Saturday, August 12, 2023

பாரதியார் ஒரு அத்வைத வேதாந்தி


    பாரதியின் வேத முகம் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். சு. கோதண்டராமன் எழுதிய இந்த புத்தகம் வலையில் இலவசமாக கிடைத்தது. பலமுகம் கொண்ட பாரதியின் ஆன்மீக முகத்தை குறிப்பாக கடவுள், வேதம் இவைகளைப் பற்றிய பாரதியின் நிலைப்பாட்டை கூறும் வகையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளதால் என் கவனத்தை ஈர்த்தது. பாரதியின் வாழ்க்கை வரலாற்றை புரிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதுவரையில் எழுதப்பட்டுள்ள புத்தகங்களில் பாரதியின் ஆன்மீகப் பார்வை  அதிகம் வெளிப்பட்டது இல்லை. கோதண்டராமன் அவர்களின் வேத முகம் இந்தக் குறையை போக்கியுள்ளது. பாரதியை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த ஆவணம்.

     பாரதியார் ஒரு அத்வைத வேதாந்தி. அவருடைய பெரும்பாலான படைப்புகள் அத்வைத வேதாந்த கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்டவை, சிலவற்றில்  அத்வைத கருத்துக்கள் நேரடியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகள் அத்வைதம் பற்றிய புரிதல் உள்ளவர்களுக்குத் தெரியும். பாரதியின் சிறப்பே பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் படைப்புகளை உருவாக்குவது, ஆனாலும் கூட அத்வைதம் புரிந்து கொண்டு பாரதியை படிப்பதற்கும் அத்வைதம் புரியாமல் பாரதியை படிப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றது. 

    கடவுள் கோட்பாட்டை மாறுபட்ட கோணத்தில் விளக்குவதே அத்வைதம். இதற்கு  இரண்டற்ற ஒன்று என்பது பொருள். இங்கே இருப்பவைகள் எல்லாம் கடவுள் மட்டுமே. இருப்பதெல்லாம் இறைவனே. பிரபஞ்சத்திலுள்ள அனைத்திலும் கடவுளின் தன்மை வெளிப்பட்டு இருக்கிறது. கடவுள், உலகம், உயிர்கள்  இவைகள் வேறு வேறு என்பதை அத்வைதம் மறுக்கிறது. நாம் இதை கண்டு கொள்ளாமலும் இதைப் பற்றி சிந்தித்து பார்க்காமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உள்ளதை உள்ளபடி காணும் அறிவு வந்துவிட்டால் நமது அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இந்த அறிவை பல்வேறு நிலைகளிலிருந்து விளக்குவதே அத்வைதம்.

   வேதம் என்பது என்ன? உதாரணத்திற்கு ஒரு செல்போன் தாயாரிக்கும் நிறுவனம் சொல்போனை விற்பனை செய்கையில் அதன் விளக்க புத்தகத்தை வைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும். அதில் செல்போனை சிறந்த முறையில் பயன்படுத்திட விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதுபோல மனிதன் தன் வாழ்க்கையை துன்பங்கள் இன்றி வழ்ந்திட கொடுக்கப்பட்ட விளக்க புத்தகமே வேதம். இதில்

  1. மனிதன் என்பவன் யார்?
  2. எதற்காக மனித பிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது
  3. மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன?
  4. அந்த நோக்கத்தை அடைய வழிகள் என்ன?

 என்பவை பற்றிய விளக்கங்கள் உள்ளன.

   வேதத்தில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முதல் பகுதி கர்ம காண்டம் இது பல்வேறு விதமான யக்ஞங்கள் செய்யும் விளக்கங்களை கூறுகிறது. இரண்டாம் பகுதி ஞான காண்டம் இதில் ஈச்வரன் (கடவுள்), ஜீவன் (மனிதன்), உலகம் பற்றியும் ஜீவ ஈச்வர ஐக்கியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. வேதத்தின் இறுதி பகுதியில் ஞான காண்டம் இடம் பெற்றிருப்பதால் இவற்றை வேதத்தின் அந்தம் அதாவது வேதாந்தம் என்று அழைக்கின்றனர். இதற்கு மற்றொரு பெயர்  உபநிஷத். வேதாந்ததிற்கு அத்வைத விளக்கம் கொடுப்பது அத்வைத வேதாந்தம் எனப்படும். 

      மனிதனின் அறியாமை நீங்கி அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட ஞான காண்டத்தில் கூறப்பட்ட கருத்துக்களை குருவின் உதவிகொண்டு தெரிந்து, தெளிந்து அதன் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஞான காண்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள மனப்பக்குவம் தேவை. கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட விசயங்களைச் செய்து பக்குவமடைந்து சித்த சுத்தி ஏற்பட்ட சாத்வீக குணம் நிறைந்தவர்கள் ஞான காண்டத்தை படிக்க தகுதியுடைய அதிகாரிகளாகிறார்கள்.  

  அத்வைத வேதாந்தத்தை சம்பிரதாய முறைப்படி விளக்கியவர்களில் ஆதிசங்கராச்சாரியார் மிகவும் முக்கியமானவர் அவர் ஏற்படுத்தி தந்த மரபுபடி பாரத தேசத்தில் அத்வைத வேதாந்தம் குரு பரம்பரையாக கற்பிக்கப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர், சுவாமி சின்மயானந்தா, சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் அத்வைதத்தை பாரம்பரிய மரபு மாறாமல் எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  பாரதியார் தன் வாழ்நாளில் ஏழு வருடங்கள் காசியில் தங்கியிருந்தார். அப்பொழுது முறையாக வேதம் பயின்றுள்ளார் குறிப்பாக ஆதிசங்கராச்சாரியாரின் வழி குருபரம்பரையாக வரும் அத்வைத வேதாந்தத்தை குருவின் மூலம் முழுமையாக பயின்று வாழ்க்கையிலும் அதன்படி நடந்தவர் என்பதை அவருடைய படைப்புளை படிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.

 வேதத்தின் அறிவு நம்முள் நிலைப் பெற்றிட மூன்று விசயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    1) சிரவணம் 
    2) மனனம்
    3) நிதித்யாசனம்

    சிரவணம் என்பது குருவழியாக இந்த அறிவை முழுமையாக கற்றுக் கொள்வது. மனனம் என்பது பெற்ற அறிவை அலசி ஆராய்ந்து அதில் ஏற்படும் சந்தேகங்களை குருவிடம் கேட்டு ஐயங்களை நீக்கிக் கொள்வது. நிதித்யாசனம் என்பது பெற்ற அறிவில் சதாசர்வகாலமும் நிலைபெற்று இருப்பது. இதையே திருக்குறளில் 391 குறள் இவ்வாறு கூறுகிறது.

     கற்க கசடற கற்பவை கற்றபின்
     நிற்க அதற்குத் தக
 

     மனித மனதின் இயல்பு சதா சர்வகாலமும் எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டிருப்பது. எண்ணங்களை நெறிபடுத்தி இறை சிந்தனையில் மட்டும் நிலைத்திருக்க நிதித்யாசன தியானம் மிகவும் அவசியம். பெரும்பாலான பாரதியார் கவிதைகள் நிதித்யாசன தியானத்திற்கு பயன்படும்வகையில் படைக்கப்பட்டிருப்பது அத்வைதம் தெரிந்தவர்களுக்கு சுலபமாக புரிந்துவிடும்.

    பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் மற்றும் பகவத் கீதையை பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கின்றனர். அத்வைத கருத்துக்களை பாமரரும் புரிந்து கொள்ள பாரதியும் பிரஸ்தானத்திரிய நூல்களான பகவத் கீதை மற்றும் சில உபநிஷத்துக்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் அஷ்டாங்க யோகத்தை விளக்கும் பதஞ்சலி யோக சூத்திரத்தையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

   புதிய சொற்களையும், எளிய வார்த்தை அமைப்புகளையும் கொண்டு ஓசை நயமிக்க பல கவிதகளை படைத்துள்ள பாரதியை வெறும் கவிஞன், பத்திரிக்கையாளன், சுதந்திர போராட்ட வீரன், எழுத்தாளன், ஆசிரியன், தனி மனிதன் என்ற குறுகிய வட்டத்திற்குள் வைத்து பார்ப்பது நமது அறியாமையாலும் சில்லரைத் தனமான அரசியலாலும் ஏற்பட்டவை என்பதை இந்த புத்தகத்தை படித்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் பாரதி அதற்கும் அப்பாற்பட்டவன் என்பது தான் உண்மை.


அன்புடன்
தா.அருள்.

No comments:

Post a Comment