்கு தெரிந்து ஜாதகம் பார்க்க 500 முதல் 5000 வரை பணம் கேட்கின்றனர். 500 மற்றும் 1500 பொதுவாக கேட்கப்படும் தொகையாக உள்ளது.

    ஜோதிடர்கள் முதலில் தாங்கள் கேட்கும் பணத்தை செலுத்திவிட்டு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் மற்றும் நம்முடைய கேள்வி என்ன என்பதை ஜோதிடம் பார்க்கும் முன் அவர்களிடம் கூறிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் நம்மை அனுக அனுமதிக்கின்றனர். பலன் கூறும் போது வாழ்க்கையில் ஏற்கனவே நடந்த ஓரிரு விசயங்கள் அவர்கள் செல்வதுடன் ஒத்துபோவது போல் தோன்றும். என் நண்பர் ஒருவர் கூறினார் நடந்தவற்றை கூறுபவர் ஒரு நல்ல ஜோதிடர் கிடையாது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை துல்லியமாக கணித்த்ய் கூறுபவரே நல்ல ஜோதிடர். ஏனெனில் ஏற்கனவே நடந்தவைகளை நாம் கொடுக்கும் முன் விவரங்களைக் கொண்டு கணிக்க முடியும். உதாரணத்திற்கு எனக்கு முப்பது வயது ஆகிறது எப்போது என் திருமணம்? என்ற கேள்வியை கேட்டிருக்கிறோம் என்றால் ஏன் இவ்வளவு நாள் திருமணம் ஆகவில்லை என்ற விவரங்களை கூறுவது யாவர்கும் எளிதே. இதில் ஒரு சில விதிவிலக்குகள் இருக்கின்றன மறுப்பதற்கில்லை.

   வாழ்க்கையை பற்றின சில புரிதல்களை சிந்தித்து தெளிவாக்கிக் கொண்டால் எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்பில்லாமல் வாழ முடியும். இந்துக்கள் ஜோதிடத்தை ஐந்தாவது வேதம் என ஏற்றுக்கொள்கின்றனர். ஆகையால் ஜோதிடம் பொய் என முற்றிலும் மறுப்பதற்கில்லை.

வாழ்க்கை பற்றியும் ஜோதிடம் பற்றியும் எனது சில புரிதல்கள் இவை:

  1. நமது வாழ்க்கையில் நடக்கும், நடக்கபோகும் சம்பவங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன. யாராலும் அதை மாற்ற முடியாது.
  2. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை.
  3. ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களால் விதியை மாற்ற முடியாது.

   இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு கீழ்கண்ட கேள்விகள் மனதில் தோன்றலாம்

  1. ஒரு மனிதன் தன்னுடைய ஜாதகத்தை தெரிந்து கொள்வது அவசியமா?
  2. நல்ல ஜோதிடர்களை எப்படி கண்டுகொள்வது?

   இதற்கான என்னுடைய பதில் மேற்கூறிய என்னுடைய மூன்று புரிதல்களை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்களென்றால் ஜாதகத்தை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு சுலபமாக வந்து விட முடியும். ஆனால் நம்மிடம் இருக்கும் மனக்குரங்கு எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டிய வண்ணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் துன்பத்தை கண்டு ஏற்படும் பயம் நம் மன சஞ்சலத்தை அதிகரிக்கிறது. ஒரு நல்ல ஜோதிடர் என்பவர் பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாக கொண்டிருக்கமாட்டார். அவருக்கு நன்றாக தெரியும் இதனால் பாவத்தை நம் கணக்கில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று. நான் கடைசியாக என்னுடைய ஜாதகத்தை பார்த்த ஜோதிடரிடம் ஒரு நல்ல ஜோதிடரை எப்படி கண்டு கொள்வது என கேட்டேன் அதற்கு அவர் அது உங்களுடைய தலைவிதியை பொறுத்தது என்றார். 

 


அன்புடன்

தா. அருள்.


Tuesday, May 2, 2023

எனது எண்ணங்கள்

          எழுதுவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட பல ஞாயமான காரணங்கள் இருந்தன. எழுத்து பயிற்சியை மேற்கொள்ள நோட்டு புத்தகத்தில் எனக்கு தோன்றியதை எழுத ஆரம்பித்தேன். நான் இந்த செயலை ஆரம்பித்த நாள் 07.10.2012 திரும்பி பார்க்கையில் பத்து வருடம் நிறைவடைந்துவிட்டது எனது எழுத்தார்வம் இன்று வரை குறையவில்லை என்பதில் மகிழ்ச்சி ஆனால் நான் இன்னும் நிறைய எழுதி பழக வேண்டும் என்பது தெரிகிறது. நான் முதன் முதலில் என் நோட்டு புத்தகத்தில் எழுதியதை அப்படியே இங்கு தருகிறேன். பாரதியின் வரிகளை படித்து விட்டு எழுத தொடங்கியதால் அந்த வரிகளை முதலில் தந்துவிட்டு மேற்கொண்டு தொடர்கிறேன்.


”மனமாகிய குரங்கு செய்வதையெல்லாம் எழுதிக் கொண்டு போனால் காலக்கிரமத்தில் அதைவசப்படுத்திவிடலாம் என்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்குமுன்பாக அதன் இயல்புகளையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்மால் நன்றாக அறியப்படாததை நாம் வசப்படுத்தமுடியாது. சித்தத்தை வசப்படுத்தும் முன் சித்தத்தை அறிய வேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து எழுதிக்கொண்டு வந்தால் அதன் தன்மை முழுவதையும் அறிய ஹேதுவுண்டாகுமென்பது என்னுடைய தீர்மானம்”

     -மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

 

முதல் நாள்
07.10.2012 (ஞாயிற்றுக் கிழமை)

      இன்றிலிருந்து நான் ஒரு புதுப்பழக்கத்தை ஆரம்பிக்கிறேன். அது என்னவென்றால் எழுதுவது! அது நாட்குறிப்பா அல்லது வேறு எதாவதா என்று தெரியவில்லை. என் மனதில் பட்டதை எழுதப் போகிறேன். முதலில் என் பெயர் அருள் செல்வம். நான் ஒரு வாழப்பழ சோம்பேறி. என் வாழ்நாளில் இது போன்ற என்னற்ற பழக்கங்களை ஆர்வமாக தொடங்கி மிக விரைவிலேயே கைவிட்ட அனுபவங்கள் நிறைய உண்டு. இப்பழக்கம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது எனக்கு தெரியாது. இக்கனத்தில் நான் மிகுந்த ஆவலாக எழுதுகிறேன். ஒரு வேலை இப்பழக்கம் நீண்ட நாட்கள் தொடரலாம் அல்லது தொடராமலும் போகலாம். எனக்கு புத்தகங்கள் வாசிப்பதிலும் சொந்தமாக நானே எழுதுவதிலும் சமீப காலங்களில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் இப்பழக்கம் நீண்ட நாட்கள் தொடர வேண்டும் என்பது என் ஆசை.

     நான் ஏன் இக்காரியத்தை இன்று தொடங்குகிறேன்? ஏனென்றால் இன்று இண்டர்நெட்டில் பாரதியை மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தகத்தின் விமர்சனக் கட்டுரையை படித்தேன். அது எனக்குள் சிறு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அதில் பாரதி தினந்தோறும் நாம் செய்யும் விசயங்களை எழுதி வைத்தால் நம் குணத்தை பற்றி அறிய முடியும். குணத்தை பற்றி தெரிந்து கொள்வதால் நம் தவறுகள், பலம் மற்றும் பலவீனங்களை பற்றி அறிய முடியும் என்று சொல்லி இருந்தார். இந்த விசயம் எனக்கு பிடித்திருக்கிறபடியால் இதை ஒரு சிறு முயற்சியாக மேற்கொள்கிறேன்.

      இன்று ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது நாற்பதிற்கு எழுந்தேன். மெஸ் பத்து மணிக்கு மூடி விடுவார்கள் என்பதால் பல்லை மட்டும் விலக்கிவிட்டு நேராக மெஸ்ஸிற்கு சென்று விட்டேன். காலை உணவாக கார்ன் பிளேக்ஸ் மற்றும் ஒரு டம்ளர் டீ சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் டீவி பார்த்துவிட்டு ரூமிற்கு வந்தேன்.

     துணி துவைக்க வேண்டும் என்பது இன்றைய திட்டமாக காலையில் எழுந்தவுடன் நினைத்திருந்தேன் ரூமிற்கு வந்தவுடன் கொஞ்சநேரம் இங்கிலிஷ் வார்த்தைகள் படித்தேன். அப்படியே Mp3 பிளேயரில் பாட்டு கேட்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. கொஞ்ச நேரம் கேட்டேன் அப்புறம் ஞானவானி பண்பலையில் பதிந்து வைத்திருந்த பேச்சுக்களை கேட்டேன். அடுத்து மணி சாருடைய அறிவியல் நேரம் நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் கேட்டு மொத்தமாக இரண்டு மணி நேரத்தை வீனாக்கிவிட்டேன்.

     மதியம் ஒன்று முப்பது மணிக்கு சாப்பிட்டேன் கொஞ்ச நேரம் பாட்டு கேட்டுவிட்டு தூங்கினேன். மாலை ஏழு முப்பது மணிக்கு எழுந்தேன். இன்று நான் துணி துவைக்கவில்லை ஏன் என்றால் சோம்பேறித்தனம். நாளை காலை பத்து மணிக்கு Storage  வகுப்பிற்கு நான் எந்த துணியை போட்டு போவதென்று தெரியவில்லை.

     இன்று ICC 20-20 மேட்சின் இறுதி ஆட்டம் இலங்கை மேற்கிந்திய தீவுகள் விளையாடின. எட்டு மணியிலிருந்து பார்த்துவிட்டு ஒன்பது மணிக்கு மெஸ்ஸில் இரவு உணவை முடித்தேன். மேட்ச் பத்து முப்பதிற்கு முடிந்தது. நேராக டில்டன் சார் ரூமிற்கு வந்து எஞ்சியிருந்த பிரசண்டேசன் செரிமனியை இண்டர்நெட்டில் லைவாக பார்த்தேன். வெஸ்ட் இண்டிஸ் கோப்பையை வென்றதில் எனக்கு மகிழ்ச்சி. கொஞ்ச நேரம் நெட்டில் உலவிவிட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

     இன்று  PCR அதாவது Polymer Chain Reaction கருவி DNA-வை நகலெடுக்க பயன்படுத்துகிறார்கள் ஜெராக்ஸ் மெசின் போல என்றும், எர்வின் ஸ்க்ரோடிஞ்சர் உலகத்திலுள்ள அனைத்தும் deception அதாவது மாயை போன்ற ஒன்றால் மறைக்கப்பட்டுள்ளது என்றும் Singularity, Plurality என்பது எதுவும் கிடையாது என்பதை விளக்கியிருந்ததைப் பற்றியும், அனிகிலேசன் என்ற வார்த்தைக்கு இருவர் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்றால் கடைசியில் யாராவது ஒருத்தர் வென்று மற்றவர் தோற்பது என்றில்லாமல் இருவரும் இறந்து விடுவதுதான் அதன் அர்த்தம் என்பதையும் புரிந்து கொண்டேன். ஆக மொத்தத்தில் உருப்படியாக இன்று ஒரு வேலையும் செய்யவில்லை அது மட்டும் உண்மை.

 


அன்புடன்
தா. அருள்.



கடிதம் 3: உணவு பற்றி காந்தியடிகள்…

 இக்கடிதம் அக்டோபர் 4, 2015 அன்று எழுதியது. 



அன்புள்ள சீனியர் அவர்களுக்கு,
     சமிபத்தில் நான் படித்த உணவு என்ற புத்தகம் என்னளவில் சில சிந்தனைகளை உணர்வுபூர்வமாக ஏற்படுத்திவிட்டது. காந்தியடிகள் மேற்கொண்ட உணவு பரிசோதனைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் விதமாக ஹரிஜன்யங் இந்தியா ஆகிய பத்ரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். இதை படிக்கத் தொடங்கியவுடன் உங்களுடைய ஞாபகம் தான் எனக்கு வந்தது. நான் ஒரு ஐந்து வருடங்களுக்கு மேல் உங்களுடன் பழகியிருக்கிறேன் என்ற முறையில் கவனித்த விசயம் என்னவென்றால் காந்தி அவர்கள் சொல்லியிருக்கும் உணவு சீர்திருத்த முறைகளை வெகு காலத்திற்கு முன்பே நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று இன்றுதான் எனக்கு புரிகிறது.

  உணவு பற்றிய விவாதங்கள் நம்மிடையே இதுவரை அதிகம் ஏற்பட்டதில்லை மற்ற விசயங்களைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம் கோபம் வரும் அளவுக்கு கார சாரமான விவாதங்கள் நம்முள் நடந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் நான் நினைத்தது என்னவென்றால் நீங்கள் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருப்பதனால் பழமைகளை கடைபிடிக்க நினைத்து இவ்விசயங்களை (உணவு பத்தியம்) அதிகம் யோசித்து பார்க்காமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஆனால் அது எவ்வளவு பெரிய அறியாமை என்று இன்றுதான் தெரிகிறது. ஒருவேளை நீங்கள் விவாதத்தை ஏற்படுத்தி தர்க்க ரீதியான காரணங்களை முன்வைத்திருந்தால் எனக்குள் உணவு சீர்திருத்தத்தை பற்றிய எண்ணங்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் வைராக்கியத்துடன் ஒரு செயலை நீண்ட நாட்கள் கடைபிடிப்பதில் எனக்கு பயிற்சிகள் இன்னும் சொல்லிக் கொல்லும் படியாக ஏற்படவில்லை என்பதையும் கூறவேண்டும். ஒருவேளை உணவு பழக்கங்களை எனக்கு புரியும் படி விளக்கி கூறியிருந்தாலும் அதை கடைபிடிக்க தயங்கியே இருப்பேன்.

   சரி நான் என்ன படித்தேன் என்பதை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன். இவ்விசயங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தால் நீங்கள் உங்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் உணவின் மீதான மதிப்பீடு மிகவும் உண்மை என்பதை உறுதிசெய்து கொள்ள உதவியாக இருக்கும்.

   காந்தி சொல்கிறார் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்அதை நிதானமாக பற்கலின் உதவி கொண்டு மென்று வாயில் ஊறும் எச்சில் நாம் மெல்லும் உணவுடன் நன்கு கலந்து வயிற்றுக்குள் அனுப்ப வேண்டும். முடிந்த வரையில் வெப்பத்தை பயன்படுத்தி சமைக்காமல் பச்சையாக அப்படியே சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் சத்துக்கள் நேரடியாகமுழுமையாக உடலில் சென்று சேறும். இக்காரியங்கள் நமக்கு சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் உடல் ஜீரண மணடலத்திற்கு வேலையை குறைக்க வழி செய்யும். இதனால் சமயலுக்காகும் செலவும் குறைவே. ஆதலால் உடல் ஆரோக்கியத்துடனும்உற்சாகத்துடனும் செயல்பட இவ்விசயங்கள் தீவிரமாகவைராக்கியத்துடனும் பின்பற்ற வேண்டும் என கூறுகிறார்.

   இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிதர பல அறப்போராட்டங்களை முன்னொடுத்த காந்தி உணவு விசயத்தில் மேற்கொண்ட சோதனைகளை படிக்க படிக்க ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் அவருடைய ஆளுமையின் மீது என்னுடைய மதிப்பும் அதிகரிக்கிறது.


அன்புடன்
தா.அருள்...  

கடிதம் 2: இசாந்தீப் சிங்...

 இக்கடிதம் அக்டோபர் 5, 2015 அன்று எழுதியது.


         நண்பா எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உண்ணுடன் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் பஞ்சாப்பில் படித்து கொண்டிருந்த போது இது நடந்தது. என்னுடைய வகுப்பு தோழன் பஞ்சாப் மாநிலம் சங்ரூரை பூர்வீகமாக கொண்டவன். பெயர் இசாந்தீப் சிங். பண்ணை இயந்திரவியல் துறையில் படித்து வந்தான். அவன் இளநிலை முடித்து இரண்டு வருடங்கள் தழிழ் நாட்டில் வேலை செய்த அனுபவம் பெற்றிருந்ததனால் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என்ன அண்ணா நல்லரிக்கிங்களா என தமிழில் கேட்பான். எனக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததோ அதாவது மொழி தெரியாமல் நான் படும் கஷ்டங்களை பார்த்து உணர்வுப்பூர்வமாக அவனும் இதே கஷ்டங்களை தமிழ் நாட்டில் இருந்தபோது சந்தித்திருந்ததினால் நான் அங்கு சென்றதிலிருந்தே என்னுடன் அன்பாக பழகி வந்தான்.

       என்னை பார்க்கும் போதெல்லாம் வாழ்க்கையை பற்றி அழுத்து கொள்வான் பெரும்பாலும் எதிர்காலத்தை பற்றியதாகவே இருக்கும். எப்பொழுது நிறந்தமான அரசாங்க வேலை கிடைக்குமோஎப்பொழுது கல்யாணம் ஆக போகிறதோஎன்கிற புலம்பல்கள் சில நேரங்களில் அதிகமாக கூட இருக்கும். ஆனால் மிகவும் அன்பானவன் அவனைச் சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் அதிகம் இருந்து கொண்டே இருக்கும்  நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி வாழ்க்கை மீண்டும் அமைந்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சி எப்பொழுதும் கலகலப்பாக அவனிடம் இருக்கும்.

        நான் இரண்டாமாண்டு இறுதி செமஸ்டர் படிக்கும் பொழுது நடந்த சம்பவம் எனக்குள் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்தியது. ஒரு வெள்ளிக்கிழமை இரவு சாப்பிடும் போது எப்பொழுதும் போல வாழ்க்கை பற்றிய புலம்பல்கள்,  பிராஜக்ட் வேலைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை என பேசிவிட்டு மறுநாள் விடுமுறை என்பதால் ஞாயிற்று கிழமை நடக்கவிருந்த நண்பனின் திருமணத்திற்கு சென்றுவிட்டான். ஞாயிறு அன்று நடந்த கல்யான விருந்தில் மது அருந்திவிட்டு அவனுடைய நெருங்கிய நன்பனுடன் கார் ஓட்டிச் சென்றபோதுசாலையில் விபத்து ஏற்பட்டு அகால மரணம் அடைந்து விட்டான். செய்தி எங்களுக்கு கிடைத்தது. நான் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவனுடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். ரத்தமும் சதையுமாக முகம் சிதைவடைந்த அவனுடைய உடம்பை பார்த்த போது எனக்குள் ஒர் எண்ணம் தோன்றியது. நேற்றுவரை இந்த உடம்பு எவ்வளவு மனச்சிக்கல்களுடன் இருந்ததுஇன்று எல்லாமே முடிந்துவிட்டது.  
    
        மனிதனுடைய வாழ்க்கை என்பது இவ்வளவு தானா. ஒரு அரைமணி நேரத்தில் எல்லாச் சடங்குகளும் செய்து முடித்து விட்டு பிரேதத்தை எரித்தனர். ஆனால் அன்று நான் நினைத்தேன் இன்னும் ஆறு மாதத்திற்குள் இவன் பெயரை எல்லோரும் மறந்து விடுவர். எவ்வளவோ வாய்புகள் நமக்கு இந்த பூமியில் கொடுக்கப்பட்டிருக்கிறது அதை பயன்படுத்தி ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய சுவடை கூட பதிக்காமல் இந்த மனிதன் இறந்து விட்டானே நமக்கும் ஒரு நாள் இப்படி முடிவு வந்து விட்டாள் என்ன செய்வது. ஆகையால் நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஏதாவது நன்மையை செய்யும் விதமாக இருக்க வேண்டும். நாம் இறந்துவிட்டாள் கூட நாம் செய்து விட்டு போகும் செயல்களினால் எப்பொழுதும் நம்மை நினைவு கூர்ந்து பார்க்கப்பட வேண்டும் என மனதிற்குள்ளே நீண்ட விவாதங்கள் இரண்டு நாள் நடந்தன. ஒரு வாரம் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. அதற்கு பிறகு தான் எனது நடவடிக்கைகளில் மாற்றம் வரத் தொடங்கின.

         நண்பா இதை ஏன் உனக்கு சொல்கிறேன் தெரியுமா தினமும் செய்தித்தாள்களில் மனிதர்கள் இறக்கும் செய்திகள் வந்துகொண்டுதானிருக்கின்றன. அதை படிக்கும் போதெல்லாம் எந்தவொரு சலனமும் ஏற்படாத மனது ஒரு சம்பவத்தை நேரடியாக பார்க்கும் போது மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. எனக்குள் ஒழிந்து கிடந்த ஆற்றல்களையெல்லாம் வெளிகொணர்ந்த பெருமை என் நண்பன் இசாந்தீப்பையே சாரும் என எப்பொழுதும் கருதுகிறேன்.  



அன்புடன்
தா.அருள்.

நான் எழுதிய கடிதங்கள்...

     


               பொதுவாக அடிக்கடி கடிதம் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால் சில நல்ல கடிதங்களை நான் எழுதியுள்ளேன். வாழ்க்கையில் நான் பார்க்கும் விசயங்கள் சிலசமயம் நம் எண்ண ஓட்டத்தை மாற்றி அமைக்கப்படக்கூடிய வல்லமை படைத்தவை அப்படியான தருணங்களை என் நன்பர்களுடன் கடிதத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளேன். கடிதம் எழுதுவதில் உள்ள சவுகரியம் நாம் என்ன நினைக்கின்றோம் என்பதை நிதானமாக யோசித்து தகுந்த வார்த்தைகளைக் கொண்டு சொல்லிவிட முடியும். போசும் போது இது கடினம். சிலசமயம்  தப்பான வார்த்தைகள் பிரயோகம் ஆவதையும், சொல்லவந்த விசயம் மறந்து போவதையும் நம்மால் தடுக்கமுடியாது.


    நேற்று எனது மின்னஞ்சலை துளாவியபோது (மின்னஞ்சலும் கடிதம் தானே!) எப்போதோ எழுதிய சில மின்னஞ்சல்களை படிக்க நேர்ந்தது. ஒரளவிற்கு சுவாரசியம் என்னளவில் ஏற்படுத்திய அக்கடிதங்களை இங்கே தொடர் பதிவுகளாக பதிய ஆசைப்படுகிறேன். இதை ஏன் நான் செய்கிறேன் என்றால் சில நேரங்களில் மனதிலிருப்பதை வார்த்தைகளாக வடித்தவுடன் ஒரு ஆத்ம திருப்த்தி என்னுள் ஏற்படுவதை  நிறைய சந்தர்பங்களில் உணர்ந்திருக்கிறேன். அப்படி நான் உணர்ந்த தருனங்கள் தான் இக்கடிதங்கள். இன்று எதேச்சையாக இவைகளை பார்த்தவுடன் வாழ்கையின் நிதர்சணங்களுக்கும் ஒரு அழகு இருப்பதை பார்க்கமுடிகிறது. 

    ஒய்வு நேரங்களில், பொழுது போகாத சமயங்களில் இவை உங்களுக்கு குறைந்த பட்ச சுவாரசியத்தை கொடுக்கும் என நம்புகிறேன். 



அன்புடன்
தா.அருள்

Monday, May 1, 2023

பொன்னியின் செல்வன் பாகம் 2

 

     இன்று பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் பார்த்தேன். தியேட்டருக்கு சென்றல்ல; நெட்டில். தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் பழக்கம் என்றோ வழக்கொழிந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன இங்கு அதை சொல்வதல்ல என் நோக்கம்.

     பத்து வருடத்திற்கு முன் கனடாவில் வசிக்கும் என் நண்பன் தமிழ் புத்தகங்கள் வாங்கி தரும்படி கேட்டு ஒரு பட்டியல் அனுப்பியிருந்தான். அதில் விவேகான்ந்தர் எழுதிய கர்ம யோகம் மற்றும் கல்கியின் சிவகாமி சபதம் குறிப்பிடத்தக்கவை. புத்தக வாசிப்பு தொடங்கியிருந்த காலம் அது. கதை புத்தகங்கள் மீது அதிக எனக்கு நாட்டமுமில்லை படித்ததும் இல்லை அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இவைதான் என்னோட ஏரியா.

     நன்பனுக்காக புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்திருந்தேன். புத்தகத்தை அனுப்ப இரண்டு நாட்கள் இருந்த நிலையில் எனக்கொரு சந்தேகம் ஏற்படட்து கனடாவிலிருந்து வாங்கி படிக்கும் அளவிற்கு இதில் அப்படி என்ன இருக்கிறது என்றும் அனைவரும் ஏன் கல்கியை சிலாகித்து பேசுகின்றனர் என்றும் எனக்குள் கேள்வி எழுந்தது. சுமாரன மனநிலையில் என்னதான் இருக்கிறதென்று படித்துதான் பார்ப்போமே என்று சிவகாமி சபதத்தை படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் பக்கங்கள் போக போக புத்தகத்தை கீழே வைக்கவே மனது வரவில்லை. படிக்கும் போது மொழி நடை மற்றும் அதிக திருப்புமுனைகள் தந்த சுவாரசியம் எவ்வளவு நேரம் படித்தோம் என்று தெரியாமல் மணிக்கணக்கில் படிக்க வைத்து விட்டது அந்த புத்தகம்.

     சிவகாமி சபதம் ஒரு மணி நேரத்திலோ அல்லது ஒரு நாளில் படித்து முடிக்கக்கூடிய புத்தமல்லாததால் வேறு வேலையாக எங்கு சென்றாலும் மனதில் வீட்டிற்கு எப்போ செல்வோம் மீண்டும் விட்ட இடத்திலிருந்து எப்போது படிப்போம் என்று மனது பரபரப்பை ஏற்படுத்தியது. தவிர கதை சம்பவங்களும் கல்கியின் வார்த்தைகளும் என் மனதை நாள் முழுதும் நிரப்பி இருந்தன. புத்தகத்தை மூன்று நாட்களில் படித்து முடித்தேன் அதன் தாக்கத்திலிருந்து இயல்பு நிலைக்கு வர எனக்கு ஒருவாரம் எடுத்தது. ஏறக் குறைய பித்துபிடித்த நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. வார்த்தைகளில் வருணிக்க முடியாத ஆனந்தத்திற்கு சென்று வந்தேன். அன்றிலிருந்து கல்கி என்றாலே ஒரு பீதி எனக்குள் தொற்றிக்கொள்ளும். அதன் பிறகு நிறைய புத்தக கண்காட்சிகளுக்கு சென்று வந்திருக்கிறேன். ஒரு வார பாதிப்பிற்கு பயந்து கல்கியை வாங்காமல் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

     பொன்னியின் செல்வன் நாவல் நான் படித்ததில்லை ஆனால் அதை படித்தவர்கள் கூறியிருக்கும் விமர்சணங்களை நிறைய படித்திருக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு மகளீர் கூட்டம் பொன்னியின் செல்வத்தில் சொல்லப்பட்ட இடங்களுக்கு சென்று தங்கள் அனுப்பவத்தை பகிர்ந்து கொண்ட வீடியோவை யூடிபில் பார்த்தேன். காலத்தை வென்று இன்றளவும் விற்பனையில் சாதனை படைக்கும் கல்கியின் நாவல்கள் சமூகத்தில் சாதரன மனிதர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை முழுதும் படிக்க எனக்கும் ஆசை தான் அந்த குறையை இயக்குநர் மணிரத்னம் போக்கியுள்ளார் என்றே கூறவேண்டும்.

 முதல் பாகம் பார்த்தவுடனேயே இரண்டாம் பாகத்தை கண்டிப்பா பார்த்தே ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். இம்மியளவும் சலிப்பை ஏற்படுத்தாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம் எதையும் குறைசொல்வதற்கில்லை குறிப்பாக சொல்வதென்றால் வசனம், இசை மற்றும் ஒளிப்பதிவு கிளாஸ். ஒரு சிக்கலான கதையை சுவாரசியம் குறையாமல் சொல்வது என்பது மிகவும் சவலான காரியம் அதில் படக்குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர். சோழ மன்னரின் வரலாறு தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வேண்டிய ஒன்று அதற்கு இந்த படம் ஒரு சிறந்த ஆவணம். கடும் பொருட் செலவையும் மிகுந்த உடல் உழைப்பையும் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் அனைத்து வகையிலும் மன நிறைவைத் தருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு சென்று நவீன தொழில்நுட்பத்தில் படத்தை பார்க்க முடிவு செய்திருக்கிறேன்.

அன்புடன்

தா. அருள்.