Friday, January 9, 2015

நான் ஊணமுற்றவன்…



     நமது வாழ்க்கையில் நமக்கு கெடுதல் தரக்கூடிய செயல்களையோ அல்லது உடல் அங்கங்கள் பாதிக்கக்கூடிய செயல்களையோ யாரும் விரும்பிச் செய்ய ஆசைப்பட மாட்டோம். நான் ஊணமுற்றவன். ஒன்றுமட்டும் உறுதியாக சொல்லமுடியும் தெரிஞ்சோ தெரியாமலோ உடலில் ஏதாவது குறை ஏற்பட்டுவிட்டால் அவ்வளவு எளிதாக தங்கள் அன்றாட நாட்களை நாம் வாழும் இச்சமுதாயத்தில் கழித்துவிட முடியாது என்று. உடல் ரீதியான குறைகள்கூட பெரிய விசயம் கிடையாது மனரீதியான இடர்பாடுகள் இங்கு மிக அதிகம். என்னைப் பொறுத்தவரையில் உடல் ஊணமுற்றவர்கள் வாழ்வதைவிட சாவதே மேல். இதைச் சொல்ல மிகுந்த வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் அதுதான் உண்மை. மற்ற நாடுகளில் நிலமை என்ன என்று எனக்கு தெரியாது. நான் இந்தியாவில் உள்ள பொரும்பாலான மாநிலங்களுக்கு சென்று வந்திருக்கிறேன், மற்ற மனிதர்களின் கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும், ஏளனங்களுக்கும், அனுதாபங்களுக்கும் அதிகம் ஆளகியிருக்கிறேன், இன்றும் ஆளாகிக் கொண்டிருக்கிறேன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன். எனக்கு மட்டும் என்று நினைக்க வேண்டாம். என்னைப் போன்ற எல்லோருக்கும் இந்த நிலைதான். மனதைரியத்தை வளர்த்துக் கொண்டவர்கள் ஒரளவிற்கு எல்லா இன்னல்களையும் தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெருகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். மனவலிமையை வளர்த்துக் கொல்லக்கூடிய சூழல்கூட இங்கு இல்லாததால் கூனி குறிகி வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஊணமுற்றவர்களின் வரலாறுகள் மிக அதிகம்.

சமீபத்தில் நான் கேட்ட அஷ்ட வக்கிரர் கதை நான் எழுதும் இந்த பதிவிற்கு காரணம்.

“உடல் எட்டு கோணல்களாக திருகி காணப்பட்ட அஷ்ட வக்கிரர். பல்வேறு இன்னல்களை தாங்கிகொண்டு வாழ்ந்து வந்தவர். தன்னிடமுள்ள குறைகளைப் பற்றி கவலைப்படமால் வேதங்களை நன்கு பயின்று கைதேர்ந்தவராக விளங்கினார். ஒருமுறை மகாராஜா கூடியிருந்த வேதம் பயின்றவர்கள் விவாதிக்கும் இடத்திற்கு அப்படியும் இப்படியுமாக அசைத்துக் கொண்டு உள்ளே வந்தார் அஷ்ட வக்கிரர். அவர் நடந்த விதமே பலருக்கு வேடிக்கையாக இருந்தது. கூடியிருந்த சபையோர் அவரைப் பர்த்துக் கேலி செய்தனர். சிலர் அருகே வந்து அமர்ந்து அவருடைய உடம்பை தடவிப் பார்த்தபடி இப்படி இந்த உடம்போடு இங்கு எதற்கு வரவேண்டும் என்று அவமரியாதையாக பேசினார்கள்.

கம்பீரமாக மகாராஜாவை உற்றுப் பர்த்த அஷ்ட வக்கிரர் அரசே இனி நான் இந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை புறப்படுகிறேன் என்றார். அதற்கு மகாராஜா, ஐயா இது வேதஞானம் உள்ளவர்கள் இருக்கும் இடம் இங்கு தாங்கள் தங்களின் அறிவை வெளிபடுத்த வாய்ப்பு தருகிறேன் கொஞ்சம் பொருங்கள் என்றார்.

அஷ்ட வக்கிரர் எல்லோரையும் பார்த்தபடி கம்பீரமாகச் சொன்னார், இது வேத விற்பன்னர்கள் கூடும் சபை என்று நம்பித்தான் நானும் வந்தேன். ஆனால் இதுவோ செருப்புத் தைப்பவர்கள் சேர்ந்திருக்கும் இடமாக அல்லவா இருக்கிறது என்றார்.

எங்களை எப்படி இவர் செருப்புத் தைப்பவர்கள் என்று அவமதிக்கலாம். என்று பண்டிதர்கள் சபை அலரியது.

அமைதியாக அஷ்ட வக்கிரர் விளக்கினார், ஒரு மரம் கோணலாக இருந்தால் மரவேலை செய்பவர் கவலைப்படுவார். மரத்தை தடவிப்பார்த்து அது நேராக இருக்கிறதா என்று ஆராய்வார். அதுமாதிரி ஒரு விலங்கைப் பார்த்தும் அது கோணலாக இருக்கிறதா, வளைந்துவிட்டால் ஆஹா இதன் தோல் வேலைக்கு ஆகாதே என்று செருப்புத் தைப்பவர் அதை வெறுப்பார். இவர்கள் பண்டிதர்கள். என் அறிவின் ஆழத்தை பார்த்திருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு என் உடம்பின் கோணலை, தோலின் கோணலை அளவிட்டு என்னை கேலி செய்கிறார்கள் எனவேதான் கேட்கிறேன் இது பண்டிதர் சபையா? செருப்புத் தைப்பவர்கள் கூடியிருக்கும் இடமா? என்று அஷ்ட வக்கிரர் கேட்கிறார்”.

இதைப் படிக்கும் நம்மவர்ளுக்கு எங்கே புரியப்போகிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் வேதனையின் ஆழம். என்ன இருந்தாலும் தனக்குன்னு வந்தாத்தானே தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்ன சொல்லீறீங்க. 

ஸ்டீபன் ஹாக்கிங் என்றொரு விஞ்ஞானி. மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு இணையாக கருதப்படும் தற்கால மனிதர். இன்றும் உயிரோடு வாழ்ந்து வருகிறார். அறிவியலின் தந்தை ஐசக் நியூட்டன் வாழ்ந்த காலத்தில் வகித்த லூகாசியன் பேராசிரியர் பதவியில் இன்று இருப்பவர்.  இயற்பியலாளர். பிரபஞ்சவியலில் ஆய்வுகள் செய்து பல புதிய கோட்பாடுகளை உருவாக்கியிவர். இவரின் கருந்துளை (Block hole) பற்றிய ஆய்வுகள் மிகவும் பிரசித்தி. பாமர மக்களுக்கும் புரியும்படி அறிவியல் புத்தகங்கள் உலகளவில் இன்றும் விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் அளவிற்கு எழுதியுள்ளார். முடிந்தால் The brief history of time, The theory of everything இந்த தலைப்புகளை கூகுள் பண்ணி பாருங்கள் நான் சொல்வது பொய்யில்லை என்பது புரியும். இவரின் சொற்பொளிவுகளை கேட்பதற்கு நுழைவுக் கட்டணம் மிகவும் அதிகம் ஆனாலும் நுழைவுச்சீட்டு கிடைப்பது கடிணம். ஒரு விஞ்ஞானியின் சொற்பொழிவை கேட்பதற்கா? என்று என்னலாம். இந்தியாவில் ஒருமுறை வழங்கிய சொற்பொழிவிற்கு குறைந்த கட்டணமாக ரூ. 15000/- வசூலிக்கப்பட்டது. இதெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் அவருக்கு உடம்பில் என்னவென்று சொல்லத்தெரியாத நரம்பு நோய் ஏற்பட்டு எல்லா பாகங்களும் செயலிலந்து விட்டன. கண் மட்டும் இமைக்கும் மற்றபடி மூளை வேலைசெய்கிறது அவ்வளவுதான். சர்கரநாற்காலியில் பொருத்தப்பட்டிருக்கும் கணினி அவரின் இமை அசைவுகளை செய்திகளாக மாற்றி ஒலிவடிவத்தில் கொடுக்கிறது அதன் மூலம் தான் எல்லா தகவல் பரிவர்தனைகளையும் செய்கிறார். ஒர் நேர்கானலில் இப்படி குறிப்பிடுகிறார் உடம்பில் என்ன இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதால்தான் எப்பொழுதும் என்மனம் ஒயாது பிரபஞ்சத்தினை பற்றி ஆழ்ந்த சிந்தனை செய்ய முடிகிறது. இயற்கையின் ஆச்சரியங்களை உணர்ந்து கொள்ள முடிகிறது என்கிறார். ஆனால் இவர் வெளிநாட்டுகாரர். ஒரு வேலை இங்கிலாந்தில் நிலமை வேறாக இருக்குமோ என்னவோ. இவர் மட்டும் நம்மூரில் இருந்திருந்தார் அறிவியல் ஒரு பொக்கிசத்தை இழந்திருக்கும்.

என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் இளநிலை வேளாண் பொறியியல் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலைதேடிக்கொண்டிருந்த காலம் அது. அப்பெல்லாம் அதிக வெளிவுலக பரிட்சயம் எனக்கு கிடையாது, நம்மை சுற்றியுள்ளவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்ற பிரஞ்கை எனக்குள் ஏற்பட்டிருக்காத நேரம். பணப்பிரச்சினை மற்றும் குடும்ப எதிர்பார்புகளை சமாளிக்க ஏதாவது ஒரு வேலை பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் வேலை தேடி அலைந்தேன். ஒரு சில தோல்விகளுக்கு பிறகு ஒரு தனியார் கம்பெனியில் வேலை கிடைத்தது. விவசாயிகளை சந்தித்து எங்கள் நிறுவன கருவிகளை விற்பனை செய்வதுதான் என் வேலை. நேர்முகத்தேர்வின் போதே அதிக கேள்விகள் கேட்டுத்தான் என்னை தேர்வு செய்தனர். பணியில் சேர்ந்த பொழுது எனக்கு முன் வேலைப் பார்பவனிடம் சிறிது காலம் பயிற்சி பெற்றுக்கொள்ள அவனது மேற்பார்வையில் இருக்குமாறு சொல்லி அவனது இடத்திற்கு என்னை அனுப்பி வைத்தனர். அவன் முதன் முதலில் என்னை பார்த்தவுடனே மேனேஜருக்கு போன் செய்து இவனை ஏன் என் தலையில் கட்டுரீங்க இவனை வைத்து எப்படி வேலை வாங்குவது என்று நீண்ட விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு என்னை அறியாமல் கண்ணில் நீர் வரத்தொடங்கியது. அன்று இரவு முழுவதும் அழுதேன். குடுப்பச் சூழல் அந்த வேலையை செய்தே ஆக வேண்டுமன்ற கட்டாயத்தில் நானிருந்ததால் மனவலிமையை வளர்த்து கொள்ள பழகினேன். அதற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் என் பணியினை பாராட்டி இன்கிரிமெண்ட் கிடைக்கும் அளவிற்கு மாறியது வேறுவிசயம். ஆனால் அதற்கு நான் பட்ட இன்னல்களை விவரிப்பது கடினம். 

உடலில் ஊணம் என்பது ஒரு குறையல்ல என்பதை மறந்து வாழத்தான் ஆசைப்படுகிறோம் நாங்கள். ஆனால் அப்படியெல்லாம் நீங்க இங்கு வாழ்ந்துவிட முடியாது என்று அடிக்கடி சமூதாயம் நினைவு படுத்திய வண்ணம் இன்றும் தொடர்ந்து கொண்டிதானிருக்கிறது. அனுபவம் அதிகம் கிடைத்துவிட்டதால் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை ஏனென்றால் நம் மக்கள் எல்லோருக்கும் மன முதிர்ச்சி ஏற்பட்டு ஊணமுற்றவர்களை ஒரு பிண்டமாக பார்பதை தவிர்த்து சகமனித அங்கிகாரம் தரவேண்டும் என்று நினைப்பது என் தவறு என்பதை உணர்ந்துவிட்டேன். என்னயிருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில் ஊணமுற்றவர்களாகிய என்போன்றோர் வாழத்தகுதியற்றவர்கள் தானே… நான் வேதனைப்படுவதால் என்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது இங்கு….