Tuesday, April 14, 2015

ஜெயகாந்தன் என்றொரு சகாப்தம்



நான் மிகுந்த மரியாதை கொண்ட எழுத்தாளர்களுல் ஜெயகாந்தனும் ஒருவர். சென்றவாரம் அவர் இறந்த செய்தியை கேட்டு மிகவும் வருந்தினேன். வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்திக்க நேருகிறது ஆனால் ஒருசிலர் மட்டும் என்றும் மனதில் நின்றுவிடுவார்கள் அப்படிப்பட்டவர்களில் எனக்கு ஜெயகாந்தனும் ஒருவர். நான் அடிக்கடி எனக்குள் கேட்டுக் கொள்வதுண்டு நாம் எதற்காக வாழ்கிறோமென்று. வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்துலயும் ஏதோ ஒன்றை துரத்திக் கொண்டு இருப்பதைப் போன்ற இந்த வாழ்க்கையை நான் வாழ்ந்து என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறேனென்று. மனிதனுடைய சராசரி ஆயுள் 60-75 வருடம் என்று சொல்கிறார்கள். வெறும் சொற்ப காலமே இந்த பூமியில் வாழப்போகும் நான் எதற்காக இந்த சமூதாய சிக்கல்களில் மாட்டிக் கொண்டு அல்லல் பட வேண்டும். இந்த கேள்விகளுக்கு எனக்கு விடைகள் கிடைத்த இடம் ஜெயகாந்தன்.   

அவர் எழுதுவதை நிறுத்தி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அதற்கு எனது எழுத்து இக்காலத்தவர்களுக்கு ஒத்துவாராது என்று கூறியதாக நினைவு. நான் யோசித்து பார்க்கின்றேன், இன்று ஒரு சினிமா நடிகருக்கு உடம்பு சரியில்லை என்றால் வருத்தப்படும் தமிழர்கள் பெத்த அம்மா, அப்பாவிற்கு ஏதாவது ஒன்றென்றால்கூட அவ்வளாவாக வேதனைப்படுவதில்லை. இன்று பெரும்பாலனவர்கள் குறிப்பாக என்னைப் போன்ற இளைஞர்கள் சினிமா மற்றும் கிரிகெட் ஆட்டத்தில் அதிக அக்கரை காட்டியும் தங்கள் பொன்னான நேரத்தை அதிகம் செலவலித்தும் வருகின்றோம் நமக்கு தெரியப்போவதில்லை நம்முடைய அறியாமையை பயன்படுத்தி மற்றவர்கள் எப்படி லாபமடைகின்றனர் என்று.  இந்த மோகம் மூலைச்சலவை செய்யப்பட்டு ஜீன்களிலும் பதிந்து விட்டது இப்படிப்பட்டவர்களுக்கு இவர்கள் விரும்பும்படியான கதைகளை ஜெயகாந்ததன் ஒருபோதும் படைத்துவிட முடியாது, தான் எழுதாததற்கு அவர் கூறிய விளக்கத்திற்குள்ளே எவ்வளவு நிதர்சணம் இருந்திருக்கின்றது என்பதை என்னால் இன்று உணர்ந்துகொள்ள முடிகின்றது.

ஜெயகாந்தன் அவர்கள் ஏழைகளின் வாழ்க்கையை தன் கதைகளில் விவரிக்கும் பாங்கு உண்மையில் ஏழையாய் இருப்பவர்களுக்குத்தான் புரியும். அவருடைய ”யாருக்காக அழுதான்” கதையை படிக்கும் போது என்னையறியாமல் நான் அழுதது இன்றும் நினைவிலிருக்கிறது. இன்று நமது பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கும், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஏழைகள் ஒரு காட்ட்சிப் பொருளாக தெரிகின்றனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. தனது சிறுவயது நாட்களில் அவருக்கு ஏற்ப்பட்ட அனுபவப்பதிவுகள் அவை.

பாரதியாரின் கவிதைகளுக்கு ஏற்ப தனது எழுத்தை ஒரு தவமாக பாவித்தவர் ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார் “கல்லடி கிடைத்தாலும் எழுதுவேன், காசு தரவிட்டால் தான் என்ன? பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன். எழுத்து எனக்கு சீவனமல்ல; அது என் ஜீவன்”.   இன்று உணர்வுப்பூர்வமான செயல்களை நாம் இங்கு எதிர்பார்க்கலாகாது. எல்லாமே மெக்கானிக்கலாக மாறிவிட்டது. வாழ்க்கை உட்பட. அண்மையில் நான் படித்த வரிகள் “வாழ்க்கை என்பது ஒரு அறிய வாய்ப்பு ஆனால் அதன் மதிப்பு வாழ்வோரைப் பொறுத்தது” என்று, பிள்ளைகளுக்கு காசு பணம் அதிகம் சேர்த்து வைத்தாரா என்று  தெரியவில்லை ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது ஏனெனில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து வரும் என்னைப்போன்ற எத்தனையோ பேர் அவரை நினைவுகூறுகின்றனர் இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்  

வாழ்க்கைப் பற்றி சில வரிகள் (ஜெயகாந்தனின் சிந்தையில் ஆயிரம் கட்டுரைத் தொகுப்பிலிருந்து நான் ரசித்தது)

  • ”வாழ்க்கைக்கு எவ்வளவோ விசயங்கள் தேவைதான், ஆனால் ‘இதுவே வாழ்க்கை, வாழ்வதுவே இதற்குத்தான்’ என்னும்படியாக எனக்கு எதுவும் இல்லை”.

  • ”எனது சுயமரியாதை முக்கியம் என்பதால் மற்றவரின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதில்லை”.

  • ”நன்றியுடைமை என்பது முகஸ்துதி அல்ல; லஞ்சம் கொடுப்பதும் அல்ல”.

  • ”எந்த புகழுக்கும் ஏங்கித்தவிக்கிற வேட்கை எனக்கில்லை; அந்த வேட்கை இல்லாததால் எனக்கு விரக்தியும் இல்லை”.

  • ”எந்த ஒரு காரியத்தையும் கேவலம் என்று நினைத்துக் கொண்டும், கேவலம் என்று தெரிந்து கொண்டும் அதைச் செய்வது கீழ்மையாகும். நான் மேலானவனானால் நான் செய்யும் காரியங்கள் எதுவாயினும் அவை மேன்மையுறுதல் வேண்டும்”.

  • ”நாம் அழுவதானால் நமக்காகவே அழுவோம் அதைத் தவிர நாம் ஏதும் செய்வதற்கில்லை. நாம் வருத்தப்படுவதனால் நமக்காகவே வருத்தப்படுவோம், இயற்கை அதற்குத்தான் நம்மை லாயக்காக்கியிருக்கிறது”.

  • ”என்னுடைய பார்வைதான் சரியென்று சாதிக்கிற பிடிவாதம் எனக்கில்லை. இந்தப் பார்வை தவிர பிற பார்வைகளெல்லாம் தவறானது என்று சாதிக்கிற அறியாமையும் எனக்கில்லை. இது என்பார்வை”.  
 
  • ”இந்த மண்ணில் பிறந்தோமேயொழிய இந்த மண்ணின் மீது உரிமை பாராட்ட இதனை நாம் படைத்தோமில்லை”.   

    நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவோ எழுத்தாளர்களை நான் கவணித்து வருகிறேன். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்ற கூற்றுக்கு ஏற்ப பணம் கிடைக்குமென்றால் எதையும் அவர்கள் எழுத தயங்குவதேயில்லை. அதனால் சமூகத்திற்கு என்ன நன்மை, என்ன பாதிப்பு என்பதை ஒருபோதும் அவர்கள் கவலை கொள்வதாகவும் தெரியவில்லை ஆனால் ஜெயகாந்தன் பணத்தை ஒரு பிண்டமாகவே பாவித்தவர் எவ்வளவோ பெரிய கவுரவங்கள் கிடைத்த போதிலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையாக வாழ்ந்த வாழ்க்கையை எல்லோரும் அறிவர். காந்தியடிகள், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர் போன்றோரின் வாழ்க்கைகளை நான் படித்துத்தான் தெரிந்து கொண்டேன். ஆனால் சமகாலத்தில் இப்படி ஒரு ஆளுமையை நேரடி பாதிப்பினால் உள்வாங்கிக் கொண்ட அனுபவம் என்வாழ்வில் பசுமையாக இருக்கும். தமிழ்ச் சமூக வரலாற்றில் இவருக்கென்று தனியிடம் என்றும் இருக்குமென்று எல்லோரையும் போல நானும் நம்புகின்றேன்.



 நன்றி: தி இந்து, தமிழ் நாளிதழ்

Wednesday, April 8, 2015

சமூதாய வானொலி: அறிவியல் அறிவோம்



      யாருமே இல்லாத கடைக்கு டீ ஆத்திகிட்டிருப்பதைப் போல நானும் அறிவியல பத்தி பேசிக்கிடிருக்கேன். ஆர்வமுள்ளவர்கள், ஆர்வமில்லாதவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் தேவையான செய்திகளுடன் நான் வழங்கிவரும் அறிவியல் அறிவோம் வானெலி நிகழ்ச்சி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சமுதாய வானொலியில் வாரம்தோறும் திங்களன்று ஒலிபரப்பப்பட்டுவருகின்றது.

இதுவரை வந்த நிகழ்ச்சிகள்

வ.எண்
தலைப்பு
தேதி
1.
மாங்கல்யான் வெற்றிக்கதை
13.10.2014
2.
நோபெல் பரிசு இயற்பியல் 2014
20.10.2014
3.
நோபெல் பரிசு தேர்வு செய்யும் முறை
27.10.2014
4.
நோபெல் பரிசு வேதியியல் 2014
03.11.2014
5.
நோபெல் பரிசு மருத்துவம் 2014
10.11.2014
6.
நீரின்றி அமையாது உலகு
17.11.2014
7.
நானோ தொழில்நுட்பம்
24.11.2014
8.
உணவு பதப்படுத்தும் முறைகள்
01.12.2014
9.
பாய்ஸ்டுரைசேசன்
08.12.2014
10.
ஒற்றை வைக்கோல் புரட்ச்சி
15.12.2014
11.
வேண்டும் நமக்கு வெப்பம்
22.12.2014
12.
காப்புரிமை பெறுவது எப்படி?
29.12.2014
13.
பதிப்புரிமை பெறுவது எப்படி?
05.01.2015
14.
புவிசார் குறியீடுகள் பெறுவது எப்படி?
12.01.2015
15.
வணிகக் குறியீடுகள் பெறுவது எப்படி?
19.01.2015
16.
உணவுப் பொருட்களின் மேல் விவரக்குறிப்பிடுதல்
02.02.2015
17.
மாற்றியமைக்கப்பட்ட சூழ்நிலையில் உணவு சேமிப்பு
29.02.2015
18.
காற்று நமக்கு தேவை
16.02.2015
19.
ஆற்றல் அளப்பரியது
23.02.2015
20.
உயர் அழுத்தத்தில் உணவு பதப்படுத்துதல்
02.03.2015
21.
சிறுதொழில் தொடங்கிவது எப்படி?
09.03.2015
22.
ஏற்றுமதி தொழில் தொடங்கிவது எப்படி?
16.03.2015
23.
நல்ல கட்டுரை எப்படி எழுதுவது?
23.03.2015
24.
குளிர்சாதனபெட்டி எப்படி வேலை செய்கிறது
6.04.2015


நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக வலைதளத்திலும் உள்ளது  

சுட்டி: http://agritech.tnau.ac.in/community_radio/2015/community_radio.html