Tuesday, May 2, 2023

எனது எண்ணங்கள்

          எழுதுவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட பல ஞாயமான காரணங்கள் இருந்தன. எழுத்து பயிற்சியை மேற்கொள்ள நோட்டு புத்தகத்தில் எனக்கு தோன்றியதை எழுத ஆரம்பித்தேன். நான் இந்த செயலை ஆரம்பித்த நாள் 07.10.2012 திரும்பி பார்க்கையில் பத்து வருடம் நிறைவடைந்துவிட்டது எனது எழுத்தார்வம் இன்று வரை குறையவில்லை என்பதில் மகிழ்ச்சி ஆனால் நான் இன்னும் நிறைய எழுதி பழக வேண்டும் என்பது தெரிகிறது. நான் முதன் முதலில் என் நோட்டு புத்தகத்தில் எழுதியதை அப்படியே இங்கு தருகிறேன். பாரதியின் வரிகளை படித்து விட்டு எழுத தொடங்கியதால் அந்த வரிகளை முதலில் தந்துவிட்டு மேற்கொண்டு தொடர்கிறேன்.


”மனமாகிய குரங்கு செய்வதையெல்லாம் எழுதிக் கொண்டு போனால் காலக்கிரமத்தில் அதைவசப்படுத்திவிடலாம் என்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்குமுன்பாக அதன் இயல்புகளையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்மால் நன்றாக அறியப்படாததை நாம் வசப்படுத்தமுடியாது. சித்தத்தை வசப்படுத்தும் முன் சித்தத்தை அறிய வேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து எழுதிக்கொண்டு வந்தால் அதன் தன்மை முழுவதையும் அறிய ஹேதுவுண்டாகுமென்பது என்னுடைய தீர்மானம்”

     -மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

 

முதல் நாள்
07.10.2012 (ஞாயிற்றுக் கிழமை)

      இன்றிலிருந்து நான் ஒரு புதுப்பழக்கத்தை ஆரம்பிக்கிறேன். அது என்னவென்றால் எழுதுவது! அது நாட்குறிப்பா அல்லது வேறு எதாவதா என்று தெரியவில்லை. என் மனதில் பட்டதை எழுதப் போகிறேன். முதலில் என் பெயர் அருள் செல்வம். நான் ஒரு வாழப்பழ சோம்பேறி. என் வாழ்நாளில் இது போன்ற என்னற்ற பழக்கங்களை ஆர்வமாக தொடங்கி மிக விரைவிலேயே கைவிட்ட அனுபவங்கள் நிறைய உண்டு. இப்பழக்கம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது எனக்கு தெரியாது. இக்கனத்தில் நான் மிகுந்த ஆவலாக எழுதுகிறேன். ஒரு வேலை இப்பழக்கம் நீண்ட நாட்கள் தொடரலாம் அல்லது தொடராமலும் போகலாம். எனக்கு புத்தகங்கள் வாசிப்பதிலும் சொந்தமாக நானே எழுதுவதிலும் சமீப காலங்களில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் இப்பழக்கம் நீண்ட நாட்கள் தொடர வேண்டும் என்பது என் ஆசை.

     நான் ஏன் இக்காரியத்தை இன்று தொடங்குகிறேன்? ஏனென்றால் இன்று இண்டர்நெட்டில் பாரதியை மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தகத்தின் விமர்சனக் கட்டுரையை படித்தேன். அது எனக்குள் சிறு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அதில் பாரதி தினந்தோறும் நாம் செய்யும் விசயங்களை எழுதி வைத்தால் நம் குணத்தை பற்றி அறிய முடியும். குணத்தை பற்றி தெரிந்து கொள்வதால் நம் தவறுகள், பலம் மற்றும் பலவீனங்களை பற்றி அறிய முடியும் என்று சொல்லி இருந்தார். இந்த விசயம் எனக்கு பிடித்திருக்கிறபடியால் இதை ஒரு சிறு முயற்சியாக மேற்கொள்கிறேன்.

      இன்று ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது நாற்பதிற்கு எழுந்தேன். மெஸ் பத்து மணிக்கு மூடி விடுவார்கள் என்பதால் பல்லை மட்டும் விலக்கிவிட்டு நேராக மெஸ்ஸிற்கு சென்று விட்டேன். காலை உணவாக கார்ன் பிளேக்ஸ் மற்றும் ஒரு டம்ளர் டீ சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் டீவி பார்த்துவிட்டு ரூமிற்கு வந்தேன்.

     துணி துவைக்க வேண்டும் என்பது இன்றைய திட்டமாக காலையில் எழுந்தவுடன் நினைத்திருந்தேன் ரூமிற்கு வந்தவுடன் கொஞ்சநேரம் இங்கிலிஷ் வார்த்தைகள் படித்தேன். அப்படியே Mp3 பிளேயரில் பாட்டு கேட்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. கொஞ்ச நேரம் கேட்டேன் அப்புறம் ஞானவானி பண்பலையில் பதிந்து வைத்திருந்த பேச்சுக்களை கேட்டேன். அடுத்து மணி சாருடைய அறிவியல் நேரம் நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் கேட்டு மொத்தமாக இரண்டு மணி நேரத்தை வீனாக்கிவிட்டேன்.

     மதியம் ஒன்று முப்பது மணிக்கு சாப்பிட்டேன் கொஞ்ச நேரம் பாட்டு கேட்டுவிட்டு தூங்கினேன். மாலை ஏழு முப்பது மணிக்கு எழுந்தேன். இன்று நான் துணி துவைக்கவில்லை ஏன் என்றால் சோம்பேறித்தனம். நாளை காலை பத்து மணிக்கு Storage  வகுப்பிற்கு நான் எந்த துணியை போட்டு போவதென்று தெரியவில்லை.

     இன்று ICC 20-20 மேட்சின் இறுதி ஆட்டம் இலங்கை மேற்கிந்திய தீவுகள் விளையாடின. எட்டு மணியிலிருந்து பார்த்துவிட்டு ஒன்பது மணிக்கு மெஸ்ஸில் இரவு உணவை முடித்தேன். மேட்ச் பத்து முப்பதிற்கு முடிந்தது. நேராக டில்டன் சார் ரூமிற்கு வந்து எஞ்சியிருந்த பிரசண்டேசன் செரிமனியை இண்டர்நெட்டில் லைவாக பார்த்தேன். வெஸ்ட் இண்டிஸ் கோப்பையை வென்றதில் எனக்கு மகிழ்ச்சி. கொஞ்ச நேரம் நெட்டில் உலவிவிட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

     இன்று  PCR அதாவது Polymer Chain Reaction கருவி DNA-வை நகலெடுக்க பயன்படுத்துகிறார்கள் ஜெராக்ஸ் மெசின் போல என்றும், எர்வின் ஸ்க்ரோடிஞ்சர் உலகத்திலுள்ள அனைத்தும் deception அதாவது மாயை போன்ற ஒன்றால் மறைக்கப்பட்டுள்ளது என்றும் Singularity, Plurality என்பது எதுவும் கிடையாது என்பதை விளக்கியிருந்ததைப் பற்றியும், அனிகிலேசன் என்ற வார்த்தைக்கு இருவர் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்றால் கடைசியில் யாராவது ஒருத்தர் வென்று மற்றவர் தோற்பது என்றில்லாமல் இருவரும் இறந்து விடுவதுதான் அதன் அர்த்தம் என்பதையும் புரிந்து கொண்டேன். ஆக மொத்தத்தில் உருப்படியாக இன்று ஒரு வேலையும் செய்யவில்லை அது மட்டும் உண்மை.

 


அன்புடன்
தா. அருள்.



No comments:

Post a Comment