Tuesday, June 6, 2023

அறிவியல் படும்பாடு


இந்த பதிவு 2016-ல் எழுதியது. தமிழில் அறிவியல் கட்டுரையை படித்துவிட்டு மனதில் ஏற்பட்ட சலனத்துடன் இதை பதிவு செய்தேன்.


இந்த விசயத்தை நான் பேசக்கூடாது எனென்றால் நிறைய பேருக்கு கோபம் வரும். இருந்தாலும் மனது கேட்கவில்லை.

 

முன் எச்சரிக்கை: இப்பதிவில் இடம்பெறும் கருத்துக்கள் யாவும் தனிப்பட்ட யாரையும் நிந்தனை செய்வதற்காக எழுதப்படவில்லை என்ற பொருள் விளக்கத்தை முன்னதாகவே சொல்லிக்கொள்கிறேன்.

 

சென்றவாரம் கோயமுத்தூர் மாவட்ட மைய நூலகத்தில் படித்துக் கொண்டிருக்கையில் வேளாண்மை சம்பந்தமான மாத இதழ்களை படிக்க நேர்ந்தது. விவசாய கல்லுரியில இருக்கரோம் என்னதான் எழுதியிருக்காங்கன்னு புரட்டி பார்த்தேன். வேளாண் தகவல்கள் அதிகம் பரிமாரப்பட்டு இருந்தது உண்மையில் மகிழ்ச்சி. ஆனால் விசயம் அதுவல்ல. வேளாண் துறைசார்ந்த கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் முனைவர்களின் கட்டுரைகளும் கண்ணில் பட்டன. ஆசை ஆசையாக கட்டுரையை படித்தால் ஒன்றுமே புரியவில்லை. என்னடா இது தமிழ்லதான் எழுதி இருக்காங்க ஒருவேலை நாம முட்டாளா இருக்கறதனால புரியவில்லையா? என்று மனதிற்குள் ஒர் எண்ணம். இருந்தாலும் அந்த அளவிற்கு நாம அடிமுட்டாள் கிடையாதே ரொம்பவும் அறிவு இல்லைன்னாலும் சின்ன சின்ன அறிவியல் விசயங்களை புரிந்து கொள்ளக்கூடிய சிற்றறிவு நமக்கிருக்கிறதென்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு என் நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரே ஆச்சரியம்! ஒரு நண்பன் சொன்னான் டேய் அதப்போயி உன்ன எவன்டா படிக்க சொன்னான் அக்கட்டுரைகளலெல்லாம் அடுத்தவர்க்கள் படித்து விசயம் தெரிந்து கொள்வதற்கா எழுதப்படுகிறது அது எழுதப்படும் நோக்கமே வேறடா. தலைப்பிற்கு கீழ் பெயர் இருக்கிறதாவென்றுதான் அக்கட்டுரைகளில் நீ பார்க்க வேண்டும் என்று.  எனக்கு புரிந்து விட்டது இது கணக்கு காட்ட எழுதப்படும் கட்டுரைகளா.. சரி தான்.

 

ஒரு காலத்தில் நான் சொட்டுநீர் பாசன கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த போதும்,  இளநிலை ஆராய்ச்சியாளாராக வேலை பார்த்த பொழுதும், ஏன்.. தற்காலங்களிலும் விவசாயிகளையும், சிறு தொழில் முனைவோரையும் அதிகம் சந்தித்து வருகிறேன் என்னுடய சிறிய அனுபவத்தில் நான் உணர்ந்த விசயம் என்னவென்றால் நிறைய விவசாயிகள் நவீன தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். விவசாய கண்காட்சிக்கு வரும் விவசாயிகள், தொழில் முனைவோர்கள் சந்தையில் கிடைக்கும் புதிய தொழில்நுட்பங்கள், புதிய விதை ரகங்கள், நோய்தடுப்புமுறைகளை தங்களுக்கு பயன்படுத்தி கொள்வதில் ஏதேனும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்பதை தெரிந்து கொள்ள அதிக விருப்பமுடையவர்களாகவே இருக்கின்றனர். இப்படி இருக்கும் ஒரு சூழலில் கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு மிகப்பெரிய சமூதாய அக்கரை இருக்கவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

 பெரும்பாலான விவசாயிகள் இன்னும் ஏழ்மை நிலையில் தான் இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் காசு கொடுத்து மாதாந்திரி புத்தகங்கள் வாங்கி படிப்பதே அபூர்வம் அப்படி இருக்கையில். காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் ஒன்றிரண்டு ஏழை வாசகர்களை மனதில் வைத்து கட்டுரைகளை நம்பகமான தகவல்களைக் கொண்டு செறிவோடு மெத்த படித்தவர்கள் என்று சமூதாயத்தால் மதிக்கப்படுவோர்கள் எழுத வேண்டும். அதுவே பொதுஜன கட்டுரைகளுக்கு அழகு. அதைவிட்டுவிட்டு பதவி உயர்வுக்காக கணக்கு காட்டவேண்டுமென்றும், இதனால் பணம் கிடைக்கும் என்ற நோக்கத்திலும் செயல்பட்டால் அது ஏழை விவசாயிகளையும், பணம் கொடுத்து வாங்கி படிப்பவர்களையும் ஏமாற்றும் செயல்களாகத்தான் கருதப்படுமே ஒழிய உண்மையான தகவல் பரிமாற்றமாக அது இருக்காது.


No comments:

Post a Comment