Thursday, March 10, 2016

கணித மாற்றங்கள்: ஏற்படுத்தும் குழப்பங்கள்




 
       
    அறிவியல் படிக்கும் அனைவருக்கும் தெரியும் மாற்றம் தான் இந்த உலகத்தை இயக்குகிறது என்று. அன்றாடம் நாம் சோதனைச்சாலைகளில் செய்யும் பல்வேறு சோதனைகளும் இந்த மாற்றம் என்ற கருத்திற்கு உட்பட்டே நடக்கிறது என்பதை கூர்ந்து கவனித்து தெரிந்து கொள்ளவேண்டியதில்லை. ஆனால் அறிவியல் இந்த அளவிற்கு முன்னேறியதற்கு காரணம் கூர்ந்து கவணித்தல் என்ற செயலால் உருவான என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

     நீண்ட நாட்களாக எனக்கொரு சந்தேகம் இருந்து வந்தது கால்குலஸ் என்ற கணித பிரிவு மாற்றம் நடைபெறும்வீதம், அதாவது Rate of change என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் புள்ளியியலிலும் நாம் இதே மாற்றம் என்ற கருத்தாக்கத்தின் உண்மையை புரிந்து கொள்ளவே முயற்சி செய்கிோம் என்று. இரண்டு கணித பிரிவுகளிலும் பயன்படுத்தப்படும் மாறிகள் (variable) அதாவது Dependent and Independent variables என்ற சொல்லாடல் ஏற்படுத்திய குழப்பம் கால்குலஸுக்கும் புள்ளியியலுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாட்டை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது. எனது இந்த சந்தேகத்தை கணித துறையில் இருக்கும் ஆசிரியர்களிடம் கொஞ்ச நாட்களுக்கு முன்பு கேட்டேன் ஆனால் அவர்கள் எனது கேள்விக்கான சரியான பதிலை அளிக்கவில்லை.

       அண்மையில் ஒரு கணித துறை நண்பரிடம் இந்த கேள்வியை எழுப்பினேன். எனது ஆர்வத்தை மிகவும் வரவேற்றார். உங்களுடைய கேள்வி சரியானது என்று சொல்லிவிட்டு அதற்கு விளக்கமாக கால்குலஸ் மிக துல்லியமாக கணிப்பதற்கும் புள்ளியியல் தோராயமாக கணக்கிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்று விளக்கம் கூறினார். அவர் கூரிய விளக்கம் மேலும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது என்னவெனில் கால்குலஸ் துல்லியமாக கணக்கிடும் கணித முறை என்றால் ஏன் அதை புள்ளியல் சார்ந்து பயன்படுத்தப்படும் பிரச்சினைக்களுக்கு தீர்வாக பயன்படுத்துவதில்லை பெரும்பாலான அறிவியல் கட்டுரைகள் புள்ளியல் பகுப்பாய்வுகளுக்கே உட்படுத்தப்படுகின்றன ஏன்இன்னொரு ஆசிரியர் எனக்கு இவ்வாறு விளக்கம் கூறினார் boundary condition (closed system) போன்ற பிரச்சினைகள் எங்கெங்கு தோன்றுகிறதோ அங்கொல்லாம் கால்குலஸ் பயன்படுத்தப்படுகிறது என்று. ஆனால் அதுவும் எனக்கு சரியான விளக்கமாக படவில்லை ஏனெனில் ஒரு பசுமை குடிலில் (கிரின் ஹவுசில்) வளர்க்கப்படும் தக்காளிச் செடியின் மகசூலை கணக்கிடுவதற்கு புள்ளியலின் துணையையே நாடப்படுகிறது செடி ஒரு பௌண்டரி கண்டிசனில் வளர்க்கப்பட்டாலும் கூட கால்குலஸ் பயன்படுத்தப்படுவதில்லை என்ற சிந்தனை இந்த ஆசிரியர் சொன்ன விளக்கமும் எனக்கு முழுவதும் ஏற்புடையாதக இல்லை எனத் தோன்றியது.

    ைப்பற்றி நான் வலைதளத்தில் தேடுகையில் இதே கேள்விக்கான விளக்கத்தை காண நேர்ந்தது .என் சந்தேகம் முழுவதும் நிவர்த்தி செய்யும் வகையில் இருந்தததால் அவ்விளக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

உங்களுக்கும் பயன்படும் என்பதால்.

”In calculus, you make precise determinations, often concerning discrete futures. You can figure out exactly how long it will take to drain even the most irregularly shaped swimming pool. And this enables you to do things of vital importance”.

இந்த ஆங்கில பத்தியில் இருக்கும் discrete என்ற வார்த்தை மிகவும் முக்கியமாகும் இரண்டுவித function கள் கூறப்படுகிறது அதாவது

1. Discrete function
2. Continuous function

       Discrete function எங்கொல்லாம் வருகிறதோ அங்கு கால்குலஸ் கணித முறை பயன்படுத்தப்படுகிறது இந்த விளக்கத்தை பார்க்கும் போது மேலே ஆசிரியர்கள் சொன்ன விளக்கமும் ஒத்து போகிறது ஒரு வரம்பிற்குட்பட்டு நடக்கும் மாற்றங்களை கால்குலஸின் உதவி கொண்டு துல்லியமாக விளக்க முடியும். ஆனால் வரம்பே இல்லாமல் ஒரு செயல் தொடர்ந்து மாறிக்கொண்டே போனால் அதை கணிக்க கால்குலஸை பயன்படுத்த முடியாது உதாரணத்திற்கு பயிர் சாகுபடி, வானிலை மாற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு புள்ளியலின் உதவியால் தோராயமாக கணக்கிட முடியும்.

    பொதுவாக புள்ளியல் வரைமுறைகள் நிகழ்தகவு (probability) கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ன.

சரி இங்கே ஒரு சந்தேகம் தோன்றலாம்...

நிகழ்தகவு என்பது என்ன?

     எனக்கு தெரிந்த பதில் நிகழ்தகவு என்பது யூகித்தலையும், நம்பிக்கையையும் நமக்கு கற்பிப்பதாகும்.

    ஆக இந்த கணித முறைகளை நாம் பயன்படுத்த நாம் என்ன பரிசோதனை மேற்கொள்கிறோமோ அதை கூர்ந்து கவனிக்க வேண்டும். மாற்றம் ஒரு வரம்பிற்குற்பட்டால் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக கால்குலஸ் கணித முறையையும், தொடர்ச்சியாக முடிவில்லாமல் மாற்றம் நிகழ்ந்தால் அப்பிரச்சினைகளுக்கு புள்ளியல் கணக்கீடுகளையும் பயன்படுத்தப்பட வேண்டும்.

   தனிமையில் இருக்கும் போது இதைப்பற்றி சிந்தித்து பார்க்கவும். உங்களுக்கு தெரிந்த விளக்கங்களை என்னுடம் பகிர்ந்து கொள்ளவும்.

Wednesday, March 9, 2016

உணவை பதப்படுத்த ஒளி உமிழ் டயோடு தொழில்நுட்பம்

(கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் ஜனவரி (2016) மாதம் வெளியான எனது கட்டுரையின் மீள்பிரசுரம்)


குறைந்த செலவில், நீண்ட நாட்கள் உணவுப் பொருட்களை பாதுகாக்க நல்லதொரு தொழில்நுட்பத்தை கண்டறிந்து, நடைமுறைபடுத்துவது என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயத் தேவைகளுல் ஒன்றாக இருந்து வருகிறது. உணவை பாதுகாக்க நவீன தொழில்நுட்பங்கள் பல பயன்பாட்டில் உள்ளபோதிலும் பெரும்பாலனவைகள் அனைவரலாலும் சுலபமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில், குறைந்த செலவில் ஒளி உமிழ் டயோடுகளை (Light Emitting Diodes, LED’s) பயன்படுத்தி உணவு பொருட்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம் சமீபகாலமாக ஆராய்ச்சியாளர்களிடையே அதிக கவனைத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னனு துறையில் ஒளி உமிழ் டயோடுகளின் பயன்பாடு ஏற்கனவே அதிக அளவில் உள்ளன. சமீபத்தில், உணவை பாதுகாப்பதிலும் ஒளி உமிழ் டயோடுகளை பயன்படுத்த முடியும் என்று சோதனைகள் மூலம்  நிரூபித்துள்ளனர். மற்ற முறைகளை காட்டிலும் ஒளி உமிழ் டயோடுகளின் மூலம் ஒளியை உருவாக்க மிகக் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படுகிறது. மேலும், வெள்ளை நிற ஒளியின் அடிப்படை வண்ணங்களான சிவப்பு, பச்சை மற்றும் நீல நிற ஒளிகளையும், ஒற்றை அலைநீலம் கொண்ட ஒளிகளையும் டயோடுகளின் மூலம் உருவாக்க முடியும் என்பதாலும் இத்தொழில்நுட்பத்தின் மீது எதிர்பார்பு அதிகரித்துள்ளது. ஒளி உமிழ் டயோடுகளைப் பற்றிய அறிவியல் பின்னனியையும், உணவுப் பொருட்களை பாதுகாக்கும் முறைகளையும் தெரிந்து கொள்வது இத்தொழில்நுட்பத்தைப் பற்றிய நம் புரிதலை மேம்படுத்த உதவும்.




ஒளி உமிழ் டயோடு என்றால் என்ன?

எலக்ட்ரான்களின் ஒட்டமே மின்சாரம். எலக்ட்ரான்களை கட்டுப்படுத்தி ஒரு மின்சுற்றில் செலுத்துவதன் மூலம் நமக்கு தேவையான செயல்களை செய்து கொள்ள முடியும். டிவி, ரேடியோ, கணினி, செல்போன் போன்ற எல்லா மின்னனு சாதனங்களுமே எலக்ட்ரான்களின் ஓட்டங்களினால்தான் இயங்குகின்றன. 19-ம் நூற்றாண்டில் இயற்பியல் விஞ்ஞானிகள் எலக்ட்ரான்களின் ஒட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றி தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக இயற்கையில் கிடைக்கும் சிலிக்கன் (Silicon) எனப்படும் பொருள் தன்னுல் செலுத்தப்படும் மின்சாரத்தை கிரகித்து குறைந்த அளவே வெளியிடுகின்றன என்ற உண்மை கண்டறியப்பட்டது. இந்த சிலிக்கன் எனப்படும் பொருள் கடற்கறை மற்றும் பாலைவனங்களில் காணப்படும் மனலில் அதிகம் கலந்திருக்கின்றன என்பதுவும் தெரிய வந்தது. இதற்கு குறைகடத்தி என பெயரிட்டனர். பின்னாட்களில் ஆராய்ந்த விஞ்ஞானிகள் சிலிக்கன் போன்ற இன்னும் சில குறைகடத்திகள் இயற்கையில் இருக்கிறன என கண்டறிந்து வெளிஉலகுக்கு தெரியப்படுத்தினர். குறைகடத்திகளின் கண்டுபிடிப்பு மின்னனுதுறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்பது வரலாறு.

ஒரு மின்னனு சுற்றை உருவாக்க பல உதிரி பாகங்கள் தேவைப்படும். முக்கியமாக ரெஸிஸ்டர் (Resistor), டயோட் (diode), கெபாசிடர் (Capacitor) போன்றவைகளைச் சொல்லலாம். இவை அனைத்தும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறைகடத்திகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. மின்சுற்றில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு பணிகளைச் செய்யவள்ளன. உதாரணத்திற்கு மின்சார தடையை ஏற்படுத்த ரெஸிஸ்டரும், மின்சாரத்தை ஒரே திசையில் செலுத்த டயோடுகளும், மின்சாரத்தை கிரகிக்க கெபாசிடர்களும் என பல பணிகளைச் செய்யும் வண்ணம் இப்பாகங்கள் வடிவமைப்பு செய்யப்படுகின்றன. இதில் டயோடுகளின் பயன்பாடு அளர்ப்பரியது அதாவது மாறுதிசை மின்னோட்டததை நேர்திசை மின்னோட்டமாகவும் அல்லது நேர்திசை மின்னோட்டத்தை மாறுதிசை மின்னோட்டமாக மாற்றவும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

டயோடுகளின் மூலம் ஒளியை உருவாக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள நாம் கொஞ்சம் பின்நோக்கிச் செல்லவேண்டும். 1907-ம் ஆண்டு ஹென்றி ஜோசப் என்பவர் சிலிக்கன் கார்பைட் என்ற குறைகடத்தியில் மின்னோட்டத்தை செலுத்தினால் மஞ்சள் நிற ஒளி உமிழ்வதை கண்டறிந்தார். 1927-ம் வருடம் ரஸ்ய நாட்டைச் சேர்ந்த  ஓலக் லாசோவ் என்பவர் இதே கண்டுபிடிப்பை உறுதி செய்யும் விதமாக ஆராய்ச்சிகள் செய்து ஒளி உமிழ் டயோடுகளை பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். வணிக ரீதியாக ஒளி உமிழ் டயோடுகள் 1962-ம்  நிக் ஹாலன்யாக் அவர்களின் முயற்சியால் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது அவர் ஹேலியம் ஆர்சனைட் பாஸ்பைட் குறைகடத்தியை பயன்படுத்தி சிவப்பு நிற ஒளி உமிழும் டயோடுகளை உருவாக்கியிருந்தார். இதன் பிறகு ஒளி உமிழ் டயோடுகளின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. பல்வேறு நாடுகளில் விஞ்ஞானிகல் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தொடங்கினர் 1993-ம் வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த நாக்கமுரா நில நிற ஒளி உமிழும் டயோடுகளை ஹேலியம் நைட்ரைட் குறைகடைத்திகளை பயன்படுத்தி உருவாக்கினார். இதே திசையில் ஆராய்ச்சி செய்த ஜப்பானை சேர்ந்த அகசாகி மற்றும் அமானோ ஆகியோர்  நாக்கமுரா ஆராய்ச்சியை  மேலும் செம்மையாக்கினர். இந்த குழுவினரின் கண்டுபிடிப்பால் ஒளி உமிழும் டயோடுகளின் பயன்பாடு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. 2014-ம் ஆண்டு நேபல் கமிட்டி நில நிற ஒளி உமிழும் டயோடுகளை பற்றி ஆராய்ச்சி செய்தவர்களை கவுரவிக்கும் விதமாக இயற்பியலுக்கான நோபல் பரிசினை ஜப்பான் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கும் வழங்கி சிறப்பித்தது.


ஒளி உமிழும் டயோடுகள் வேலை செய்யும் விதம் 

ஒரு ஒளி உமிழ் டயோடில் இரண்டு விதமான குறைகடத்திகள் பொறுத்தப்பட்டிருக்கும். ஒன்று N (Negative) வகை குறைகடத்தி மற்றொன்று  P (Positive) வகை குறைகடத்தி. N வகை என்றால் எதிர்மின்னோட்டம் கொண்ட குறைகடத்திகள். P வகை என்றால் நேர் மின்னோட்டம் கொண்ட குறைகடத்திகள். சுத்தமான சிலிக்கன் படிகத்தில் வேறொரு குறைகடத்தி பொருட்களை கலந்து மாசு ஏற்படுத்தும் பொழுது மேற்சொன்ன P வகை மற்றும் N வகை குறைகடதிகளை உருவாக்க முடியும். இந்த நேர் மற்றும் எதிர் மின்னோட்ட குறைகடத்திகளை ஒன்றாக மின்சுற்றில் இணைத்து மின்னூட்டத்தை செலுத்தினால் நேர்மின்னோட்டம் கொண்ட துகள்களும் எதிர்மின்னோட்டம் கொண்ட துகள்களும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி ஒன்று சேர்ந்து போட்டான் துகளை வெளிவிடுகின்றன. இச்செயலுக்கு எலக்ட்ரோ லூமினசென்ஸ் என்று பெயர். இதனையே ஒளிர்தல் என்கிறோம். இந்த போட்டான் துகள்களினால் கண்கலால் பார்த்து உணரக் கூடிய கண்ணுறு ஒளியை வெளியிடும் அலைநீலத்திருந்து பார்க்க முடியாத அகச்சிவப்பு கதிர்களை உமிழும் அலைநிலம் வரை ஒளியை உருவாக்க முடியும்.



வணிகரீதியாக கிடைக்கும் ஒளி உமிழ் டயோடுகளின் நிறங்கள் மற்றும் தயாரிக்கப்படும் பொருட்கள்

அலைநீளம்
(நானோ மீட்டர்)
உருவாக்கும் நிறம்
பயன்படுத்தப்படும் குறைகடத்திகள்
< 400
புறஊதா கதிர்கள்
·அலுமினியம் நைட்ரைட்
· அலுமினியம் ஹேலியம் நைட்ரைட்
·அலுமினியம் ஹேலியம் இண்டியம் நைட்ரைட்
400-500
நீலம்
·இண்டியம் ஹேலியம் நைட்ரைட்
· சிலிக்கன் கார்பைட்
500-570
பச்சை
·ஹேலியம் பாஸ்பைட்
·அலுமினியம் ஹேலியம் இண்டியம் பாஸ்பைட்
610-760
சிவப்பு
·அலுமினியம் ஹேலியம் ஆர்சனைட்
·ஹேலியம் ஆர்சனைட் பாஸ்பைட்
>760
அகச்சிவப்பு கதிர்கள்
·ஹேலியம் ஆர்சனைட்

உணவுத் துறையில் ஒளி உமிழ் டயோடுகளின் பயன்பாடு

உணவுத் துறையை பொருத்தமட்டில், ஒளி உமிழ் டயோடுகளின் வெளிச்சத்தில் பொருட்களை வைப்பதன் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும், அழுகுவதிலிருந்தும் பாதுகாக்க முடியும். குளிர் சாதான சேமிப்பு முறைகளுக்கு ஒளி உமிழ் டயோடுகள் நல்ல பலனை தருகின்றன. தோட்டக்கலை மற்றும் வேளாண் பயிர்களை ஒளி உமிழ் டயோடுகளின் வெளிச்சத்தில் வளர்க்கும் பொழுது சத்துள்ள பயிர்களை அதிக மகசூலுடன் பெற முடியும். அதேபோல் ஒளி உமிழ் டயோடுகளின் வெளிச்சத்தில் பழங்களை பழுக்கவைக்கவும், அறுவடை செய்த பயிர்களின் இயற்கைத் தன்மை மாறாமல் நீண்ட நாட்கள் சேமித்து வைக்கவும் முடியும். பழங்களை அறுவடை செய்தபின் புஞ்சைகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்க ஒளி உமிழ் டயோடுகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒளி பயன்படுகின்றன. சூரிய ஒளியின் மூலம் நடக்கும் ஒளிச்சேர்க்கையை செயற்கையாக ஒளிஉமிழ் டயோடுகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒளியின் துணை கொண்டு உருவாக்கும் போது பயிர்களின் இழைகளில் பச்சையம் உற்பத்த்தியாகும் செயல் எல்லா பாகங்களிலும் சரி சமமாக நடந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. 

உணர்கருவிகளாக ஒளி உமிழ் டயோடுகள் 

உணவுப் பொருட்களின் தரத்தை கண்டரிய உணர்கருவிகளாக (Sensors) ஒளி உமிழ் டயோடுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஜப்பான் விஞ்ஞானிகள் கோழி முட்டையில் இன்புளியன்ஸா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தை கண்டறிய ஒற்றை அலைநீலம் கொண்ட ஒளிக்கதிர்களை உமிழக்கூடிய ஒளி உமிழ் டயோடுகளை பயன் படுத்தி முட்டைக்குள் ஏற்ப்பட்டிருக்கும் பாதிப்பை வெற்றிகரமாக கண்டறிய முடியும் என நிரூபித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் கண்ணுறு ஒளி மற்றும் அகச்சிவப்பு கதிர்களின் அருகில் உமிழக்கூடிய அலைநீல ஒளி பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்கள் மற்றும் காய்கறிகளையும் பதப்படுத்த முடியும் 

முட்டை கோஸ், அறுவடை செய்தபின் சீக்கிரம் அழுகக் கூடிய தன்மை கொண்ட பொருள். இதை வெள்ளை, பச்சை, நீலம் மற்றும் சிவப்பு நிறம் உமிழக்கூடிய டயோடுகளின் வெளிச்சத்தில் 18 நாட்கள் சேமித்து வைத்து சோதித்து பார்த்ததில் முட்டைகோஸில் காணப்படும் குளோரபில் மற்றும் வைட்டமின் சி போன்ற காரணிகளை குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஒளி உமிழ் டயோடுகள் ஏற்படுத்தி இருப்பதாக கொரியா நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தக்காளியில் செய்து பார்த்த சோதனையில் 440-450 நானோமீட்டர் அலைநீலம் கொண்ட நீல நிறம் உமிழக்கூடிய டையோடுகளும், 650-660 நானோமீட்டர் அலைநீலம் கொண்ட சிவப்பு நிற ஒளி உமிழ் டயோடுகளும் தக்காளியை அதிக நாட்கள் இயற்கைத் தண்மை மாறாமல் சேமித்து வைக்கமுடியும் என விளக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்டராபொரி பழத்தை அதிக நாட்கள் சேமித்து வைக்கவும், ஆரஞ்சு பழத்தில் அறுவடைக்குப் பின் ஏற்படும் பூஞ்சைகளின் தாக்குதல்களை கட்டுபடுத்தவும் ஒளி உமிழ் டயோடுகளை பயன்படுத்த முடியும் என்பது சோதனைகளின் இறுதியில் கிடைத்த தகவல்களாகும்.

       ஒளி உமிழ் டயோடுகள், இன்காண்டசண்ட் பல்ப் மற்றும் ஃப்லோரசண்ட் பல்புகளைக் காட்டிலும் அதிக நாட்கள் ஒளி உமிழும் தன்மை கொண்டது. இதன் விலையும் மற்றவைகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் மிகவும் குறைவு. ஆகையால் நன்மைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள ஒளி உமிழ் டயோடுகள் மின்னனு துறையில் ஏற்படுத்தின மாற்றத்தைப் போல உணவு பதப்படுத்தும் துறையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை நடைமுறை சாத்தியாமாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.