Monday, May 29, 2023

ஜாதகம், ஜோதிடம் நம்பலாமா? வேண்டாமா?

 


   நான் வணங்கும் குரு பேராசிரியர் க.மணி அவர்கள். சத்சங்கத்தில் ஒரு நாள் ஜோதிடம் உண்மை எனக் கூறினார். சத்குரு சாதரணமாக எதையும் கூறுவதில்லை அப்படி அழுத்தம் திருத்தமாக கூறினால் அதற்கு அர்த்தம் இருக்கிறது என்று பொருள். எதையும் நன்கு தெரிந்து கொண்டு ஆராய்ந்த பிறாகே சரி என ஏற்றுக்கொள்ளக் கூடியவர். இதை ஏன் சொல்கிறேன் என்றால் மணி சார் எனக்கு பரிட்சயம் ஆவதற்கு முன்பு வேதம், கடவுள், ஜோதிடம் இவைகள் மீது நம்பிக்கை இல்லாதவனாய் இருந்தேன். ஆனால் சார் சத்சங்கத்தில் புரியும் படி விளக்கியதால் எனக்குள் இருந்த அறியாமை விளகியது.

   ஒரு காலத்தில் ஜோதிடம் பொய் என்ற கண்ணோட்டத்தில் அதை முழுவதும் படிக்காமலும், தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாமலும் எதிர்த்து வந்தேன். குரு உண்மை எனக் கூறியவுடன் ஜோதிடத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. யூடியூபில் வீடியோக்களையும், இன்டர்நெட்டில் Blog கட்டுரைகளையும், ஜோதிட சம்பந்தமான புத்தகங்களையும் பார்க்கவும் படிக்கவும் ஆரம்பித்தேன். தற்சமயம் ஜோதிடத்தின்  தாத்பரியத்தை ஒரளவிற்கு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது,

   நான் அறிவியல் மாணவன் எதையும் ஆராய்ச்சி மனப்பாண்மையுடன் பார்க்கும் பழக்கம் கொண்டவன். இயற்கையில் எல்லாம் விதிப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன. அமானுஷ்யமாகவோ, தர்கரீதியாக விளக்க முடியாத விசயங்களையோ நான் உண்மை என ஏற்றுக் கொள்வதில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஜோதிடம் வானில் உள்ள கிரகங்கள் நம் வாழ்வை தீர்மானிக்கின்றன என்று கூறுகின்றது. எங்கோ பல லட்சம் கோடி கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள கிரகங்களின் நகர்வு எப்படி மனித வாழ்வை பாதிக்கும்? இது தான் பெரும்பாலனவர்களின் அடிப்படைக் கேள்வி. இதை சில உதாரணங்களை கொண்டு புரிந்து கொள்ள முயவோம்.

     அறிவியலில் Interpretation என்று சொல்லுவார்கள் ஒன்றை இன்னொன்றுடன் பொருத்தி பார்த்து விளக்க முயல்வது அதாவது Thermometer வெப்பநிலையை துல்லியமாக கூறுகின்றது. செயற்கையாக உருவாக்கப்பட்ட கருவியினால் எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்ல முடியும். இதற்கெல்லாம் ஒரு முறையை உருவாக்கி இருக்கிறோம். இதனை Standards என்று கூறுவார்கள். தூய நீர் கொதிக்கும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் என்பது ஒரு Standard Value. இயற்கையில் பலவிதமான உலோகங்கள் (Metals) இருக்கின்றன. உதாரணத்திற்கு இரும்பு, அலுமினியம், பாதரசம், பித்தளை என வித விதமான உலோகங்களை சூரிய வெளிச்சத்தில் இரண்டு மணி நேரம் வைப்பதாக கொள்வோம். இரண்டு மணி நேரம் கழித்து எல்லா உலோகத்தையும் தொட்டு பாருங்கள். ஒவ்வொன்றும் வேறு வேறு வெப்பநிலையை ஏற்றிருக்கும். இதை தன் வெப்ப ஏற்புத்திறன் (Specific Heat) என்று சொல்கிறார்கள்.

    இயற்கை இவ்வாறு இருக்கையில் வெப்பநிலையை துல்லியமாக அளவிட உலோகங்களின் வெப்ப ஏற்புதிறனை Standard Value-வுடன் Interpretation செய்து வெப்பநிலையை கணக்கிடுகிறார்கள். Mercury Thermometer-ல் வெப்பநிலை உயர உயர பாதரசம் மேலே எழுகிறது. பாதரசம் மேலே எழுவதை Standard Value-வுடன் Interpretation செய்து இவ்வளவு வெப்பநிலை என கணக்கிடுகிறோம். இதுமாதிரி அழுத்தம், வேகம், ஒலி மற்றும் ஒளி போன்றவைகளையும் துல்லியமாக கணக்கிட முடியும். ஒன்றை மற்றொன்றுடன் Interpretation செய்து பார்க்க நிறைய பரிசோதனைகள் (Experiments) தேவை. பயன்படுத்தப்படும் பொருட்களின் தன்மை (Material Properties) பற்றி நன்கு தெரிந்தால் மட்டுமே துல்லியமான கணக்கீடு என்பது சாத்தியம்.

ஜோதிடமும் இது மாதிரி Interpretation செய்து பார்க்கும் முறைதான். நமது முன்னோர்கள் வானியலை நன்கு ஆராய்ந்துள்ளனர். வானியல் மாற்றங்களை மனித வாழ்க்கையோடு Interpretation செய்து பார்பதே ஜோதிடம். இதிலும் துல்லியம் என்பது சாத்தியம் தான். ஒரு ஜோதிடர் துல்லியமாக பலன் சொல்வதற்கு மிகுந்த சாஸ்திர ஞானம் கொண்டிருக்க வேண்டும். மூல நூல்களை குருவின் உதவியுடன் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கும் திறனும் ஆராய்ச்சி மனப்பான்மையும் கொண்டிருக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து.

கிரகங்களும் இயற்கை விதிப்படிதான் இயங்குகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஜோதிட விசயங்கள் மூல நூல்களில் துல்லியமாக சொல்லப்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் நீண்ட நெடிய ஆராய்ச்சிகளுக்கு பிறகே இந்த சாஸ்திரம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆழ்ந்து படிக்கையில் தெரிந்து கொள்ள முடிகிறது.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும். மனித வாழ்க்கைப் பற்றி சில கருதுகோள்கள் நிலவுகின்றது அது என்னவென்று பார்ப்போம். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் இவை.

  1. மனித பிறவி என்பது நாம் செய்த பாவ புண்ணியங்களை கழிப்பதற்காக நமக்கு கொடுக்கப்படுகிறது. 
  2. பிறக்கும் முன்பே நமது இந்த ஜென்மத்தினுடைய விதி தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றது. அதன்பின் தான் பிறப்பு நடக்கிறது. 
  3. மறுபிறப்பு உண்டு. நாம் எடுத்திருக்கும் இந்த பிறவியே பல கோடி பிறவிகளில் ஒன்று. 
  4. நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் சித்தத்தில் சேமிக்கப்படுகிறது. முற்பிறவிகளில் நடந்தவைகளும் நம் சித்தத்தில் இருக்கின்றன.

   ஜோதிடத்தை ஏற்றுக்கொள்ளும் முன் நான் மேலே சொன்ன நான்கு விசயங்களை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும் ஏனெனில் ஜோதிடம் இந்த அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

   மறுபிறவி பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் நிறைய நடந்துள்ளன. ஆராய்ச்சி முடிவுகள் மறுபிறவி உண்மை  என கூறுகின்றது. நடைமுறை வாழ்க்கையிலும் மறுபிறவி என்பது உண்மை என நம்புவதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. நம் வாழ்க்கையில் சில விசயங்களை அனுமானத்தின் மூலம் யூகித்து உண்மை என புரிந்து கொள்கிறோம். உதாரணத்திற்கு மதிய வேலையில் வயிற்றில் எரிச்சலுடன் கூடிய சப்தம் வந்தால் வயிறு பசிக்கிறது என்று புரிந்து கொள்கிறோம். தூரத்தில் எங்கோ புகை வருவதை பார்த்து அங்கே ஏதோ எரிந்து கொண்டிருக்கிறதென்று பக்கத்தில் இருந்து பார்க்காமலேயே நமக்கு புரிந்துவிடுகிறது. நெருப்பில்லாமல் புகையாது என்பதுபோல அனுமானத்தின் வாயிலாக மறுபிறவி விசயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

    புள்ளியல் துறையில் கூறப்படும் நிகழ்தகவு கோட்பாடு போன்றதுதான் ஜோதிடமும். சராசரி 60 ஆண்டுகள் கொண்ட மனித வாழ்க்கையை பிறந்தது முதல் இறக்கும் வரையில் நடக்கும் அனைத்து சம்பவங்கள், பார்க்கும் மனிதர்கள் அனைத்தையும் நாள் வாரியாக, மணித்துளி வாரியாக கணித்து கூறுவது என்பது யாராலும் முடியாத ஒன்று. இன்றைய கால கட்டத்தில் அறிவியல் முன்னேற்றம் வானிலை முன்னறிவிப்புகளை நாள் வாரியாக, மணித்துளி வாரியாக மிகத் துல்லியமாக கூறுகின்றன. இது மாதிரி மனித வாழ்க்கை சம்பவங்களை மிகத் துல்லியமாக கணித்துக் கூற எந்தவிதமான கணித மாதிரிகளும் (Mathematical Model) இன்றுவரை உருவாக்கப்படவில்லை.

    எல்லோருக்கும் அவர்கள் வாழ்வில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆசையும் ஆர்வமும் இருக்கின்றது. பெரும்பாலனவர்களுக்கு பணம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என அனைத்தும் தமக்கு வேண்டும் என நினைக்கின்றனர். வாழ்க்கையில் துன்பமே வரக்கூடாதென்றும் நோய் நொடி ஏதுமின்றி இறப்பின்றி வாழவேண்டும் என்பதே இந்த பூமியில் வாழும் அனைவரின் எதிர்பார்ப்பும். ஆனால் இயற்கை மனித வாழ்க்கையை வேறுவிதமாக வடிவமைத்திருக்கிறது. முரண்பாடுகள் மனிதர்களுக்கு  தெரிந்தாலும் நிதர்சணத்தை ஏற்றுக்கொள்ள ஒரு தயக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த தயக்கத்திற்கு சமுதாயத்தில் மவுசு அதிகம்.

   இன்றைய போலி ஜோதிடர்கள் இதை நன்கு பயன்படுத்தி பணம் பார்க்கின்றனர். ஜோதிடம் என்பது ஒரு சிறந்த தொழில் என்பது அவர்களுடைய கண்ணோட்டம். தொழில் என்று வந்துவிட்டாலே லாபம் தான் முக்கியம். நல்ல ஜோதிடர் என்று நாலு பேர் சொல்லிவிட்டால், ஊடகங்கள் மதிப்பளித்து புரமோட் செய்ய  ஆரம்பித்து விட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம் தான். எனக்கு தெரிந்து ஜாதகம் பார்க்க 500 முதல் 5000 வரை பணம் கேட்கின்றனர். 500 மற்றும் 1500 பொதுவாக கேட்கப்படும் தொகையாக உள்ளது.

    ஜோதிடர்கள் முதலில் தாங்கள் கேட்கும் பணத்தை செலுத்திவிட்டு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் மற்றும் நம்முடைய கேள்வி என்ன என்பதை ஜோதிடம் பார்க்கும் முன் அவர்களிடம் கூறிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் நம்மை அனுக அனுமதிக்கின்றனர். பலன் கூறும் போது வாழ்க்கையில் ஏற்கனவே நடந்த ஓரிரு விசயங்கள் அவர்கள் செல்வதுடன் ஒத்துபோவது போல் தோன்றும். என் நண்பர் ஒருவர் கூறினார் நடந்தவற்றை கூறுபவர் ஒரு நல்ல ஜோதிடர் கிடையாது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை துல்லியமாக கணித்த்ய் கூறுபவரே நல்ல ஜோதிடர். ஏனெனில் ஏற்கனவே நடந்தவைகளை நாம் கொடுக்கும் முன் விவரங்களைக் கொண்டு கணிக்க முடியும். உதாரணத்திற்கு எனக்கு முப்பது வயது ஆகிறது எப்போது என் திருமணம்? என்ற கேள்வியை கேட்டிருக்கிறோம் என்றால் ஏன் இவ்வளவு நாள் திருமணம் ஆகவில்லை என்ற விவரங்களை கூறுவது யாவர்கும் எளிதே. இதில் ஒரு சில விதிவிலக்குகள் இருக்கின்றன மறுப்பதற்கில்லை.

   வாழ்க்கையை பற்றின சில புரிதல்களை சிந்தித்து தெளிவாக்கிக் கொண்டால் எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்பில்லாமல் வாழ முடியும். இந்துக்கள் ஜோதிடத்தை ஐந்தாவது வேதம் என ஏற்றுக்கொள்கின்றனர். ஆகையால் ஜோதிடம் பொய் என முற்றிலும் மறுப்பதற்கில்லை.

வாழ்க்கை பற்றியும் ஜோதிடம் பற்றியும் எனது சில புரிதல்கள் இவை:

  1. நமது வாழ்க்கையில் நடக்கும், நடக்கபோகும் சம்பவங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன. யாராலும் அதை மாற்ற முடியாது.
  2. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை.
  3. ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களால் விதியை மாற்ற முடியாது.

   இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு கீழ்கண்ட கேள்விகள் மனதில் தோன்றலாம்

  1. ஒரு மனிதன் தன்னுடைய ஜாதகத்தை தெரிந்து கொள்வது அவசியமா?
  2. நல்ல ஜோதிடர்களை எப்படி கண்டுகொள்வது?

   இதற்கான என்னுடைய பதில் மேற்கூறிய என்னுடைய மூன்று புரிதல்களை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்களென்றால் ஜாதகத்தை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு சுலபமாக வந்து விட முடியும். ஆனால் நம்மிடம் இருக்கும் மனக்குரங்கு எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டிய வண்ணம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் துன்பத்தை கண்டு ஏற்படும் பயம் நம் மன சஞ்சலத்தை அதிகரிக்கிறது. ஒரு நல்ல ஜோதிடர் என்பவர் பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாக கொண்டிருக்கமாட்டார். அவருக்கு நன்றாக தெரியும் இதனால் பாவத்தை நம் கணக்கில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று. நான் கடைசியாக என்னுடைய ஜாதகத்தை பார்த்த ஜோதிடரிடம் ஒரு நல்ல ஜோதிடரை எப்படி கண்டு கொள்வது என கேட்டேன் அதற்கு அவர் அது உங்களுடைய தலைவிதியை பொறுத்தது என்றார். 

 


அன்புடன்

தா. அருள்.


No comments:

Post a Comment