Friday, January 21, 2022

நிறைவான வாழ்வு என்பது என்ன?

 


சமீபத்தில எனக்குள் நடந்த விவாதம் நிறைவான வாழ்க்கை வாழ்வது என்றால் என்ன? அது எல்லோருக்கும் சாத்தியமானதா? என்று. இக்கேள்வி எனக்குள் வர காரணங்கள் இருக்கின்றன. அன்றாடம் நான் பார்க்கும், பழகும் மனிதரகளின் வாழ்க்கை முறைகளை கவனிக்கும் பொழுது ஒரு விசயம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது பெரும்பாலனவர்கள் மன நிம்மதியுடன் வாழவில்லை. பிரச்சினைகள் பலவிதங்களில் மனித மனத்தை நிம்மதி இழக்கச் செய்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றபடியால் இக்கேள்வி எனக்குள் எழ நியாயங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது, இதை இப்படி கூட சிந்திக்கலாம் நாம் எல்லோரும் ஒரு நாள் இறக்க போகிறோம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் அது கண்டிப்பாக நடக்கத்தான் போகிறது என்கிறபட்சத்தில் நாம் இங்கு சம்பாதிக்க போராடும் பேர், புகழ், பணம் நிரந்தரமானது கிடையாது. இப்படி இருக்கையில் மனித வாழ்க்கை என்பது உண்மையில் என்ன? இவைகள் ஆரம்பத்தில் எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. இன்றைய மனநிலையில் நிறைவான வாழ்வை பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

     

     மனித வாழ்க்கை என்பது சராசரியாக 80 வருடங்கள். பூமியின் ஆயுளை பொருத்த மட்டில் இது மிக மிக சொர்ப்பம். இங்கே நாம் ஏன் பிறந்தோம் என்ற கோள்விக்கு விடை கிடையாது. நமக்குள் ஏற்படும் எண்ணங்களுக்கும் நமது நடத்தைகளுக்கும் சூழ்நிலை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது, நம்மை சுற்றி நடப்பவைகள் நம்மை மனதளவில் பாதிக்கின்றன. சில பாதிப்புகள் நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் சில பாதிப்புகள் துன்பம் அளிப்பதாகவும் இருக்கின்றன. நமது வாழ்க்கை இந்த இன்பதுன்பத்திற்குள் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. இப்படி இருக்கையில் இந்த வாழ்க்கையை நிறைவாக ஆக்கிக் கொள்ளவது பற்றி பொரும்பாலோனோர் சிந்திப்பதே இல்லை (இதில் நானும் அடங்குவேன்) என்னை பொருத்தவரை மனதிற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விசயங்கள் (உதாரணத்திற்கு நான் ஒரு ஆராய்ச்சியாளனாக வேண்டும் என்று மனதிற்குள் தோன்றுவது, நான் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக ஆக வேண்டும் என்று என்னுவது போன்றவைகள்) எவை எவை என கண்டறிந்து அவைகளில் ஒன்றை மனதிற்குள் இலட்சியமாக வைத்து அவற்றிற்காக நமது நேரத்தையும் ஆற்றலையும் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்பது  முக்கியமாக படுகிறது. மற்றவர்களுக்காக சமூதாயம் என்ன நினைக்குமோ என்று என்னி நமக்கு விருப்பமில்லாதவைகளை செய்யும் பொழுதுதான் மனம் நிம்மதியை இழக்கிறது.

 

மனதிற்கு விருப்பமான விசயங்களை மட்டும் செய்து 80 வருடங்கள் வாழ்ந்து மறைந்தவர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து கவனிக்கையில் அவர்களுடைய வாழ்க்கை தன்னளவில் நிறைவை அளித்தது மட்டுமில்லாமல் அடுத்தவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதை உணர முடியும். இதற்கு உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.

 

ஆக நிறைவான வாழ்க்கை என்பது எல்லோருக்கும் சாத்தியமே இவ்வாழ்கை வாழ நமது சிந்தனையில் மாற்றம் வர வேண்டும். சில புரிதல்களை மாற்றிக்கொள்ள வேண்டும். நம்மை நாமே சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் அவ்வளவே. மானிடராய் பிறத்தல் என்பது அரிதான வாய்ப்பு அது நமக்கு கிடைத்திருக்கும் போது அதை நிறைவான முறையில் பயன்படுத்திக் கொள்ளவதே சரியான அனுகுமுறையாக இருக்க முடியும். நம்மிடம் இருக்கும் குறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், நல்ல விசயங்களுக்கு அதிக நேரத்தை செலவளித்து செயல் வடிவம் கொடுக்க முயற்சி செய்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக நல்ல விசயங்கள் (இதை நாம் நம்முடைய பலம் என்று கூட சொல்லலாம்) நம்முள் நுழைந்து நம்மை நிறைவான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும்.

 

இது என் கருத்து. இதைப் பற்றின உங்களுடைய நிலைப்பாடு என்ன? 

    

அன்புடன்

தா. அருள்

No comments:

Post a Comment