Tuesday, May 2, 2023

கடிதம் 3: உணவு பற்றி காந்தியடிகள்…

 இக்கடிதம் அக்டோபர் 4, 2015 அன்று எழுதியது. 



அன்புள்ள சீனியர் அவர்களுக்கு,
     சமிபத்தில் நான் படித்த உணவு என்ற புத்தகம் என்னளவில் சில சிந்தனைகளை உணர்வுபூர்வமாக ஏற்படுத்திவிட்டது. காந்தியடிகள் மேற்கொண்ட உணவு பரிசோதனைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் விதமாக ஹரிஜன்யங் இந்தியா ஆகிய பத்ரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். இதை படிக்கத் தொடங்கியவுடன் உங்களுடைய ஞாபகம் தான் எனக்கு வந்தது. நான் ஒரு ஐந்து வருடங்களுக்கு மேல் உங்களுடன் பழகியிருக்கிறேன் என்ற முறையில் கவனித்த விசயம் என்னவென்றால் காந்தி அவர்கள் சொல்லியிருக்கும் உணவு சீர்திருத்த முறைகளை வெகு காலத்திற்கு முன்பே நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று இன்றுதான் எனக்கு புரிகிறது.

  உணவு பற்றிய விவாதங்கள் நம்மிடையே இதுவரை அதிகம் ஏற்பட்டதில்லை மற்ற விசயங்களைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம் கோபம் வரும் அளவுக்கு கார சாரமான விவாதங்கள் நம்முள் நடந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் நான் நினைத்தது என்னவென்றால் நீங்கள் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருப்பதனால் பழமைகளை கடைபிடிக்க நினைத்து இவ்விசயங்களை (உணவு பத்தியம்) அதிகம் யோசித்து பார்க்காமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஆனால் அது எவ்வளவு பெரிய அறியாமை என்று இன்றுதான் தெரிகிறது. ஒருவேளை நீங்கள் விவாதத்தை ஏற்படுத்தி தர்க்க ரீதியான காரணங்களை முன்வைத்திருந்தால் எனக்குள் உணவு சீர்திருத்தத்தை பற்றிய எண்ணங்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் வைராக்கியத்துடன் ஒரு செயலை நீண்ட நாட்கள் கடைபிடிப்பதில் எனக்கு பயிற்சிகள் இன்னும் சொல்லிக் கொல்லும் படியாக ஏற்படவில்லை என்பதையும் கூறவேண்டும். ஒருவேளை உணவு பழக்கங்களை எனக்கு புரியும் படி விளக்கி கூறியிருந்தாலும் அதை கடைபிடிக்க தயங்கியே இருப்பேன்.

   சரி நான் என்ன படித்தேன் என்பதை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன். இவ்விசயங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தால் நீங்கள் உங்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் உணவின் மீதான மதிப்பீடு மிகவும் உண்மை என்பதை உறுதிசெய்து கொள்ள உதவியாக இருக்கும்.

   காந்தி சொல்கிறார் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்அதை நிதானமாக பற்கலின் உதவி கொண்டு மென்று வாயில் ஊறும் எச்சில் நாம் மெல்லும் உணவுடன் நன்கு கலந்து வயிற்றுக்குள் அனுப்ப வேண்டும். முடிந்த வரையில் வெப்பத்தை பயன்படுத்தி சமைக்காமல் பச்சையாக அப்படியே சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் சத்துக்கள் நேரடியாகமுழுமையாக உடலில் சென்று சேறும். இக்காரியங்கள் நமக்கு சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் உடல் ஜீரண மணடலத்திற்கு வேலையை குறைக்க வழி செய்யும். இதனால் சமயலுக்காகும் செலவும் குறைவே. ஆதலால் உடல் ஆரோக்கியத்துடனும்உற்சாகத்துடனும் செயல்பட இவ்விசயங்கள் தீவிரமாகவைராக்கியத்துடனும் பின்பற்ற வேண்டும் என கூறுகிறார்.

   இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிதர பல அறப்போராட்டங்களை முன்னொடுத்த காந்தி உணவு விசயத்தில் மேற்கொண்ட சோதனைகளை படிக்க படிக்க ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் அவருடைய ஆளுமையின் மீது என்னுடைய மதிப்பும் அதிகரிக்கிறது.


அன்புடன்
தா.அருள்...  

No comments:

Post a Comment