Wednesday, February 27, 2019

எழுத்தும் ஒரு கலைதானே…

கொஞ்ச வருடங்களுக்கு முன் நான் கல்லூரியில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து கொண்டிருக்கும் போது ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருந்தது ஆனால் எப்படி எழுதுவதென்று தெரியாது. எப்பொழுது என்னுடைய பேராசிரியரை சந்திக்க சென்றாலும் அடிக்கடி வைக்கும் வேண்டுகோள் எனக்கும் கட்டுரைகள் எழுத சொல்லி கொடுங்கள் என்பதுவே. என்னுடைய ஆர்வத்தை பார்த்த அவர் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுத நாம் முதலில் குறிப்பிட்ட ஒரு விசயத்தை எடுத்துகொண்டு அதன் முடிவுகள் எப்படி வரவேண்டும் மென்ற கருதுகோளுடன் நிறைய சோதனைகள் செய்து பார்க்க வேண்டும். தரவுகள் சேகரிக்க வேண்டும் பின்பு பகுப்பாய்வு செய்து பெற்ற முடிவுகளை தான் கட்டுரையாக எழுதவேண்டும் எழுதவும் முடியும் அதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும் உடனே செய்யக்கூடிய காரியம் இல்லை என்று கூறினார். மேலும் நிறைய கட்டுரைகள் எழுதினால் தான் இது பழக்கத்திற்கு வரும் பொருமை அவசியம் என்றார். ஆனாலும் உன்னுடைய ஆர்வத்திற்கு நான் ஒன்று கூறுகிறேன் கட்டுரைகளிலேயே பலவிதங்கள் உள்ளன  தமிழில் கூட கட்டுரைகள் எழுதலாம் ஆரம்ப நாட்களில் நானும் தமிழில் எழுதியிருக்கிறேன் இதை என் அறிவுறையாக வைத்துகொள் என்றார். இதை கேட்டவுடன் எனக்குள் மின்னல் பாய்ந்தது போல் ஒரு உணர்ச்சி ஏற்பட்டு  இது நள்ள ஐடியாவா இருக்கே முயற்சி செய்து பார்போம் என்று ஆரம்பித்தேன்  

எழுதுவதென்று தீர்மானித்தவுடன் எனக்குள் உதித்த அடுத்த சந்தேகம் எதைப்பற்றி எழுதுவது என்பதாக இருந்தது. பல தலைப்புகள் யோசித்து இறுதியாக நானோ தொழில்நுட்பத்தை பற்றி எழுதலாம் என்று முடிவுக்கு வந்தேன் காரணம் சிறிது காலம் நானோ தொழில்நுட்ப்பத்துறையில் வேலை பார்த்ததினால் அதைப்பற்றி கொஞ்சம் பரிட்சயம் இருந்தது மேலும் சமீபகாலமாக இத்துறை அனைவராலும் பெரிதும் பேசப்படுவதினால் கட்டுரையை சுலபமாக எதாவது ஒரு இதழில் பிரசுரித்துவிடலாம் என்ற எண்ணமும் நானோவைப் பற்றி எழுத தூண்டியது. தலைப்பு முடிவானதும் எழுத உட்காருகையில் எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது, ஒரு பத்தியில் எவ்வளவு சொல்ல வேண்டும் எதைச் சொல்லவேண்டும் என்ற அடுத்தடுத்த பிரச்சினைகள் வரத்துவங்கின. முதன் முதலில் மூன்று மணி நேரம் தொடர்ந்து சிந்தித்து ஒரு பத்து வரிகூட எழுத முடியவில்லை எழுதியதை படித்தால் எனக்கே அது பிடிக்கவில்லை மூளை சூடானதுதான் மிச்சம்.
ஒரு கட்டத்தில் நான் உணர்ந்தேன் எழுதுவது அவ்வளவு சுலபமல்ல என்று. ஆனாலும் முயற்சியை கைவிடவில்லை. எழுத்தின் மீதிருந்த ஆர்வம் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி எனது முதல் கட்டுரையை முடித்தேன் இதற்குள் ஒருமாதம் முடிவடைந்திருந்தது. சூப்பரா இல்லாவிட்டாலும் சுமார இருக்கு என்பது என் மதிப்பீடு. எனது ஆசிரியரிடம் கொடுத்து நிறை குறைகளை திருத்தி கொடுங்கள் என்று கேட்டேன். அவரும் உடனே படித்துவிட்டு சின்ன சின்ன தவறுகளை மட்டும் சுட்டிகாட்டிவிட்டு இது போதும் தம்பி எதாவது ஒரு இதழுக்கு அனுப்பிவிடு அதிக நேரத்தை இதற்காக செலவிடாதே ஆராய்ச்சியில் கவணம் செலுத்து என்று கூறிவிட்டார். மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி அவர் கூறியவாரே கலைக்கதிர் அறிவியல் மாத இதழுக்கு என்னுடைய முதல் தமிழ் கட்டுரையை அனுப்பி வைத்தேன். இது எங்கே பிரசுரமாக போகிறது என்ற நினைப்பில் தான் அனுப்பினேன். அடுத்த இதழிலேயே என்னுடைய கட்டுரையை பிரசுரித்திருந்தார்கள்.

அதற்குபின் எனக்கு ஆர்வம் இன்னும் அதிகமாகியது எழுதுவது கடினமான செயல் ஆனாலும் ஆத்ம திருப்தியை தருகிறது இதை விடக்கூடாது என்று முடிவெடுத்து பயிற்சிக்காக தினமும் காலையிலிருந்து இரவுவரை நடந்தவைகளை கேர்வையாக ஒரு நோட்டில் டைரி எழுதுவது போல் எழுத ஆரம்பித்தேன். தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர்களை படிக்கவும் செய்தேன். புத்தக வாசிப்பு, வலைதளங்களில் வாசிப்பது என்று தொடர்ந்து செய்ய ஆரம்பித்தவுடன் எழுதுவது ஒரளவிற்கு படிக்கும் படியாக இருப்பது உணர முடிகிறது. படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள நிறைய எழுதி எழுதி பயிற்சி செய்ய வேண்டும். இதுவரையில் நான்கு நோட்டுகள் எழுதி தீர்த்துவிட்டேன். இப்பொழுது அவைகளை படித்து பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

எழுத்தும் ஒரு கலை தானே அதை வளர்த்துக்கொள்ள இன்னும் ஆசை அதிகமாகிவிட்டது. பொதுவெளியில் எழுதுவது நிறைய நண்பர்களையும் ஆரோக்கியமான விமர்சனங்களையும் பொற்றுத்தரும் என்பதால் என் வீட்டு நோட்டு புத்தகத்திலிருந்து இங்கே வந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்து பார்த்துவிட்டு நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 


Sunday, February 17, 2019

நல் ஆசிரியர்...


அறிவியல் என்பது எல்லோருக்குமானது அல்ல என்று நான் எண்ணிக்கொண்டிருந்த காலங்கள் உண்டு. காரணம் அதை படித்தால் புரிவதில்லை. பரிட்சையிலும் அதிக மதிப்பெண்கள் வருவதில்லை ஆகவே நமக்கு அறிவியல் வராது என்பது என் அனுமானம். ஆனால் அறிவியலை புரிந்து கொள்வது எளிது என்பதை எனக்கு புரியவைத்த ஆசான் பேராசிரியர் க. மணி அவர்கள். நான் இளநிலை பொறியியல் படித்து முடித்தவுடன் மேற்படிப்புக்கு போனால் ஐஐடிக்குத்தான் போகவேண்டுமென்ற எண்ணம் இருந்தது. நாளாக நாளாக அது தீவிர ஆசையாக மாறி என்னை GATE Exam எழுதும் அளவிற்கு கொண்டுபோய் விட்டது. தொடர்ந்து ஆறு முறை எழுதினேன் ஒரு முறை கூட என்னால் குறைந்தபட்ச மதிப்பெண்களை கூட பெறமுடியவில்லை. பரிட்சை என்றாலே மன்ப்பாடம் செய்து எழுதுவதுதானே நமது கல்விமுறை பின்பற்றிவரும் தொன்று தொட்ட பழக்கம். ஆரம்ப கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை அரசு பள்ளிகளில் படித்த எனக்கும் மனப்பாடம் செய்து பரிட்சை எழுதுவதே பழக்கமாகியிருந்தது. புரிந்து கொண்டு தர்கரீதியாக சிந்திக்கும் திறன் இல்லாத்தினால் ஆறு முயற்சிகள் செய்தும் GATE Exam வெற்றி சாத்தியப்படவில்லை. அந்த காலங்கலில் அடிப்படை அறிவியலை தெரிந்துகொள்ளும் நோக்கில் தமிழில் அறிவியல் சம்பந்தப்பட்ட தகவல்கள் ஏதேனும் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தேன், எதேச்சயாக ஒரு நாள் கோயமுத்துர் ஞானவானி பண்பலையில் அறிவியல் நேரம் நிகழ்ச்சியை கேட்க நேர்ந்தது. அதில் பேராசிரியர் க.மணி அவர்கள் தொலைபேசியில் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கேட்டவுடனேயே இவ்வளவு நாள் இந்த நிகழ்ச்சியை கேட்காமல் விட்டு விட்டோமே என்ற எண்ணமும், இதுதான் இவ்வளவு நாள் நான் தேடிக்கொண்டிருந்த புதையல் என்ற எண்ணமும் தோன்றியது. தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை கேட்க ஆரம்பித்தேன் அறிவியலை இவ்வளவு எளிமையாக நடைமுறை உதாரணங்களுடன் விளக்கமுடியும் என்பதை நிருபிக்கும் விதமாக அந்த நிகழ்ச்சி இருந்தது. 2008-லிருந்து 2012 வரை நான்குவருடங்கள் தொடர்ந்து அறிவியல் நேரம் நிகழ்ச்சி கேட்டதின் விளைவாக எனக்குள் சில மாற்றங்கள் உருவாக ஆரம்பித்ததை உணர ஆரம்பித்தேன் அறிவியல் மீதான ஆர்வமும் மரியாதையும் ஏற்பட்டது. நிறைய அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் அறிமுகமாகியிருந்தன குறிப்பாக Stephen hawking எழுதிய Brief history of time, Richard Feynman எழுதிய surely you are joking, Erwin Schrodinger எழுதிய what is life போன்றவைகளை சொல்லலாம்.

ஒரு கால கட்டத்தில் சார்லஸ் டார்வினும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் என் நெருங்கிய நன்பர்கள் போல் தெரிய ஆரம்பித்தார்கள் ஐசக் நியூட்டனைப்போல் நம்மால் ஏன் சிந்திக்க முடிவதில்லை எனவும் சீரினிவாச ராமானுஜத்தை பற்றி ஏன் இவ்வளவு நாள் தெரிந்து கொள்ளவில்லை எனவும் தோன்ற ஆரம்பித்தது. ஏனெனில் எந்த துறைகளில் கேள்விகள் கேட்கப்பட்டாலும் தெளிவான விளக்கத்தை பேராசிரியர் அவர்களால் கொடுக்க முடிந்ததே இதற்கு காரணம். ஒரு நிகழ்ச்சியில் அவர் இப்படி சொன்னார் எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் உங்களால் எப்படி எல்லா விசயத்தை பற்றியும் விளக்கம் அளிக்க முடிகிறது என்று அவர்களுக்கு நான் கூறும் பதில் ”என்னைப்போல் ஆவது ஒன்றும் பொரிய காரியமில்லை சிறுவயது முதல் அறிவியல் சார்ந்த விசயங்களை தெரிந்து கொள்ளும் பேரார்வம் இருந்தது அதனால் நிறைய படித்து தொரிந்து கொண்டேன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம், அறிவியல் கட்டுரைகள் அதிகம் எழுதியது இவைகள் தான் இதற்கு காரணம். கலைக்கதிர் அறிவியல் மாத இதழுக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த போது தமிழில் அறிவியல் கட்டுரைகள் அதிகம் எழுதியதும் ஒரு காரணம் என்று பதிலலித்தார்” ஞானவானி பண்பலை ஒலிபரப்பு 2012 வாக்கில் நிறுத்தப்பட்டது என்னை போன்றவர்களுக்கு பேரதிர்சியாக இருந்தது. மணிசாருடைய பேச்சை இனிமேல் கேட்க முடியாதே என்று.

நான் entropy, absolute temperature, nanotechnology, quantum physics, cosmology, evolution, gene, relativity theory, schrodinger cat, black hole, god particle, human brain போன்றவைகளைப் பற்றி தெளிவாக புரிந்து கொண்டது மணி சார் அவர்களின் பேச்சை கேட்டபின்புதான். ஞானவானி பண்பலை நிறுத்தப்பட்டவுடன் என்னைப்போன்ற நேயர்கள் அன்பாக கேட்டுக்கொண்டதன் பேரில் ஞானவானி சங்கமம் என்ற பெயரில் மாத மாதம் தொடர்ந்து சொற்பொழிவுகள் செய்துவருகிறார். அறிவியல் மட்டுமில்லாமல் ஆன்மீகம் பற்றியும் ஆழ்ந்த ஞானம் அய்யா அவர்களுக்கு உண்டு மனித மனம், மறுபிறவி பற்றியெல்லாம் நிறை விளக்கங்கள் அளித்திருக்கிறார். இதுவரைக்கும் என்பதுக்கும் மேலான புத்தகங்கள் எழுதியிருக்கிறார். குறிப்பாக மனித ஜினோம், ஜீன் புரட்சி, மூளைக்கும் அப்பால், மனிதன் தோன்றியது எப்படி, அணுத்துகள், பரிணாம தச்சன், சார்ப்பியல் கோட்பாடு, காலம், தத்வபோதம், நான் உலகம் கடவுள், பதஞ்சலி யோகசூத்திரம் ஆகியவைகளைச் சொல்வேன்.
 
நான் இன்று முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி கட்டுரைகள் பிரசுரிக்கும் அளவிற்கு முன்னேறியதற்கு ஆதார உந்து சக்தி மணி அய்யா அவர்கள். ஒரு நல்லாசிரியர் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவரைப்போன்று தமிழ்ச் சமுதாயத்தில் அனைத்து ஆசிரியர்களும் இருந்தால் திறமையான நிறைய மாணவர்கள் உருவாகுவார்கள் என்பது மட்டும் திண்ணம்.
பின் குறிப்பு: பேராசிரியர் க.மணி அவர்களுடைய உரைகள் youtube-ல் காணக்கிடைக்கின்றன விருப்பமுல்லவர்கள் சென்று பார்க்கலாம். உங்களுடைய சந்தேகங்களை அவரிடமும் கேட்கலாம்.  


Monday, January 15, 2018

எழுத்தாளர் ஞாநி மறைந்தார்…


   
    

      நான் மிகவும் மதிக்கக்கூடிய எழுத்தாளர்கலுள் ஒருவரான ஞாநி அவர்கள் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை மிகவும் வாட்டுகிறது. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவரைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறேன். எந்த ஒரு சமூக பிரச்சினையையும் வேறு வித கோணங்களில் அனுகக்கூடியவர். தனக்கு சரி என பட்ட கருத்துக்களை எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் வெளிப்படையாக முன்வைக்கக்கூடியவர். பாரதி மீது தீராத காதலும் தந்தை பொரியாரின் மீது மிகுந்த மரியாதையையும் வைத்திருந்தவர். ஞாநி அவர்களின் இறப்பு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

Monday, January 1, 2018

புத்தாண்டு பிறந்தது (2018) வருடா வருடம் கடந்து செல்வதைப்போல இந்த வருடம் இந்நாளை கடந்து செல்ல ஏனோ மனம் மறுக்கிறது. ஒரு வேலை வயது கூட ஒரு காரணமாக இருக்கலாம். எல்லோரும் நினைத்து பார்ப்பது போல சென்ற வருடம் நாம் என்ன செய்தோம் என்ற நினைப்பும் இதற்கு ஒரு காரணம். மற்றொன்று நிறைய விசயங்கள் செய்து முடிக்க வேண்டும் என்று பட்டியலிட்டு சிலவற்றை செய்யமுடியாமல் போனதுவும் இவ்வாறு யோசிக்க வைக்கின்றது.

  என்னை பொறுத்தவரையில் 2017 ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. என்னைப்பற்றின சுயமதிப்பீடு செய்து கொள்ள இவ்வருடம் எனக்கு உதவியது. என்னுடைய பலம் மற்றும் பலகீனம் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆராய்ச்சி பற்றின அறிவு கொஞ்சமும், கணித துறைகள் குறிப்பாக புள்ளியல், இயற்கணிதம் மற்றும் நுண்கணிதம் ஆகிய துறைகளில் எனது புரிதல் கொஞ்சமும் மேம்பட்டு இருப்பதாக உணர்கிறேன். அறிவியல் சம்பந்தமாக டாக்குமண்டரி படங்கள் அதிகமாக சேகரித்து எல்லாவற்றையும் முழுவதுமாக பார்த்தேன். எலக்ட்ரானிக்ஸ் துறைப் பற்றின அடிப்படை விசயங்கள் சிலவற்றை புரிந்து கொண்டு புதிய கருவி ஒன்றை உருவாக்கினேன். நான்கு புத்தக கண்காட்சிகளுக்கு சென்று கொஞ்சம் புத்தகங்கள் வாங்கி சேகரித்தேன். இவைகள் எல்லாம் புதிதாக ஆரம்பித்து செய்த வேலைகள்.

 சில விசயங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தது அதாவது கட்டுரைகள் எழுதுவது, பாட சம்பந்தமில்லாத புத்தகங்கள் அதிகம் வாசிப்பது, ரேடியோ உரைகள் நிகழ்த்துவது போன்றவகைகள் 2017-ல் முற்றிலும் நின்றுவிட்டது. இது வருத்தமளிக்க கூடிய செய்தி. புதிய வருடம் மீண்டும் இதற்கான வழிகளை திறந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  

இந்த வருடம் (2018) நான் செய்ய வேண்டும் என்று நினைப்பவைகள் இவை

1. வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்து முடிப்பது

2. கணினி மொழி எதாவது ஒன்றை கற்றுக்கொள்ளவது அது சி அல்லது சி++ ஆக இருந்தால மிகவும் நலம்

3. அறிவியல் சம்பந்தமாக தமிழில் புத்தகம் ஒன்றை எழுதுவது

4. ஒத்த கருத்துடைய புதிய நண்பர்களை கண்டறிவது

5. மூன்று ஆராய்ச்சி கட்டுரைகளாவது பிரசுரிப்பது.

இவையில்லாமல் நேர்மறை எண்ணங்களை அதிகம் வளர்த்துக் கொள்வது, எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் விளகியிருப்பது, பலமாக கருதும் விசயங்களில் அதிக கவனத்தை செலுத்துவது. என்று ஒரு பட்டியலே மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. முடிந்தவரை மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு அனைவரிடமும் அன்புபாராட்டி இந்த வருடத்தை எதிர் கொள்ள வேண்டும் என்பதுவும் புதிய வருடத்தின் எதிர்பார்புகள். சென்ற வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இப்புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்.
தா. அருள்