Thursday, January 28, 2021

மனித வாழ்க்கையைப் பற்றி….

       மனித வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் சொல்ல தோன்றுகிறது. சமீப காலமாக நான் அதிகம் தேடித் தேடி படிக்கும் விசயமாக இது இருப்பதினாலும், இன்றைய காலகட்டத்தில் நான் சிந்திக்கும் விசயம் இதுவாக இருப்பதினாலும் நான் என்ன தெரிந்து கொண்டேன் என்ன நிலைப் பாட்டிற்கு வந்துள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.

     இந்த பூமியில் வாழும் உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் தான் சிந்திக்கும் ஆற்றல் இருக்கின்றது. மனித இனம் இந்த பூமியில் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகளாகின்றன என்று கூறுகின்றனர். சராசரியாக 75 ஆண்டுகள் வாழக்கூடிய மனிதர்கள் எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டுருக்கின்றனர். சமூதாய கூட்டமாக வாழும் மனிதர்களிடையே நிறைய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. மனிதன் நிம்மதியாக வாழ உணவு, உடை மற்றும் உறைவிடம் அவசியமாக தேவைப்படுகின்றது. மனிதர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் தடையாக இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வுகள் பல வகைப்பட்டவையாக இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் ஜாதி, மதம், பணம் போன்றவைகள் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக நான் கருதுகிறேன். ஆகவே இங்கு ஊழல், லஞ்சம் போன்றவைகளினால் மக்களின் உழைப்பு பெருமளவு சுரண்டப்படுகிறது. இதனால் ஏழைகள் மிகவும் ஏழைகளாகவும் பணக்கார்கள் மேலும் பணக்கார்ர்களாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றனர்.

Saturday, January 2, 2021

தொ.ப மறைந்துவிட்டார்

 


   தமிழகத்தில் கற்றறிந்தோரால் அன்போடு அழைக்கப்பட்ட தொ.பரமசிவன் என்கிற தொ.ப சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி கேட்டு என்னையறியாமல் அழுகை வந்தது. என்காலத்து அறிஞர்களில் நான் மிகவும் மதித்து வந்த ஆளுமை இவர். உண்மையில் இது தமிழர்களுக்கு பல வகைகளில் பேரிழப்புதான். என் போன்ற இளைய தலைமுறையினருக்கு பண்பாட்டை, கலாச்சாரத்தை இவர் சொல்லிச்சென்ற அளவுக்கு எளிமையாகவும் ஆழமாகவும் சொல்லித்தர நபர்கள் குறைவே. நான் அவருடைய புத்தகங்கள் சிலவற்றை படித்துள்ளேன். யூடியூபில் இவருடைய டாக்குமண்டரி வீடியோவை சில வருடங்களுக்கு முன்பு பார்த்திருக்கிறேன் அதில், தான் சென்று ஆராய்ச்சி செய்த இடங்களையும், சேகரித்துவைத்துள்ள தொல்பொருட்களையும் காண்பித்து அதற்கு விளக்கமும் கொடுத்திருப்பார். தமிழர் மரபுகளை நுணுக்கமாக புரிந்து கொள்ள இவர் எடுத்துள்ள முயற்சிகள் என்றும் போற்றுதலுக்குரியது.

 நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார் தமிழர்கள் அனைவரும் கட்டாயமாக படிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் அவை. தன்னுடைய அனுபவத்தையும் அறிவையும் சேர்த்து எழுதப்பட்ட அப்புத்தகங்கள் காலத்தால் சாகா வரம் பெற்று நிலைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. எனக்கு கு.ஞானசம்பந்தன் ஐயா மூலம் தான் தொ.ப அறிமுகம் ஆனார். ஞானசம்பந்தன் ஐயா எல்லா மேடைகளிலிலும் தொ.ப-வைப் பற்றி எதாவது ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டே இருப்பார் அப்படி ஒரு புத்தக கண்காட்சியில் சொற்பொழிவு நிகழ்த்தும் பொழுது அவர் படித்து அனுபவித்த புத்தகங்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தார் அந்த சொற்பொழிவில் தெ.பவைப் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்களைப் பற்றியும் சிலாகித்து பேசினார். நான் அதைக் கேட்டவுடன் தொ.பவை தேட தொடங்கினேன் இது நடந்து ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்கும்.

முதலில் அவரிடம் எனக்கு பிடித்த விசயம் அவருடைய எளிமை. எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு அவர் தரும் விரிவான ஆழமான விளக்கம் என்னை வசிகரித்து அவரை பின் தொடரவும், அவருடைய புத்தகங்களை வாங்கி படிக்கவும் வைத்தது. என்னை மேலும் ஆச்சரியப்படுத்திய விசயம் கோயில்களையும், தமிழர் மரபுகளையும் ஆர்வமுடன் ஆராய்ந்தாலும் பெரியாரின் மீதும் அவருடைய கருத்துக்கள் மீதும் ஈர்ப்புடையவராய் திகழ்ந்ததைச் சொல்வேன். 

தொ.ப-வை வெளியில் இருந்து ரசித்த ரசிகன் நான் என்றமுறையில் அவருடைய மறைவிற்கு இரங்கள் தெரிவித்து ஒட்டியிருந்த போஸ்டர்களில் அவருடைய சாதியை சொல்லி அந்த இணத்தவர்கள் தாங்கள் என்று பெயர் போட்டு இரங்களை தெரிவித்திருந்ததை பார்க்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது.

பண்பாட்டை, கலாச்சாரத்தை ஆராய்ந்து சொன்ன அறிஞரையும் பொதுமனிதனாக பார்க்கும் தன்மை அற்றவர்களாகத்தான் இந்த சமுதாய மக்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றனர். இது அறிவுசார்ந்த தளத்தில் இயங்க தொ.ப அவர்கள் நமக்கு அளித்துள்ள புத்தகங்களை படித்து, தெளிந்து அதை அனைவருக்கும் சென்று சேர்க்கும் செயலை நாம் தீவிரமாகச் செய்ய வேண்டும். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நியாமான அஞ்சலியாக இருக்க முடியும். என்னை பொருத்தவரையில் தமிழர்கள், வாழும் காலத்தில் போற்ற மறந்த பல அறிஞர்களுள் தொ.ப-வையும் சேர்த்து விட்டார்களே என நினைக்கும் போதுதான் வருத்தமாக இருக்கிறது.    

Friday, January 1, 2021

Welcome 2021

 பொதுவா டிசம்பர் மாத இறுதியில் பெரும்பாலனவர்கள் நினைப்பது என்னவென்றால் அடடே அதுக்குள்ளயும் இந்த வருடம் முடிஞ்சிடிச்சா எனவாகத்தான் வழக்கமாக இருக்கும். ஆனால் 2020-ம் வருடம் அப்படியில்லை என்பது எல்லொருக்கும் தெரியும். எப்படா இந்த வருசம் முடியும் என நாட்களை எண்ணிக்கொண்டு தள்ளவேண்டிய நிலைக்கு தல்லப்பட்டுவிட்டோம். பொருளாதர இழப்பு, வேலைவாய்ப்பு இழப்பு, மனஉலச்சல் என பல இன்னல்களை போன வருடம் நமக்கு கொடுத்துவிட்டது. பல பேர் மரணமடைந்தனர். நிறைய கெட்ட செய்திகளை கேட்க நேர்ந்தது. இப்படியாக கறுப்பு ஆண்டாக வரலாற்றில் பதியும் வகையில் கொரனா மாற்றிவிட்டதை நினைக்கையில் வருத்தமாகத்தான் உள்ளது. இருந்தாலும் அனைத்து இடர்பாடுகளையும் தாண்டி இன்று 2021-ல் அடியெடுத்து வைக்கிறோம். சென்ற மகிழ்ச்சி திரும்பிட, ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்திட இந்த வருடம் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வருடத்தை வரவேற்போம்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



அன்புடன்

தா.அருள்

Wednesday, February 27, 2019

எழுத்தும் ஒரு கலைதானே…

கொஞ்ச வருடங்களுக்கு முன் நான் கல்லூரியில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து கொண்டிருக்கும் போது ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருந்தது ஆனால் எப்படி எழுதுவதென்று தெரியாது. எப்பொழுது என்னுடைய பேராசிரியரை சந்திக்க சென்றாலும் அடிக்கடி வைக்கும் வேண்டுகோள் எனக்கும் கட்டுரைகள் எழுத சொல்லி கொடுங்கள் என்பதுவே. என்னுடைய ஆர்வத்தை பார்த்த அவர் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுத நாம் முதலில் குறிப்பிட்ட ஒரு விசயத்தை எடுத்துகொண்டு அதன் முடிவுகள் எப்படி வரவேண்டும் மென்ற கருதுகோளுடன் நிறைய சோதனைகள் செய்து பார்க்க வேண்டும். தரவுகள் சேகரிக்க வேண்டும் பின்பு பகுப்பாய்வு செய்து பெற்ற முடிவுகளை தான் கட்டுரையாக எழுதவேண்டும் எழுதவும் முடியும் அதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும் உடனே செய்யக்கூடிய காரியம் இல்லை என்று கூறினார். மேலும் நிறைய கட்டுரைகள் எழுதினால் தான் இது பழக்கத்திற்கு வரும் பொருமை அவசியம் என்றார். ஆனாலும் உன்னுடைய ஆர்வத்திற்கு நான் ஒன்று கூறுகிறேன் கட்டுரைகளிலேயே பலவிதங்கள் உள்ளன  தமிழில் கூட கட்டுரைகள் எழுதலாம் ஆரம்ப நாட்களில் நானும் தமிழில் எழுதியிருக்கிறேன் இதை என் அறிவுறையாக வைத்துகொள் என்றார். இதை கேட்டவுடன் எனக்குள் மின்னல் பாய்ந்தது போல் ஒரு உணர்ச்சி ஏற்பட்டு  இது நள்ள ஐடியாவா இருக்கே முயற்சி செய்து பார்போம் என்று ஆரம்பித்தேன்  

எழுதுவதென்று தீர்மானித்தவுடன் எனக்குள் உதித்த அடுத்த சந்தேகம் எதைப்பற்றி எழுதுவது என்பதாக இருந்தது. பல தலைப்புகள் யோசித்து இறுதியாக நானோ தொழில்நுட்பத்தை பற்றி எழுதலாம் என்று முடிவுக்கு வந்தேன் காரணம் சிறிது காலம் நானோ தொழில்நுட்ப்பத்துறையில் வேலை பார்த்ததினால் அதைப்பற்றி கொஞ்சம் பரிட்சயம் இருந்தது மேலும் சமீபகாலமாக இத்துறை அனைவராலும் பெரிதும் பேசப்படுவதினால் கட்டுரையை சுலபமாக எதாவது ஒரு இதழில் பிரசுரித்துவிடலாம் என்ற எண்ணமும் நானோவைப் பற்றி எழுத தூண்டியது. தலைப்பு முடிவானதும் எழுத உட்காருகையில் எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது, ஒரு பத்தியில் எவ்வளவு சொல்ல வேண்டும் எதைச் சொல்லவேண்டும் என்ற அடுத்தடுத்த பிரச்சினைகள் வரத்துவங்கின. முதன் முதலில் மூன்று மணி நேரம் தொடர்ந்து சிந்தித்து ஒரு பத்து வரிகூட எழுத முடியவில்லை எழுதியதை படித்தால் எனக்கே அது பிடிக்கவில்லை மூளை சூடானதுதான் மிச்சம்.
ஒரு கட்டத்தில் நான் உணர்ந்தேன் எழுதுவது அவ்வளவு சுலபமல்ல என்று. ஆனாலும் முயற்சியை கைவிடவில்லை. எழுத்தின் மீதிருந்த ஆர்வம் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி எனது முதல் கட்டுரையை முடித்தேன் இதற்குள் ஒருமாதம் முடிவடைந்திருந்தது. சூப்பரா இல்லாவிட்டாலும் சுமார இருக்கு என்பது என் மதிப்பீடு. எனது ஆசிரியரிடம் கொடுத்து நிறை குறைகளை திருத்தி கொடுங்கள் என்று கேட்டேன். அவரும் உடனே படித்துவிட்டு சின்ன சின்ன தவறுகளை மட்டும் சுட்டிகாட்டிவிட்டு இது போதும் தம்பி எதாவது ஒரு இதழுக்கு அனுப்பிவிடு அதிக நேரத்தை இதற்காக செலவிடாதே ஆராய்ச்சியில் கவணம் செலுத்து என்று கூறிவிட்டார். மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி அவர் கூறியவாரே கலைக்கதிர் அறிவியல் மாத இதழுக்கு என்னுடைய முதல் தமிழ் கட்டுரையை அனுப்பி வைத்தேன். இது எங்கே பிரசுரமாக போகிறது என்ற நினைப்பில் தான் அனுப்பினேன். அடுத்த இதழிலேயே என்னுடைய கட்டுரையை பிரசுரித்திருந்தார்கள்.

அதற்குபின் எனக்கு ஆர்வம் இன்னும் அதிகமாகியது எழுதுவது கடினமான செயல் ஆனாலும் ஆத்ம திருப்தியை தருகிறது இதை விடக்கூடாது என்று முடிவெடுத்து பயிற்சிக்காக தினமும் காலையிலிருந்து இரவுவரை நடந்தவைகளை கேர்வையாக ஒரு நோட்டில் டைரி எழுதுவது போல் எழுத ஆரம்பித்தேன். தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர்களை படிக்கவும் செய்தேன். புத்தக வாசிப்பு, வலைதளங்களில் வாசிப்பது என்று தொடர்ந்து செய்ய ஆரம்பித்தவுடன் எழுதுவது ஒரளவிற்கு படிக்கும் படியாக இருப்பது உணர முடிகிறது. படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள நிறைய எழுதி எழுதி பயிற்சி செய்ய வேண்டும். இதுவரையில் நான்கு நோட்டுகள் எழுதி தீர்த்துவிட்டேன். இப்பொழுது அவைகளை படித்து பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

எழுத்தும் ஒரு கலை தானே அதை வளர்த்துக்கொள்ள இன்னும் ஆசை அதிகமாகிவிட்டது. பொதுவெளியில் எழுதுவது நிறைய நண்பர்களையும் ஆரோக்கியமான விமர்சனங்களையும் பொற்றுத்தரும் என்பதால் என் வீட்டு நோட்டு புத்தகத்திலிருந்து இங்கே வந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்து பார்த்துவிட்டு நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 


Sunday, February 17, 2019

நல் ஆசிரியர்...


அறிவியல் என்பது எல்லோருக்குமானது அல்ல என்று நான் எண்ணிக்கொண்டிருந்த காலங்கள் உண்டு. காரணம் அதை படித்தால் புரிவதில்லை. பரிட்சையிலும் அதிக மதிப்பெண்கள் வருவதில்லை ஆகவே நமக்கு அறிவியல் வராது என்பது என் அனுமானம். ஆனால் அறிவியலை புரிந்து கொள்வது எளிது என்பதை எனக்கு புரியவைத்த ஆசான் பேராசிரியர் க. மணி அவர்கள். நான் இளநிலை பொறியியல் படித்து முடித்தவுடன் மேற்படிப்புக்கு போனால் ஐஐடிக்குத்தான் போகவேண்டுமென்ற எண்ணம் இருந்தது. நாளாக நாளாக அது தீவிர ஆசையாக மாறி என்னை GATE Exam எழுதும் அளவிற்கு கொண்டுபோய் விட்டது. தொடர்ந்து ஆறு முறை எழுதினேன் ஒரு முறை கூட என்னால் குறைந்தபட்ச மதிப்பெண்களை கூட பெறமுடியவில்லை. பரிட்சை என்றாலே மன்ப்பாடம் செய்து எழுதுவதுதானே நமது கல்விமுறை பின்பற்றிவரும் தொன்று தொட்ட பழக்கம். ஆரம்ப கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை அரசு பள்ளிகளில் படித்த எனக்கும் மனப்பாடம் செய்து பரிட்சை எழுதுவதே பழக்கமாகியிருந்தது. புரிந்து கொண்டு தர்கரீதியாக சிந்திக்கும் திறன் இல்லாத்தினால் ஆறு முயற்சிகள் செய்தும் GATE Exam வெற்றி சாத்தியப்படவில்லை. 



அந்த காலங்கலில் அடிப்படை அறிவியலை தெரிந்துகொள்ளும் நோக்கில் தமிழில் அறிவியல் சம்பந்தப்பட்ட தகவல்கள் ஏதேனும் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தேன், எதேச்சயாக ஒரு நாள் கோயமுத்துர் ஞானவானி பண்பலையில் அறிவியல் நேரம் நிகழ்ச்சியை கேட்க நேர்ந்தது. அதில் பேராசிரியர் க.மணி அவர்கள் தொலைபேசியில் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கேட்டவுடனேயே இவ்வளவு நாள் இந்த நிகழ்ச்சியை கேட்காமல் விட்டு விட்டோமே என்ற எண்ணமும், இதுதான் இவ்வளவு நாள் நான் தேடிக்கொண்டிருந்த புதையல் என்ற எண்ணமும் தோன்றியது. தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை கேட்க ஆரம்பித்தேன் அறிவியலை இவ்வளவு எளிமையாக நடைமுறை உதாரணங்களுடன் விளக்கமுடியும் என்பதை நிருபிக்கும் விதமாக அந்த நிகழ்ச்சி இருந்தது. 2008-லிருந்து 2012 வரை நான்குவருடங்கள் தொடர்ந்து அறிவியல் நேரம் நிகழ்ச்சி கேட்டதின் விளைவாக எனக்குள் சில மாற்றங்கள் உருவாக ஆரம்பித்ததை உணர ஆரம்பித்தேன் அறிவியல் மீதான ஆர்வமும் மரியாதையும் ஏற்பட்டது. நிறைய அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் அறிமுகமாகியிருந்தன குறிப்பாக Stephen hawking எழுதிய Brief history of time, Richard Feynman எழுதிய surely you are joking, Erwin Schrodinger எழுதிய what is life போன்றவைகளை சொல்லலாம்.

ஒரு கால கட்டத்தில் சார்லஸ் டார்வினும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் என் நெருங்கிய நன்பர்கள் போல் தெரிய ஆரம்பித்தார்கள் ஐசக் நியூட்டனைப்போல் நம்மால் ஏன் சிந்திக்க முடிவதில்லை எனவும் சீரினிவாச ராமானுஜத்தை பற்றி ஏன் இவ்வளவு நாள் தெரிந்து கொள்ளவில்லை எனவும் தோன்ற ஆரம்பித்தது. ஏனெனில் எந்த துறைகளில் கேள்விகள் கேட்கப்பட்டாலும் தெளிவான விளக்கத்தை பேராசிரியர் அவர்களால் கொடுக்க முடிந்ததே இதற்கு காரணம். ஒரு நிகழ்ச்சியில் அவர் இப்படி சொன்னார் எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் உங்களால் எப்படி எல்லா விசயத்தை பற்றியும் விளக்கம் அளிக்க முடிகிறது என்று அவர்களுக்கு நான் கூறும் பதில் ”என்னைப்போல் ஆவது ஒன்றும் பொரிய காரியமில்லை சிறுவயது முதல் அறிவியல் சார்ந்த விசயங்களை தெரிந்து கொள்ளும் பேரார்வம் இருந்தது அதனால் நிறைய படித்து தொரிந்து கொண்டேன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம், அறிவியல் கட்டுரைகள் அதிகம் எழுதியது இவைகள் தான் இதற்கு காரணம். கலைக்கதிர் அறிவியல் மாத இதழுக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த போது தமிழில் அறிவியல் கட்டுரைகள் அதிகம் எழுதியதும் ஒரு காரணம் என்று பதிலலித்தார்” ஞானவானி பண்பலை ஒலிபரப்பு 2012 வாக்கில் நிறுத்தப்பட்டது என்னை போன்றவர்களுக்கு பேரதிர்சியாக இருந்தது. மணிசாருடைய பேச்சை இனிமேல் கேட்க முடியாதே என்று.

நான் entropy, absolute temperature, nanotechnology, quantum physics, cosmology, evolution, gene, relativity theory, schrodinger cat, black hole, god particle, human brain போன்றவைகளைப் பற்றி தெளிவாக புரிந்து கொண்டது மணி சார் அவர்களின் பேச்சை கேட்டபின்புதான். ஞானவானி பண்பலை நிறுத்தப்பட்டவுடன் என்னைப்போன்ற நேயர்கள் அன்பாக கேட்டுக்கொண்டதன் பேரில் ஞானவானி சங்கமம் என்ற பெயரில் மாத மாதம் தொடர்ந்து சொற்பொழிவுகள் செய்துவருகிறார். அறிவியல் மட்டுமில்லாமல் ஆன்மீகம் பற்றியும் ஆழ்ந்த ஞானம் அய்யா அவர்களுக்கு உண்டு மனித மனம், மறுபிறவி பற்றியெல்லாம் நிறை விளக்கங்கள் அளித்திருக்கிறார். இதுவரைக்கும் என்பதுக்கும் மேலான புத்தகங்கள் எழுதியிருக்கிறார். குறிப்பாக மனித ஜினோம், ஜீன் புரட்சி, மூளைக்கும் அப்பால், மனிதன் தோன்றியது எப்படி, அணுத்துகள், பரிணாம தச்சன், சார்ப்பியல் கோட்பாடு, காலம், தத்வபோதம், நான் உலகம் கடவுள், பதஞ்சலி யோகசூத்திரம் ஆகியவைகளைச் சொல்வேன்.
 




நான் இன்று முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி கட்டுரைகள் பிரசுரிக்கும் அளவிற்கு முன்னேறியதற்கு ஆதார உந்து சக்தி மணி அய்யா அவர்கள். ஒரு நல்லாசிரியர் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவரைப்போன்று தமிழ்ச் சமுதாயத்தில் அனைத்து ஆசிரியர்களும் இருந்தால் திறமையான நிறைய மாணவர்கள் உருவாகுவார்கள் என்பது மட்டும் திண்ணம்.




பின் குறிப்பு: பேராசிரியர் க.மணி அவர்களுடைய உரைகள் youtube-ல் காணக்கிடைக்கின்றன விருப்பமுல்லவர்கள் சென்று பார்க்கலாம். உங்களுடைய சந்தேகங்களை அவரிடமும் கேட்கலாம்.