Wednesday, February 27, 2019

எழுத்தும் ஒரு கலைதானே…

கொஞ்ச வருடங்களுக்கு முன் நான் கல்லூரியில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து கொண்டிருக்கும் போது ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருந்தது ஆனால் எப்படி எழுதுவதென்று தெரியாது. எப்பொழுது என்னுடைய பேராசிரியரை சந்திக்க சென்றாலும் அடிக்கடி வைக்கும் வேண்டுகோள் எனக்கும் கட்டுரைகள் எழுத சொல்லி கொடுங்கள் என்பதுவே. என்னுடைய ஆர்வத்தை பார்த்த அவர் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுத நாம் முதலில் குறிப்பிட்ட ஒரு விசயத்தை எடுத்துகொண்டு அதன் முடிவுகள் எப்படி வரவேண்டும் மென்ற கருதுகோளுடன் நிறைய சோதனைகள் செய்து பார்க்க வேண்டும். தரவுகள் சேகரிக்க வேண்டும் பின்பு பகுப்பாய்வு செய்து பெற்ற முடிவுகளை தான் கட்டுரையாக எழுதவேண்டும் எழுதவும் முடியும் அதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும் உடனே செய்யக்கூடிய காரியம் இல்லை என்று கூறினார். மேலும் நிறைய கட்டுரைகள் எழுதினால் தான் இது பழக்கத்திற்கு வரும் பொருமை அவசியம் என்றார். ஆனாலும் உன்னுடைய ஆர்வத்திற்கு நான் ஒன்று கூறுகிறேன் கட்டுரைகளிலேயே பலவிதங்கள் உள்ளன  தமிழில் கூட கட்டுரைகள் எழுதலாம் ஆரம்ப நாட்களில் நானும் தமிழில் எழுதியிருக்கிறேன் இதை என் அறிவுறையாக வைத்துகொள் என்றார். இதை கேட்டவுடன் எனக்குள் மின்னல் பாய்ந்தது போல் ஒரு உணர்ச்சி ஏற்பட்டு  இது நள்ள ஐடியாவா இருக்கே முயற்சி செய்து பார்போம் என்று ஆரம்பித்தேன்  

எழுதுவதென்று தீர்மானித்தவுடன் எனக்குள் உதித்த அடுத்த சந்தேகம் எதைப்பற்றி எழுதுவது என்பதாக இருந்தது. பல தலைப்புகள் யோசித்து இறுதியாக நானோ தொழில்நுட்பத்தை பற்றி எழுதலாம் என்று முடிவுக்கு வந்தேன் காரணம் சிறிது காலம் நானோ தொழில்நுட்ப்பத்துறையில் வேலை பார்த்ததினால் அதைப்பற்றி கொஞ்சம் பரிட்சயம் இருந்தது மேலும் சமீபகாலமாக இத்துறை அனைவராலும் பெரிதும் பேசப்படுவதினால் கட்டுரையை சுலபமாக எதாவது ஒரு இதழில் பிரசுரித்துவிடலாம் என்ற எண்ணமும் நானோவைப் பற்றி எழுத தூண்டியது. தலைப்பு முடிவானதும் எழுத உட்காருகையில் எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது, ஒரு பத்தியில் எவ்வளவு சொல்ல வேண்டும் எதைச் சொல்லவேண்டும் என்ற அடுத்தடுத்த பிரச்சினைகள் வரத்துவங்கின. முதன் முதலில் மூன்று மணி நேரம் தொடர்ந்து சிந்தித்து ஒரு பத்து வரிகூட எழுத முடியவில்லை எழுதியதை படித்தால் எனக்கே அது பிடிக்கவில்லை மூளை சூடானதுதான் மிச்சம்.
ஒரு கட்டத்தில் நான் உணர்ந்தேன் எழுதுவது அவ்வளவு சுலபமல்ல என்று. ஆனாலும் முயற்சியை கைவிடவில்லை. எழுத்தின் மீதிருந்த ஆர்வம் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி எனது முதல் கட்டுரையை முடித்தேன் இதற்குள் ஒருமாதம் முடிவடைந்திருந்தது. சூப்பரா இல்லாவிட்டாலும் சுமார இருக்கு என்பது என் மதிப்பீடு. எனது ஆசிரியரிடம் கொடுத்து நிறை குறைகளை திருத்தி கொடுங்கள் என்று கேட்டேன். அவரும் உடனே படித்துவிட்டு சின்ன சின்ன தவறுகளை மட்டும் சுட்டிகாட்டிவிட்டு இது போதும் தம்பி எதாவது ஒரு இதழுக்கு அனுப்பிவிடு அதிக நேரத்தை இதற்காக செலவிடாதே ஆராய்ச்சியில் கவணம் செலுத்து என்று கூறிவிட்டார். மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி அவர் கூறியவாரே கலைக்கதிர் அறிவியல் மாத இதழுக்கு என்னுடைய முதல் தமிழ் கட்டுரையை அனுப்பி வைத்தேன். இது எங்கே பிரசுரமாக போகிறது என்ற நினைப்பில் தான் அனுப்பினேன். அடுத்த இதழிலேயே என்னுடைய கட்டுரையை பிரசுரித்திருந்தார்கள்.

அதற்குபின் எனக்கு ஆர்வம் இன்னும் அதிகமாகியது எழுதுவது கடினமான செயல் ஆனாலும் ஆத்ம திருப்தியை தருகிறது இதை விடக்கூடாது என்று முடிவெடுத்து பயிற்சிக்காக தினமும் காலையிலிருந்து இரவுவரை நடந்தவைகளை கேர்வையாக ஒரு நோட்டில் டைரி எழுதுவது போல் எழுத ஆரம்பித்தேன். தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர்களை படிக்கவும் செய்தேன். புத்தக வாசிப்பு, வலைதளங்களில் வாசிப்பது என்று தொடர்ந்து செய்ய ஆரம்பித்தவுடன் எழுதுவது ஒரளவிற்கு படிக்கும் படியாக இருப்பது உணர முடிகிறது. படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள நிறைய எழுதி எழுதி பயிற்சி செய்ய வேண்டும். இதுவரையில் நான்கு நோட்டுகள் எழுதி தீர்த்துவிட்டேன். இப்பொழுது அவைகளை படித்து பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

எழுத்தும் ஒரு கலை தானே அதை வளர்த்துக்கொள்ள இன்னும் ஆசை அதிகமாகிவிட்டது. பொதுவெளியில் எழுதுவது நிறைய நண்பர்களையும் ஆரோக்கியமான விமர்சனங்களையும் பொற்றுத்தரும் என்பதால் என் வீட்டு நோட்டு புத்தகத்திலிருந்து இங்கே வந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்து பார்த்துவிட்டு நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 


அன்புடன்
தா. அருள்.

No comments:

Post a Comment