Monday, May 20, 2013

சிப்பமிட்ட உணவுப்பொருட்களின் மேல் விவரக்குறிப்பிடுதல்



      அன்றாடம் நாம் சந்தையில் வாங்கி உபயோகப்படுத்தும் உணவுப்பொருட்களின் மேல் ஒட்டி இருக்கும் விவரக்குறிப்பினை (லேபில்) கவனித்ததுண்டா நீங்கள்? நுகர் பொருட்களின் மேல் எதற்கு விவரங்களை குறிப்பிடுகின்றனர், விவரக்குறிப்பில் என்னென்ன தகவல்கள் இருக்கவேண்டும் மற்றும் விவரக்குறிப்பில் குறியீடுகளாக இருப்பவைகளின் அர்த்தங்கள் என்னென்ன என்ற விவரங்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். 

விவரக்குறிப்பு எதற்கு?

நுகர்வோர் தாங்கள் வாங்கும் உணவுப்பொருட்களின் முழுமையான விகிதாசாரத்தினை தெரிந்து கொள்ளவும், உடல் நலத்திற்க்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஏதாவது வாங்கும் பொருளில் கலந்துள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொள்ளவும், உணவு பாதுகாப்பை நிலைநிறுத்தவும் மற்றும் நுகர்வோர் விரும்பும் பொருட்களை விருப்பத்திற்கேற்றாற்போல் தெரிவு செய்து கொள்ளவும் உணவுப்பொருட்களின் மேல் விவரக்குறிப்பிடுதல் முற்றிலும் அரசாங்கத்தால் உணவுப்பொருட்கள் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

என்னென்ன தகவல்கள் விவரக்குறிப்பில் இருக்க வேண்டும்?

    இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் (சிப்பமிடுதல் மற்றும் விவரக்குறிப்பிடுதல்) 2011 வரைவின் படி கிழ் கண்ட தகவல்கள் உணவுப் பொருட்களின் விவரக்குறிப்பில் அச்சடிக்கப்பட்டிருக்கவேண்டும். 

1.உணவின் பெயர்: இது அந்த உணவின் வர்த்தகப்பொயராகவோ அல்லது உணவுப் பொருளைப் பற்றின குறிப்பாகவோ இருக்கவேண்டும். உதாரணத்திற்க்கு பாக்கெட்டில் வாழைப்பழ படம் பொறிக்கப்பட்டிருந்தால்  அவ்வுணவு வாழைப்பழத்தால் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். ஒரு வேளை உண்மையான வாழைப்பழத்தால் தயாரிக்காமல் வாழைப்பழ வாசனை மட்டும் உணவில் சேர்த்திருந்தால் அது வாழைப்பழ வாசனையுடையது என்று குறிப்பிடப்படுதல் வேண்டும். 

2.தேவையான பொருட்களின் பட்டியல்: பயன்படுத்தப்படும் உணவின் எடை அளவையோ அல்லது கொள்ளவைப் பொருத்தோ தேவையான பொருட்களின் பட்டியல் இறங்கு வரிசையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். 

3.ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள்: உணவில் உள்ள ஆற்றல்/கலோரி மதிப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற உட்டச்சத்துகள் பற்றின தகவல்கள் தகுந்த அலகுகளுடன் குறிக்கப்படல் வேண்டும்.




உணவுப் பொருட்களின் மேல் விவரக்குறிப்புகள்

4.சைவ அல்லது அசைவ உணவு பற்றின அறிவிப்பு: உணவு மாமிசத்தால் செய்யப்பட்டிப்ருப்பின் கட்டாயம் விவரக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். பொதுவாக இதை குறியீட்டில் குறிப்பிடுகின்றனர் அதாவது பச்சை நிறத்தில் வட்ட வடிவம் குங்கும பொட்டுபோல் இருக்கும் குறியீடு சைவ வகை உணவையும் இதே குறியீடு பழுப்பு நிறத்தில் இருந்தால் அது அசைவ உணவைக் குறிக்கும். 

5.உணவுச்சேர்ப்பிகள் தொடர்பான அறிவிப்பு: உணவின் நிறம், வாசனை மற்றும் சுவையை அதிகரிக்கும் வண்ணம் செயற்கைச் சேர்ப்பிகள் ஏதும் உணவில் சேர்த்திருந்தால் அதைப்பற்றின விவரத்தை குறிப்பிடவேண்டும். 

6.உற்பத்தியாளர்களின் பெயர் மற்றும் முழு முகவரி: உற்பத்தியாளர்களின் பெயர் மற்றும் உற்ப்பத்திச்சாலையின் முழு முகவரி குறிப்பிடப்படுதல் வேண்டும். ஒருவேளை உற்பத்திச்சாலை பல கிளைக்களைக் கொண்டிருந்தால் அதைப்பற்றின விவரங்களை தயாரிக்கப்படும் ஒவ்வொரு உணவுப்பொருளிலும் குறிக்கப்படுதல் வேண்டும்.
   உணவுப்பொருள் ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தால் தாயாரிக்கப்பட்டு வேறொரு அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் வணிகப்பெயரில் விற்பனைசெய்யப்படுமாயின் அவ்விவரங்களை தெளிவாக விவரக்குறிப்பில் தெரியப்படுத்துதல் வேண்டும். 

7.நிகர அளவு: நிகர அளவை எடையாகவோ, கொள்ளளவாகவோ அல்லது எண்களாகவோ உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் குறிக்கப்பட வேண்டும். 

8.லாட்/கோட்/பாட்ச் அடையாளம்: தொழிற்சாலையில் தினசரி உற்பத்திசெய்யப்படும் பொருட்களை சுலபமாக அடையாளம் காண லாட் அல்லது பாட்ச் எண்கள் உதவும். ஒருவேளை உற்பத்தி செய்த பொருட்களில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் கண்டுபிடிக்க இது எளிமையான முறையாதலால் லாட் அல்லது பாட்ச் எண்கள் உணவுப்பொருட்களில் தவறாமல் குறிப்பிடப்படுதல் வேண்டும். 

9.உற்பத்தி செய்த அல்லது சிப்பமிட்ட தேதி: பொருள் உற்பத்தி செய்யப்பட்ட தேதி, மாதம் மற்றும் ஆண்டை தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும். உணவுப் பொருள் தாயரித்து எவ்வளவு நாள் ஆகிறது என்பதை நுகர்வோர் அறிய இது உதவும். 

10.பயன்பாட்டு முன் தேதி: குறைந்த வாழ்நாளையுடைய உணவு பொருட்களுக்கு பயன்பாட்டு முன் தேதியை விவரக்குறிப்பில் தெரிவித்தல் அவசியமாகும். உணவு பொருளை கொடாமல் எவ்வளவு நாட்கள் வைத்து உபயோகிக்க முடியும் என்ற விவரத்தை மாதம் அல்லது ஆண்டுகளில் குறிப்பிட வேண்டும். 

11.இறக்குமதி செய்யப்பட்ட உணவு: வேறு நாடுகளிலிருந்து பொருள் இந்தியாவிற்கு   இறக்குமதி செய்யப்பட்டிருப்பின் அந்த நாடு, நகரம் மற்றும் முழுவிவரத்தை எந்த நாடு என்ற விவரத்தை குறிப்பிடுதல் வேண்டும்.

12.பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்: உணவை சரியான முறையில் பயன்படுத்த வழிமுறைகளை குறிப்பிடுதல் வேண்டும். 

13.சேமித்தல் பற்றிய தகவல்: குறிப்பிட்ட சில உணவுவகைகள் நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க வெவ்வேறு தட்பவெட்ப நிலைகளில் வைத்திருக்க வேண்டுடிய நிர்பந்தம் ஏதேனும் இருந்தால் அதை தெரியப்படுத்துதல் வேண்டும்.


விவரக்குறிப்புகளில் குறிக்கப்படும் சில முக்கிய குறியீடுகள்

வழக்கமாக உணவுப் பொருட்களில் குறிக்கப்படும் சில குறியீடுகள் மற்றும் அதன் விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


பச்சை வண்ண வட்டம் சைவ உணவு வகைகளைச் சுட்டிக் காட்ட வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.


பழுப்பு நிறமுடைய வட்டம் அசைவ உணவு வகைகளைச் சுட்டிக் காட்ட வழக்கத்தில் உள்ள குறியீடாகும்.


பதப்படுத்தப்பட்ட பழவகை உணவுகள் உதாரணத்திற்க்கு பழரச பானங்கள், ஜாம் மற்றும் ஊறுகாய் போன்றவைகளை விறபணை செய்ய பழப்பொருட்களின் ஆணை சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும் அதை விவரக்குறிப்பில் குறியீடாக குறிக்கப்படல் வேண்டும்.

விவசாய விளைப்பொருட்களை சந்தை படுத்த அக்மார்க் முத்திரை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. அக்மார்க் முத்திரையுடைய உணவுப் பொருள் போலிக் கலப்பில்லாதது என்பதற்க்கு ஆதாரம்.

உணவுப் பொருள் கதிர்வீச்சிற்குட்படுத்தி பதப்படுத்தியிருந்தால் இந்த முத்திரையை விவரக்குறிப்பில் தெரிவிக்கவேண்டும் என அரசாங்கத்தால் கூற்ப்பட்டுள்ளது. ருத்ரா என்பது இக்குறியீட்டின் பெயராக பொதுவில் வழங்குகின்றனர்.

பதிவு செய்யப்பட்ட வர்த்தகப்பொருளின் மேல் R என்ற குறியீடு குறிக்கப்படுகிறது. இதற்கு மறைமுகப் பொருள் என்னவென்றால் போலியாக இதே பெயரில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டால் அவர்களின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க பொருளை பதிவு செய்த உரிமையாளருக்கு உரிமை உண்டு என்பதாகும்.

வர்த்தகப்பொருளை பதிவு செய்ய விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு பதிவு எண் கிடைக்கும் வரை TM என்ற வார்த்தைகளை போட்டுக்கொள்ள அரசு அனுமதிக்கிறது. இது நுகர்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படுகிறது.

  
      
உணவுப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நுகர்வோருக்கு சுகாதாரமான உணவை வழங்க அரசாங்கம் விவரக்குறிப்பிடும் விதிகளை வரைமுறைப்படுத்தியுள்ளது. உயிர்வாழ உணவு மிகவும் அத்தியாவசிய ஒன்றாகும். ஆகவே உணவை தேர்ந்தெடுப்பதில் நாம் மிகுந்த அக்கறை காட்டினால் உணவு மூலம் உடலுக்கு ஏற்படும் உபாதைகளை பொருமளவு தவிர்க்க முடியும் என்பது திண்ணம். அடுத்தமுறை உணவுப்பொருளை வாங்க கடைகளுக்கு நீங்கள் செல்லும் போது மேற்சொன்ன விவரங்களை சரிபார்த்து வாங்குங்கள். இதை அடுத்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
 

No comments:

Post a Comment