Monday, December 29, 2014

மனித நோய்கள் புத்தக விமர்சனம்


(நான் சமீபத்தில் மதிப்புரை செய்து மதிப்புரை.காம் வலைதளத்தில் வெளியகியிருக்கும் எனது கட்டுரையின் மீள் பிரசுரம்) 

அறிவியல் சார்ந்த நூல்கள் படிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும், அந்தவகையில் சமீபத்தில் நான் படித்த புத்தகம் ”மனித நோய்கள், உயிர் வேதியல் பார்வை”. மருத்துவர் அருள்செங்கோர் எழுதிய இந்நூல் தமிழ்க்கோட்டம் வெளியீடாக வந்துள்ளது. அறிவியல் சார்ந்த புத்தகம் எழுதுவதில் இருக்கும் மிகப் பெரிய சிக்கல்கள் என்னவென்றால் கலைச் சொற்களைக் கையால்வது. பெரும்பாலான அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் இல்லாத காரணத்தால் சுவாரசியமான மொழி நடையில், தமிழில் அறிவியல்  புத்தகங்கள் மிகவும் குறைவாகவே வெளிவந்துள்ளன. மேலும், ஆழமான அறிவியல் கருத்துக்களை விளக்கும் தமிழ் புத்தகங்களும் சொர்ப்ப அளவே உள்ளன என்ற ஏக்கத்துடன் இப்புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். புதிய தகவல்கள் பலவற்றை தெரிந்து கொண்ட திருப்தியை தந்தது.  துறைசாரதவர்களும் படித்து தெரிந்து கொள்ள செய்யப்பட்டிருக்கும் முயற்சி பாராட்டுக்குறியது. 

மொத்தமாக இருபத்தாறு தலைப்புகளில், மனிதனுக்கு ஏற்படக்கூடிய நோய்களை பற்றிய அறிமுகமும், அவை ஏன், எப்படி ஏற்படுகின்றன என்ற காரணங்களையும், ஒரு சில நோய்களுக்கு தடுப்பு முறைகளையும் அறிமுகப் படுத்துகிறது இந்நூல். இரத்தப் பரிசோதனை முதல் முதுமை வரையிலான விசயங்கள் சுலபமாக அனைவருக்கும் புரிந்திடக்கூடிய வகையில் எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது இதன் பலம். திருநர் பற்றிய கட்டுரை மிக முக்கியமான பதிவு என்றுதான் சொல்ல வேண்டும். நம் சமுதாயத்தில் திருநர்கள் நடத்தப்படும் விதம் மிகவும் கொடூரமானது. பெற்றோர்களே தன்னை வீட்டில் சேர்த்து கொள்ள மறுக்கிறார்கள் என்று எனது இரயில் பயணத்தின் போது ஒரு திருநங்கை என்னிடம் கூறினார் மணமுதிர்ச்சி அடைய இம்மாதிரியான அறிவியல் விளக்கங்கள் அதிகமாகப் பதியப்பட வேண்டும்.

இன்று நம்மிடைய மிகவும் பரவலாக அச்சுருத்திக் கொண்டிருக்கும் மாரடைப்பு, புற்றுநோய், குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் சிறுநீரகக் கல் போன்ற நோய்கள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு விதமான நோய்களைப் பற்றி விளக்குவதால் புத்தகத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் படிக்கலாம். 

பிற்ச்சேர்கையாக கலைச் சொல் அட்டவனை இணைப்பு, வார்த்தைகளுக்கு தவறான அர்த்தங்களை கற்பிதம் செய்துவிடாமலிருக்க செய்யப்பட்டிருக்கும் ஒரு நல்ல முயற்சி. மேலும், சொல்லப்பட்டிருக்கும் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் விதமாக தக்க சான்றுகள் இணைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குறியது. ஆங்காங்கே சில இடங்களில் ஆங்கில மூலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பது நெருடலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. படங்கள் அப்படியே வலைதளங்களிலிருந்து எடுத்தாளப்பட்டிருப்பது தவிர்த்து, தமிழ் விளக்கங்களுடன் மறுஆக்கமோ அல்லது புதிதாக விளக்கப் படங்களை உருவாக்கி சேர்த்திருக்கலம். புத்தகத்தின் பொழிவை சிதைக்காமல் இருந்திருக்கும். சில இடங்களில் பாடப்புத்தகத்தை படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இவற்றை தவிர்க்க, சிறு உதாரணங்களுடனும், சிறிய சம்பவங்களின் மூலமும் விளக்கியிருந்தால் சொல்லவரும் விசயத்தை பற்றின புரிதலை அதிகப்படுத்தியிருக்கும். 

புத்தகத்தின் முன்பகுதியில் உள்ள ”என் நன்றி உரை”யில் எழுதப்பட்டுள்ள சுய புராண சமாச்சாரங்கள் கொஞ்சம் ஓவராகப்படுகிறது. தான் எங்கு பிறந்தேன், எந்த தெருவில் குடி பெயர்ந்தேன், அந்த சம்பவம் எந்த நாளில் நடந்தது என்று வாழ்கை வரலாறு என்ற தலைப்பில் எழுதப்பட வேண்டிய விசயங்களை மிகவும் விரிவாக சொல்லியிருப்பதை தவிர்த்து புத்தகத்தின் நோக்கம், உருவான விதம், எழுதும் போது ஏற்பட்ட அனுபங்களை பகிர்ந்திருக்கலாம். ஏனெனில், மனித நோய்கள் பற்றி எழுத்தப்பட்டிருக்கும் இப்புத்தகத்தை பற்றின சிறு குறிப்பை கூட அதில் காணவில்லை. 
  
மனித நோய்களை மிக நெருக்கமாக அறிமுகப்படுத்தியிருக்கும் இப்புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. இது நமக்காக, நம்மைபற்றி நாமே புரிந்துகொள்ள தமிழில் எழுதப்பட்ட ஒரு ஆவணம். 


                                             -தா. அருள் செல்வம் 



நன்றி: மதிப்புரை.காம்

சுட்டி இங்கே: http://mathippurai.com/2014/12/24/manidha-noigal/  
 

Saturday, December 27, 2014

அறிவியல் அறிவோம்



   தமிழில் அறிவியல் தகவல்களை எனக்கு தெரிந்த அளவிலே சிறு சிறு நடைமுறை உதாரணங்களுடன் தரும் நோக்கில், ”அறிவியல் அறிவோம்” என்ற புதிய நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக சமூதாய பன்பலை வானொலியில் (107.4 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை) செய்து வருகிறேன். இது வாரம் தோறும் திங்களன்று ஒலிபரப்பு செய்யப்படுகின்றது. பன்பலை ஒலிபரப்பு கோயமுத்தூர் பகுதிகளில் மட்டும் கேட்கும் என்பதால் மற்ற ஊர்களுக்கும், உலகலாவிய தமிழ் மக்களுக்கும் வேளாண், அறிவியல் மற்றும் சமூதாய விழிப்புணர்வு செய்திகளை கொண்டு சேர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக வலைதளத்திலும் ஒலிபரப்பு செய்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் இதுவரை ஒலிபரப்பப்பட்டிருக்கும் எந்த நிகழ்ச்சியையும் கேட்கமுடியும்.

    வேளாண்மை சார்ந்த தகவல்கள், சமூதாய முன்னேற்ற செய்திகளை பாமர மக்களுக்கு கொண்டு சேர்பதில் சமூதாய வானொலி முக்கிய பங்கு வகிக்கிறது அந்த வகையில் அடியேனின் நிகழ்ச்சியையும் மனமுவந்து சிரமங்களை பாராமல் ஒலிபரப்பும்  நிர்வாகத்தினருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மேலும் கேட்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடக்கூடாதென என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுதான் இதுவரைக்கும் வந்த எல்லா நிகழ்ச்சியையும் வழங்கியுள்ளேன். ஆகையால் இவன் பேச்சையெல்லாம் கேட்க வேண்டுமா என்று இதை படிப்பவர்கள் நினைக்காமல் கீழ்காணும் வலைதளத்திற்கு சென்று ஒரு முறை கேளுங்கள் ஏதேனும் புதிய செய்தி கண்டிப்பாக அதில் இருக்கும். அப்படி இல்லையெனில் தெரிந்த விசயங்களை நினைவு படுத்தி பார்க்க உதவும்.

    ஒருவேளை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் பராவாயில்லை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு, பள்ளி குழந்தைகளுக்கு பரிந்துரை செய்யலாம். பாட புத்தகமல்லாத இவ்வறிவியல் விசயங்கள் அவர்களின் அறிவை மேம்படுத்திட உதவும். வரும் நாட்களில் அதிக நிகழ்ச்சிகள் தர ஆர்வம்  உள்ளது. காலம் அதற்கு ஒத்துளைக்கும் என நம்புகிறேன். இந்நிகழ்ச்சியினைப் பற்றிய தங்களின் மேலான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

இதுவரை வந்த நிகழ்ச்சிகள்
1.   மங்கள்யான் (Mangalyan sucess story) (13.10.14 முதல் நிகழ்ச்சி)
2.   நோபல் பரிசு 2014 இயற்பியல் (Nobel 2014 physics)
3.   நோபல் பரிசு 2014 வேதியியல் (Nobel 2014 chemistry)
4.   நோபல் பரிசு 2014 மருத்துவம் (Nobel 2014 medicine)
5.   நோபல் பரிசு தேர்வு செய்யும் முறை (Nobel prize selection procedure)
6.   நீர் (Water)
7.   நானோ தொழில்நுட்பம் (Nano Technology)
8.   உணவு பதப்படுத்துதல் (Food Processing methods)
9.   பாய்ஸ்டுரைசேசன் (Pasteurization)
10. ஒற்றை வைக்கோல் புரட்சி (The one straw revolution book review)
11. வெப்பம் (Heat)
அறிவுசார் சொத்துரிமைகள் வரிசையில்
12. காப்புரிமை (patent)
13. பதிப்புரிமை (copy rights)
14. புவிசார் குறியீடுகள் (Geographical Indications)

இன்னும் வரவிருப்பவை
வணிகக் குறியீடுகள் (Trade marks), உணவுப் பொருட்களின் மேல் விவரக்குறிப்பிடுதல் (Food Labeling) இன்னும் பல.....


சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒலிபரப்பானவை (வலைதளத்திலும் உள்ளது)
  1. எனக்கு பிடித்த பாரதி (11.09.2014)
  2. என் மனம் கவர்ந்த மகாத்மா (01.10.2014)
  3. நவ பாரத சிற்பி பண்டித ஜவகர்லால் நேரு (14.11.2014)
  4. மண் பயனுற வந்த மகாகவி (11.12.2014)
  5. தந்தை பெரியார் (24.12.2014)

வலைதள முகவரி: http://agridr.in/community_radio/2014/community_radio.html#october13
All programmes available at: TNAU agriportal/ e-community radio 

நன்றி:
சமூதாய வானொலி (107.4 மெகா ஹெர்ட்ஸ்),
பன்பலை ஒலிபரப்பு,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்,
கோயமுத்தூர் 641 003.