Thursday, January 28, 2021

மனித வாழ்க்கையைப் பற்றி….

       மனித வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் சொல்ல தோன்றுகிறது. சமீப காலமாக நான் அதிகம் தேடித் தேடி படிக்கும் விசயமாக இது இருப்பதினாலும், இன்றைய காலகட்டத்தில் நான் சிந்திக்கும் விசயம் இதுவாக இருப்பதினாலும் நான் என்ன தெரிந்து கொண்டேன் என்ன நிலைப் பாட்டிற்கு வந்துள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.

     இந்த பூமியில் வாழும் உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் தான் சிந்திக்கும் ஆற்றல் இருக்கின்றது. மனித இனம் இந்த பூமியில் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகளாகின்றன என்று கூறுகின்றனர். சராசரியாக 75 ஆண்டுகள் வாழக்கூடிய மனிதர்கள் எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டுருக்கின்றனர். சமூதாய கூட்டமாக வாழும் மனிதர்களிடையே நிறைய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. மனிதன் நிம்மதியாக வாழ உணவு, உடை மற்றும் உறைவிடம் அவசியமாக தேவைப்படுகின்றது. மனிதர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் தடையாக இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வுகள் பல வகைப்பட்டவையாக இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் ஜாதி, மதம், பணம் போன்றவைகள் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக நான் கருதுகிறேன். ஆகவே இங்கு ஊழல், லஞ்சம் போன்றவைகளினால் மக்களின் உழைப்பு பெருமளவு சுரண்டப்படுகிறது. இதனால் ஏழைகள் மிகவும் ஏழைகளாகவும் பணக்கார்கள் மேலும் பணக்கார்ர்களாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றனர்.

Saturday, January 2, 2021

தொ.ப மறைந்துவிட்டார்

 


   தமிழகத்தில் கற்றறிந்தோரால் அன்போடு அழைக்கப்பட்ட தொ.பரமசிவன் என்கிற தொ.ப சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி கேட்டு என்னையறியாமல் அழுகை வந்தது. என்காலத்து அறிஞர்களில் நான் மிகவும் மதித்து வந்த ஆளுமை இவர். உண்மையில் இது தமிழர்களுக்கு பல வகைகளில் பேரிழப்புதான். என் போன்ற இளைய தலைமுறையினருக்கு பண்பாட்டை, கலாச்சாரத்தை இவர் சொல்லிச்சென்ற அளவுக்கு எளிமையாகவும் ஆழமாகவும் சொல்லித்தர நபர்கள் குறைவே. நான் அவருடைய புத்தகங்கள் சிலவற்றை படித்துள்ளேன். யூடியூபில் இவருடைய டாக்குமண்டரி வீடியோவை சில வருடங்களுக்கு முன்பு பார்த்திருக்கிறேன் அதில், தான் சென்று ஆராய்ச்சி செய்த இடங்களையும், சேகரித்துவைத்துள்ள தொல்பொருட்களையும் காண்பித்து அதற்கு விளக்கமும் கொடுத்திருப்பார். தமிழர் மரபுகளை நுணுக்கமாக புரிந்து கொள்ள இவர் எடுத்துள்ள முயற்சிகள் என்றும் போற்றுதலுக்குரியது.

 நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார் தமிழர்கள் அனைவரும் கட்டாயமாக படிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் அவை. தன்னுடைய அனுபவத்தையும் அறிவையும் சேர்த்து எழுதப்பட்ட அப்புத்தகங்கள் காலத்தால் சாகா வரம் பெற்று நிலைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. எனக்கு கு.ஞானசம்பந்தன் ஐயா மூலம் தான் தொ.ப அறிமுகம் ஆனார். ஞானசம்பந்தன் ஐயா எல்லா மேடைகளிலிலும் தொ.ப-வைப் பற்றி எதாவது ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டே இருப்பார் அப்படி ஒரு புத்தக கண்காட்சியில் சொற்பொழிவு நிகழ்த்தும் பொழுது அவர் படித்து அனுபவித்த புத்தகங்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தார் அந்த சொற்பொழிவில் தெ.பவைப் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்களைப் பற்றியும் சிலாகித்து பேசினார். நான் அதைக் கேட்டவுடன் தொ.பவை தேட தொடங்கினேன் இது நடந்து ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்கும்.

முதலில் அவரிடம் எனக்கு பிடித்த விசயம் அவருடைய எளிமை. எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு அவர் தரும் விரிவான ஆழமான விளக்கம் என்னை வசிகரித்து அவரை பின் தொடரவும், அவருடைய புத்தகங்களை வாங்கி படிக்கவும் வைத்தது. என்னை மேலும் ஆச்சரியப்படுத்திய விசயம் கோயில்களையும், தமிழர் மரபுகளையும் ஆர்வமுடன் ஆராய்ந்தாலும் பெரியாரின் மீதும் அவருடைய கருத்துக்கள் மீதும் ஈர்ப்புடையவராய் திகழ்ந்ததைச் சொல்வேன். 

தொ.ப-வை வெளியில் இருந்து ரசித்த ரசிகன் நான் என்றமுறையில் அவருடைய மறைவிற்கு இரங்கள் தெரிவித்து ஒட்டியிருந்த போஸ்டர்களில் அவருடைய சாதியை சொல்லி அந்த இணத்தவர்கள் தாங்கள் என்று பெயர் போட்டு இரங்களை தெரிவித்திருந்ததை பார்க்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது.

பண்பாட்டை, கலாச்சாரத்தை ஆராய்ந்து சொன்ன அறிஞரையும் பொதுமனிதனாக பார்க்கும் தன்மை அற்றவர்களாகத்தான் இந்த சமுதாய மக்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றனர். இது அறிவுசார்ந்த தளத்தில் இயங்க தொ.ப அவர்கள் நமக்கு அளித்துள்ள புத்தகங்களை படித்து, தெளிந்து அதை அனைவருக்கும் சென்று சேர்க்கும் செயலை நாம் தீவிரமாகச் செய்ய வேண்டும். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நியாமான அஞ்சலியாக இருக்க முடியும். என்னை பொருத்தவரையில் தமிழர்கள், வாழும் காலத்தில் போற்ற மறந்த பல அறிஞர்களுள் தொ.ப-வையும் சேர்த்து விட்டார்களே என நினைக்கும் போதுதான் வருத்தமாக இருக்கிறது.    

Friday, January 1, 2021

Welcome 2021

 பொதுவா டிசம்பர் மாத இறுதியில் பெரும்பாலனவர்கள் நினைப்பது என்னவென்றால் அடடே அதுக்குள்ளயும் இந்த வருடம் முடிஞ்சிடிச்சா எனவாகத்தான் வழக்கமாக இருக்கும். ஆனால் 2020-ம் வருடம் அப்படியில்லை என்பது எல்லொருக்கும் தெரியும். எப்படா இந்த வருசம் முடியும் என நாட்களை எண்ணிக்கொண்டு தள்ளவேண்டிய நிலைக்கு தல்லப்பட்டுவிட்டோம். பொருளாதர இழப்பு, வேலைவாய்ப்பு இழப்பு, மனஉலச்சல் என பல இன்னல்களை போன வருடம் நமக்கு கொடுத்துவிட்டது. பல பேர் மரணமடைந்தனர். நிறைய கெட்ட செய்திகளை கேட்க நேர்ந்தது. இப்படியாக கறுப்பு ஆண்டாக வரலாற்றில் பதியும் வகையில் கொரனா மாற்றிவிட்டதை நினைக்கையில் வருத்தமாகத்தான் உள்ளது. இருந்தாலும் அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி இன்று 2021-ல் அடியெடுத்து வைக்கிறோம். சென்ற மகிழ்ச்சி திரும்பிட, ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்திட இந்த வருடம் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வருடத்தை வரவேற்போம்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



அன்புடன்

தா.அருள்