Tuesday, April 16, 2024

மனோ நிக்ரகமே ஆன்மீகத்தின் மேலான முடிவு


     Healing Power என்ற தலைப்பில் என். கணேசன் அவர்களுடைய வீடியோவை யூடிபில் பார்த்தேன். பார்த்தவுடன் ஆன்மீகத்தை பற்றிய என்னுடைய சந்தேகங்கள் முழுமையாக நீங்கிவிட்டன.

     ஆன்மீகம் ஆற்றல் (Energy) பற்றியும், மனிதனுடைய மனதை பற்றியும் பேசுகிறது. Electrical Energy, Wind Energy, Heat Energy போன்ற பலவகையான Energy பற்றி அறிவியலில் படிக்கிறோம். Energy-ஐ பார்க்க முடியாது ஆனால் உணர முடியும். உதாரணத்திற்கு காற்றை எப்படி நம் கண்களால் பார்க்க முடியாமல் உணர மட்டும் முடிகிறதோ அது மாதிரி ஆற்றலை உணர மட்டுமே முடியும்.

     இந்த உலகம் ஒரு பேராற்றலின் வெளிப்பாடு இதிலிருந்து பல உப ஆற்றல்கள் வெளிப்படுகின்றன. இயற்பியலில் Black hole (கருந்துளை) என்ற கருத்து உள்ளது. வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் ஆயுள் முடிந்தவுடன் அதில் உள்ள எல்லா ஆற்றல்களும் ஒன்று திரண்டுவிடும். அதனருகில் நாம் சென்றால் நம்மை இழுத்துக் கொள்ளும். ஆனால் வெறும் கண்களால் கருந்துளையை பார்க்க முடியாது. அதுபோல பேராற்றலை பார்க்க முடியாது உணர முடியும். இதற்கு ஆத்மா, கடவுள், பிரம்மம், இறைவன் என பல பெயர்களை வைத்து கூறுகின்றனர். இந்த பேராற்றலுக்கு உருவமோ, குணங்களோ எதுவும் கிடையாது. இருப்பு மாத்திரம் உண்டு நாம் ஆழ்ந்த தூக்கத்தில் உடல், மனம் என்கிற பிரஞ்ஞையற்று இருப்பு மாத்திரமாக உள்ளோம். விழிப்பு நிலையிலும் இதுபோல இருந்தால் ஆனந்தமாக இருக்கும். அதுதான் பிரம்மத்தின் நிலை. மனிதர்கள் இந்த நிலையில் பேராற்றலை உணர்ந்து கொள்ள முடியும் என்கின்றனர் இதுதான் ஆச்சரியம். இதற்கு மனதை சலனப்படாமல் நிச்சலனமாக சதா சர்வகாலமும் வைத்துகொள்ள வேண்டும். இதுதான் உபதேசம். இதுதான் ஆன்மீகம் கூறும் முடிவான கருத்து.

இரண்டு கேள்விகள் மனதில் எழலாம்

1. மனதை எப்பொழுதும் சலனமில்லாமல் வைத்துக் கொள்ளமுடியுமா?

2. பேராற்றலை உணர்ந்து கொள்வதினால் நமக்கு என்ன பயன்?

     முதல் கேள்விக்கு பதில் கண்டிப்பா முடியும். நீண்ட நாட்கள் பயிற்சி செய்வதன் மூலம் மனதை நிச்சலனமா வைத்துக் கொள்ள முடியும். இதற்கு விவேகம் மற்றும் வைராக்கியம் வேண்டும். விவேகம் என்றால் ஆத்ம விசாரம் என்று பொருள். இந்த உலகத்தில் நிலையானது எது? நிலையற்றது எது? என்பது பற்றிய விசாரம். பேராற்றலின் (கடவுள்) இருப்பு மட்டுமே நிலையானது. உண்மையானதும் கூட. அது தோன்றவும் இல்லை மறைய போவதும் இல்லை எப்பொழுதும் நிலையாக இருந்து கொண்டே (Infinite) இருப்பது. உலகத்தில் மற்றவை எல்லாம் தோன்றி மறையும் தன்மை கொண்டதாக உள்ளன. உடல், மனம், புலன்கள், உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாம் தோன்றி மறையும் தன்மை கொண்டதாக உள்ளன. நாம் நிலையில்லாதவைகளை நிலையானது (உண்மையானது) எனக் கருதிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இதுதான் பிரச்சினை.

     இதனால் பலவகைப்பட்ட விசயங்களில் ஈடுபட்டு மனதை எப்பொழுதும் சலனமாக வைத்துள்ளோம். நமக்கு ஆத்ம அநாத்ம விசயங்களில் விவேகம் வந்துவிட்டதென்றால் சலனம் படிப்படியாக குறைந்து நிச்சலன நிலையை அடைந்து விடுவோம். இதற்கு குருவின் துணையும் சத்சங்கத்தில் ஈடுபாடும் சாஸ்திரத்தின் மீது முழு நம்பிக்கையும் வேண்டும். இவ்வளவு இருந்தாலும் நிச்சலன நிலையை அடைய கொஞ்ச காலம் பிடிக்கும். ஆத்ம விசாரத்தை நிறுத்தாமல் நிச்சலன நிலையை அடையும் வரை தொடர்ந்து செய்வதற்கு வைராக்கியம் என்று பெயர்.

இதனால் என்ன பயன்

     முதல் பயன் எப்பொழுது சந்தோசமாக மனச்சோர்வின்றி உற்சாகமாக வாழமுடியும். உற்சாகமான மனநிலையில் மனதை நிச்சலனமாக வைத்து செய்யப்படும் எந்த ஒரு வேலையும் மிக நேர்த்தியாக முடியும். நோய் நொடிகள் நமக்கு வராது. அறிவியல் சொல்கிறது உடலிற்கும் மனதிற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது என்று (Direct Relationship) ஒன்று பழுதானால் மற்றொன்றும் பாதிக்கப்படும். சலனத்திலிருந்து நிச்சலனத்திற்கு சென்றுவிட்டால் பேராற்றல் நமக்குள்ளே உறையும் என்கின்றனர். இதனால் சக்தி மிகுந்தவர்களாக மாறிவிடுவோம். அடுத்தவர்களின் நோய்களை குணப்படுத்த முடியும். எதிர்காலத்தை பற்றி அறிய முடியும், தொலைவில் உணர்தல் (Telepathy) போன்ற சித்திகள் வாய்க்கப் பெறுவோம். மேலும் பல சித்திகள் (ஆற்றல்கள்) நமக்கு கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.

     இவ்வளவு இருந்தாலும் நமது மரணத்தை தடுக்க முடியாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் நிச்சலனமா இருக்கிறபோது இறை ஆற்றலுடன் ஒன்றினைந்து இருப்போம் இருந்தாலும் அண்ணமய கோசம் என்று சொல்லக்கூடிய உணவினால் உண்டான இந்த மாமிச உடல் அழியக்கூடியதே. இதுவே இறைவனின் படைப்பு. ஆனால் நமது ஆன்மா என்று சொல்லக்கூடிய ஆதார ஆற்றலுக்கு அழிவில்லை. உலக இன்பங்கள் நிலையில்லாதவை தோன்றி மறையக்கூடிய தன்மை கொண்டவை என்கிற அனுபவத்தை பெறுவதற்காக இந்த உடல் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 வந்த வேலையை (இறைவனை உணர்தல்) பார்ப்பதற்காக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாடகை வீடே நமது உடல். இது கால எல்லைக்கு உட்பட்டது. உடல் அழியும் முன் இறைவனை உணர முயற்சி செய்து வெற்றியடைவதே வாழ்க்கையின் நோக்கம். உயரிய நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த உடலை வைத்துக் கொண்டு என்னவெல்லாமோ செய்து இன்ப துன்ப இரட்டைகளில் சிக்கி மன சலனத்துடன் வாழ்வது அறியாமை.

இறை உணர்தல் தான் இறுதி இலக்கு ஒரு ஜீவனுக்கு அது வாய்க்கப்பெறும் வரையில் பிறவி சுழற்சி இருந்து கொண்டே இருக்கும் என வேதம் கூறுகிறது. ஏனெனில் உலக வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவங்கள், நிறைவேறாத ஆசைகள் நமது சித்தத்தில் பதிந்துள்ளது. ஆசைகளை பூர்த்தி செய்து அனுபவத்தைபெற பிறப்பு கொடுக்கப்படுகிறது.

நன்றாக யோசித்து பாருங்கள் மனிதனுடைய ஆசைக்கு முடிவு உண்டா என்று. ஒரு ஆசை மனதில் தோன்றினால் அது நிறைவேற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ; என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறோம். அந்த ஆசை நிறைவேறியவுடன் அடுத்த ஆசையை நோக்கி பயணிக்கிறோம். ஆசைக்கு ஏது எல்லை. மனித ஆசைகள் ஒருபோதும் முற்றுபொறாது என்றாலும். இதில் சிக்கிக் கொண்டு பிறவிகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அறியாமை நீங்கி அறிவு நிலைபெற்றால் தான் இந்த சுழற்சி நீங்கும். ஆசையே துன்பத்திற்கு காரணம்.

     என். கணேசனுடைய வீடியோவை பார்த்து நான் தெளிந்து கொண்டதை கூறுகிறேன். வேதம் கூறுகிறது இறையாற்றல் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்று அப்படி இருக்கையில் இறை உணர்தல் ஏன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நடைமுறை வாழ்க்கையில் இயல்பாக மனதை நிச்சலனமாக வைத்துக்கொள்ளவும் முடிவதில்லை. இது ஒரு முரண். அமெரிக்காவில் உள்ள கார்னிவெல் பல்கலைக் கழகத்தில் இது சம்மந்தமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு நபர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். ஒருவர் பயிற்சியின் மூலம் மனதை நிச்சலனமாக வைத்துள்ளவர். மற்றொருவர் நம்மை போன்ற சாதாரண மனிதர். இருவரிடமும் ரசாயணம் கலந்த தண்ணீர் குடுவையை (நுண்கிருமிகள் கொள்ளப்பட்டு) இருவரிடமும் கொடுத்து அரைமணி நேரம் தங்களது இரு கைகளுக்குமிடையில் வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். அரைமணி நேரம் கழித்து குடுவையை சோதனைச் சாலையில் வைத்து ஆய்வு செய்து பார்த்ததில் மனதை நிச்சலனமாக வைத்திருந்த நபரின் குடுவையில் நுண்கிருமிகள் மீண்டும் உயிர்பெற்றிருப்பதையும் சாதாரண நபரிடம் கொடுத்த குடுவையில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. மேலும் மன நிச்சலனத்துடன் இருக்கும் நபர் தொடுதலின் மூலம் கேன்சர் செல்கள் குணமாவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கணேசன் வீடியோவில் கூறினார். கண்டிப்பாக அவர் பொய் கூறவில்லை. இதனை சரிபார்த்துக் கொள்ள நமக்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

நான் கடந்த ஐந்து வருடங்களாக ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டு உபநிஷத், பகவத் கீதை, பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் ஆதி சங்கருடைய பிரகரண கிரந்தங்களை ஆழமாக படித்தேன். மேலும் என் சத்குருநாதர் பிரம்ம ஸ்ரீ க.மணி அவர்களின் சத்சங்கத்தில் தவறாது கலந்துகொண்டேன். மேலும், பிரம்ம ஸ்ரீ நொச்சூர் வெங்கடராமன், பிரம்ம ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், பிரம்ம ஸ்ரீ மணி டிராவிட், பிரம்ம ஸ்ரீ இராம சுப்பிரமணியன் போன்றோரின் சத்சங்கத்தையும் யூடியூபில் அதிகம் பார்த்துள்ளேன். எனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால் புனித நூல்கள் அனைத்தும் மனோ நிக்ரகத்தையே முடிவாக கொண்டுள்ளன என்பதுவே.

இவ்வளவு நாள் வேறு வேறு விதமாக பிரம்மத்தைப் பற்றிய விளக்கங்களை கேட்ட எனக்கு எங்கும் எதிலும் இருக்கும் பிரம்மத்தை சலனப்பட்ட மனதிலும் உணர முடியும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் ஆதார தன்மையில் நாம் பிரம்ம்மாக இருந்தாலும் மனோ நிக்ரகமின்றி இறை உணர்தல் சாத்தியமே இல்லை என கணேசன் அவர்களின் வீடியோவை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்.

நான் ஒரு அறிவியல் மாணவன் சோதனைகள் மூலமாகவும் பிரத்யட்சமாக (நேரில்) பார்ப்பதின் மூலமாகவும் என்னால் எதையும் ஆழமாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆன்மீகத்தில் இன்னும் அதிகம் நாட்டம் கொள்ளவும் முனைப்புடன் மனோ நிக்ரகத்திற்காக ஆத்ம விசாரம் செய்யவும் இந்த வீடியோ அதிக நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

பகவத்கீதை முழுவதும் யோக வாழ்க்கையை கடைபிடிக்க வலியுறுத்துகிறது. யோகம் என்றால் இணைதல் அல்லது லயப்படுதல் என்று பொருள். ஜீவாத்மாவும் (மனது) பரமாத்மாவும் (இறைசக்தி) எப்பொழும் ஒன்றாக இணைந்திருத்தலுக்கு யோகம் என்று பெயர். யோக நெறியில் நின்று தொழில் புரி. இதுவே கீதையின் சாரம். இன்பமும் துன்பமும் நீயே ஏற்படுத்திக் கொண்டவை. ஆனால் இவை வெளி பொருட்களின் மூலம் தான் கிடைக்கின்றது என்ற கற்பனை உன்னிடத்தில் உள்ளது. இவைகளே ஆசை மற்றும் மோகத்திற்கு அடிப்படை காரணம். ஆசைகள் மனிதனிடத்தில் பேரழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் கர்மங்களில் (செயல்களில்) ஈடுபட்டு சிக்கலில் (மன உலச்சலில்) மாட்டிக் கொள்கிறோம். செயல்கள் செய்யாமல் வாழ முடியாது. ஆனால் பலனை எதிர்பார்க்காமல் கர்மங்களை செய்ய முடியும். ஜீவாத்மாவும், பரமாத்மாவும் அடிப்படையில் ஒன்றே. இத்தத்துவத்தை புரிந்து கொண்டு மனதை ஆத்மாவிடம் ஒப்படைத்துவிட்டு சலனமில்லாமல் அமைதியாக இரு என்பதுவே கருத்து.

இந்த உலகத்தில் மதிப்பு மிக்கது பொண்ணோ, பொருளோ, பணமோ, புகழோ கிடையாது. மன நிம்மதிக்கு (நிச்சலனத்திற்கு) ஈடு இணை எதுவும் இல்லை. பயிற்சியின் மூலம் படிப்படியாக மன நிச்சலனத்தை கொண்டு வருவதே எல்லோருடைய நோக்கமாக இருக்க வேண்டும் இதைத்தான் உண்மையான ஆன்மீகம் கூறுகிறது. இந்நிலையை அடைய அதிக காலம் ஆகலாம். பொறுமையும் விடாமுயற்சியும் தத்துவத்தில் நம்பிக்கையும் இருந்தால் இலக்கை அடைவது சுலபம்.

 

 

பின்குறிப்பு:

     இந்த உலகம் நேர்மறை சிந்தனைகளால் ஆக்கப்பட்டுள்ளது. யத் பாவம் தத் பவதி (நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய்) இந்த இரண்டு கருத்தும் ஆழம் மிகுந்தவை. அடிக்கடி நினைவுகூறத்தக்கவை.