Monday, May 1, 2023

பொன்னியின் செல்வன் பாகம் 2

 

     இன்று பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் பார்த்தேன். தியேட்டருக்கு சென்றல்ல; நெட்டில். தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் பழக்கம் என்றோ வழக்கொழிந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன இங்கு அதை சொல்வதல்ல என் நோக்கம்.

     பத்து வருடத்திற்கு முன் கனடாவில் வசிக்கும் என் நண்பன் தமிழ் புத்தகங்கள் வாங்கி தரும்படி கேட்டு ஒரு பட்டியல் அனுப்பியிருந்தான். அதில் விவேகான்ந்தர் எழுதிய கர்ம யோகம் மற்றும் கல்கியின் சிவகாமி சபதம் குறிப்பிடத்தக்கவை. புத்தக வாசிப்பு தொடங்கியிருந்த காலம் அது. கதை புத்தகங்கள் மீது அதிக எனக்கு நாட்டமுமில்லை படித்ததும் இல்லை அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இவைதான் என்னோட ஏரியா.

     நன்பனுக்காக புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்திருந்தேன். புத்தகத்தை அனுப்ப இரண்டு நாட்கள் இருந்த நிலையில் எனக்கொரு சந்தேகம் ஏற்படட்து கனடாவிலிருந்து வாங்கி படிக்கும் அளவிற்கு இதில் அப்படி என்ன இருக்கிறது என்றும் அனைவரும் ஏன் கல்கியை சிலாகித்து பேசுகின்றனர் என்றும் எனக்குள் கேள்வி எழுந்தது. சுமாரன மனநிலையில் என்னதான் இருக்கிறதென்று படித்துதான் பார்ப்போமே என்று சிவகாமி சபதத்தை படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் பக்கங்கள் போக போக புத்தகத்தை கீழே வைக்கவே மனது வரவில்லை. படிக்கும் போது மொழி நடை மற்றும் அதிக திருப்புமுனைகள் தந்த சுவாரசியம் எவ்வளவு நேரம் படித்தோம் என்று தெரியாமல் மணிக்கணக்கில் படிக்க வைத்து விட்டது அந்த புத்தகம்.

     சிவகாமி சபதம் ஒரு மணி நேரத்திலோ அல்லது ஒரு நாளில் படித்து முடிக்கக்கூடிய புத்தமல்லாததால் வேறு வேலையாக எங்கு சென்றாலும் மனதில் வீட்டிற்கு எப்போ செல்வோம் மீண்டும் விட்ட இடத்திலிருந்து எப்போது படிப்போம் என்று மனது பரபரப்பை ஏற்படுத்தியது. தவிர கதை சம்பவங்களும் கல்கியின் வார்த்தைகளும் என் மனதை நாள் முழுதும் நிரப்பி இருந்தன. புத்தகத்தை மூன்று நாட்களில் படித்து முடித்தேன் அதன் தாக்கத்திலிருந்து இயல்பு நிலைக்கு வர எனக்கு ஒருவாரம் எடுத்தது. ஏறக் குறைய பித்துபிடித்த நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. வார்த்தைகளில் வருணிக்க முடியாத ஆனந்தத்திற்கு சென்று வந்தேன். அன்றிலிருந்து கல்கி என்றாலே ஒரு பீதி எனக்குள் தொற்றிக்கொள்ளும். அதன் பிறகு நிறைய புத்தக கண்காட்சிகளுக்கு சென்று வந்திருக்கிறேன். ஒரு வார பாதிப்பிற்கு பயந்து கல்கியை வாங்காமல் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

     பொன்னியின் செல்வன் நாவல் நான் படித்ததில்லை ஆனால் அதை படித்தவர்கள் கூறியிருக்கும் விமர்சணங்களை நிறைய படித்திருக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு மகளீர் கூட்டம் பொன்னியின் செல்வத்தில் சொல்லப்பட்ட இடங்களுக்கு சென்று தங்கள் அனுப்பவத்தை பகிர்ந்து கொண்ட வீடியோவை யூடிபில் பார்த்தேன். காலத்தை வென்று இன்றளவும் விற்பனையில் சாதனை படைக்கும் கல்கியின் நாவல்கள் சமூகத்தில் சாதரன மனிதர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை முழுதும் படிக்க எனக்கும் ஆசை தான் அந்த குறையை இயக்குநர் மணிரத்னம் போக்கியுள்ளார் என்றே கூறவேண்டும்.

 முதல் பாகம் பார்த்தவுடனேயே இரண்டாம் பாகத்தை கண்டிப்பா பார்த்தே ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். இம்மியளவும் சலிப்பை ஏற்படுத்தாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம் எதையும் குறைசொல்வதற்கில்லை குறிப்பாக சொல்வதென்றால் வசனம், இசை மற்றும் ஒளிப்பதிவு கிளாஸ். ஒரு சிக்கலான கதையை சுவாரசியம் குறையாமல் சொல்வது என்பது மிகவும் சவலான காரியம் அதில் படக்குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர். சோழ மன்னரின் வரலாறு தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வேண்டிய ஒன்று அதற்கு இந்த படம் ஒரு சிறந்த ஆவணம். கடும் பொருட் செலவையும் மிகுந்த உடல் உழைப்பையும் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் அனைத்து வகையிலும் மன நிறைவைத் தருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு சென்று நவீன தொழில்நுட்பத்தில் படத்தை பார்க்க முடிவு செய்திருக்கிறேன்.

அன்புடன்

தா. அருள்.


No comments:

Post a Comment