Monday, January 15, 2018

எழுத்தாளர் ஞாநி மறைந்தார்…


   
    

      நான் மிகவும் மதிக்கக்கூடிய எழுத்தாளர்கலுள் ஒருவரான ஞாநி அவர்கள் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை மிகவும் வாட்டுகிறது. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவரைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறேன். எந்த ஒரு சமூக பிரச்சினையையும் வேறு வித கோணங்களில் அனுகக்கூடியவர். தனக்கு சரி என பட்ட கருத்துக்களை எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் வெளிப்படையாக முன்வைக்கக்கூடியவர். பாரதி மீது தீராத காதலும் தந்தை பொரியாரின் மீது மிகுந்த மரியாதையையும் வைத்திருந்தவர். ஞாநி அவர்களின் இறப்பு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

Monday, January 1, 2018

புத்தாண்டு பிறந்தது (2018)







 வருடா வருடம் கடந்து செல்வதைப்போல இந்த வருடம் இந்நாளை கடந்து செல்ல ஏனோ மனம் மறுக்கிறது. ஒரு வேலை வயது கூட ஒரு காரணமாக இருக்கலாம். எல்லோரும் நினைத்து பார்ப்பது போல சென்ற வருடம் நாம் என்ன செய்தோம் என்ற நினைப்பும் இதற்கு ஒரு காரணம். மற்றொன்று நிறைய விசயங்கள் செய்து முடிக்க வேண்டும் என்று பட்டியலிட்டு சிலவற்றை செய்யமுடியாமல் போனதுவும் இவ்வாறு யோசிக்க வைக்கின்றது.

  என்னை பொறுத்தவரையில் 2017 ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. என்னைப்பற்றின சுயமதிப்பீடு செய்து கொள்ள இவ்வருடம் எனக்கு உதவியது. என்னுடைய பலம் மற்றும் பலகீனம் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆராய்ச்சி பற்றின அறிவு கொஞ்சமும், கணித துறைகள் குறிப்பாக புள்ளியல், இயற்கணிதம் மற்றும் நுண்கணிதம் ஆகிய துறைகளில் எனது புரிதல் கொஞ்சமும் மேம்பட்டு இருப்பதாக உணர்கிறேன். அறிவியல் சம்பந்தமாக டாக்குமண்டரி படங்கள் அதிகமாக சேகரித்து எல்லாவற்றையும் முழுவதுமாக பார்த்தேன். எலக்ட்ரானிக்ஸ் துறைப் பற்றின அடிப்படை விசயங்கள் சிலவற்றை புரிந்து கொண்டு புதிய கருவி ஒன்றை உருவாக்கினேன். நான்கு புத்தக கண்காட்சிகளுக்கு சென்று கொஞ்சம் புத்தகங்கள் வாங்கி சேகரித்தேன். இவைகள் எல்லாம் புதிதாக ஆரம்பித்து செய்த வேலைகள்.

 சில விசயங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தது அதாவது கட்டுரைகள் எழுதுவது, பாட சம்பந்தமில்லாத புத்தகங்கள் அதிகம் வாசிப்பது, ரேடியோ உரைகள் நிகழ்த்துவது போன்றவகைகள் 2017-ல் முற்றிலும் நின்றுவிட்டது. இது வருத்தமளிக்க கூடிய செய்தி. புதிய வருடம் மீண்டும் இதற்கான வழிகளை திறந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  

இந்த வருடம் (2018) நான் செய்ய வேண்டும் என்று நினைப்பவைகள் இவை

1. வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்து முடிப்பது

2. கணினி மொழி எதாவது ஒன்றை கற்றுக்கொள்ளவது அது சி அல்லது சி++ ஆக இருந்தால மிகவும் நலம்

3. அறிவியல் சம்பந்தமாக தமிழில் புத்தகம் ஒன்றை எழுதுவது

4. ஒத்த கருத்துடைய புதிய நண்பர்களை கண்டறிவது

5. மூன்று ஆராய்ச்சி கட்டுரைகளாவது பிரசுரிப்பது.

இவையில்லாமல் நேர்மறை எண்ணங்களை அதிகம் வளர்த்துக் கொள்வது, எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் விளகியிருப்பது, பலமாக கருதும் விசயங்களில் அதிக கவனத்தை செலுத்துவது. என்று ஒரு பட்டியலே மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. முடிந்தவரை மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு அனைவரிடமும் அன்புபாராட்டி இந்த வருடத்தை எதிர் கொள்ள வேண்டும் என்பதுவும் புதிய வருடத்தின் எதிர்பார்புகள். சென்ற வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இப்புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்.
தா. அருள்