Friday, January 9, 2015

நான் ஊணமுற்றவன்…



     நமது வாழ்க்கையில் நமக்கு கெடுதல் தரக்கூடிய செயல்களையோ அல்லது உடல் அங்கங்கள் பாதிக்கக்கூடிய செயல்களையோ யாரும் விரும்பிச் செய்ய ஆசைப்பட மாட்டோம். நான் ஊணமுற்றவன். ஒன்றுமட்டும் உறுதியாக சொல்லமுடியும் தெரிஞ்சோ தெரியாமலோ உடலில் ஏதாவது குறை ஏற்பட்டுவிட்டால் அவ்வளவு எளிதாக தங்கள் அன்றாட நாட்களை நாம் வாழும் இச்சமுதாயத்தில் கழித்துவிட முடியாது என்று. உடல் ரீதியான குறைகள்கூட பெரிய விசயம் கிடையாது மனரீதியான இடர்பாடுகள் இங்கு மிக அதிகம். என்னைப் பொறுத்தவரையில் உடல் ஊணமுற்றவர்கள் வாழ்வதைவிட சாவதே மேல். இதைச் சொல்ல மிகுந்த வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் அதுதான் உண்மை. மற்ற நாடுகளில் நிலமை என்ன என்று எனக்கு தெரியாது. நான் இந்தியாவில் உள்ள பொரும்பாலான மாநிலங்களுக்கு சென்று வந்திருக்கிறேன், மற்ற மனிதர்களின் கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும், ஏளனங்களுக்கும், அனுதாபங்களுக்கும் அதிகம் ஆளகியிருக்கிறேன், இன்றும் ஆளாகிக் கொண்டிருக்கிறேன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன். எனக்கு மட்டும் என்று நினைக்க வேண்டாம். என்னைப் போன்ற எல்லோருக்கும் இந்த நிலைதான். மனதைரியத்தை வளர்த்துக் கொண்டவர்கள் ஒரளவிற்கு எல்லா இன்னல்களையும் தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெருகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். மனவலிமையை வளர்த்துக் கொல்லக்கூடிய சூழல்கூட இங்கு இல்லாததால் கூனி குறிகி வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஊணமுற்றவர்களின் வரலாறுகள் மிக அதிகம்.

சமீபத்தில் நான் கேட்ட அஷ்ட வக்கிரர் கதை நான் எழுதும் இந்த பதிவிற்கு காரணம்.

“உடல் எட்டு கோணல்களாக திருகி காணப்பட்ட அஷ்ட வக்கிரர். பல்வேறு இன்னல்களை தாங்கிகொண்டு வாழ்ந்து வந்தவர். தன்னிடமுள்ள குறைகளைப் பற்றி கவலைப்படமால் வேதங்களை நன்கு பயின்று கைதேர்ந்தவராக விளங்கினார். ஒருமுறை மகாராஜா கூடியிருந்த வேதம் பயின்றவர்கள் விவாதிக்கும் இடத்திற்கு அப்படியும் இப்படியுமாக அசைத்துக் கொண்டு உள்ளே வந்தார் அஷ்ட வக்கிரர். அவர் நடந்த விதமே பலருக்கு வேடிக்கையாக இருந்தது. கூடியிருந்த சபையோர் அவரைப் பர்த்துக் கேலி செய்தனர். சிலர் அருகே வந்து அமர்ந்து அவருடைய உடம்பை தடவிப் பார்த்தபடி இப்படி இந்த உடம்போடு இங்கு எதற்கு வரவேண்டும் என்று அவமரியாதையாக பேசினார்கள்.

கம்பீரமாக மகாராஜாவை உற்றுப் பர்த்த அஷ்ட வக்கிரர் அரசே இனி நான் இந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை புறப்படுகிறேன் என்றார். அதற்கு மகாராஜா, ஐயா இது வேதஞானம் உள்ளவர்கள் இருக்கும் இடம் இங்கு தாங்கள் தங்களின் அறிவை வெளிபடுத்த வாய்ப்பு தருகிறேன் கொஞ்சம் பொருங்கள் என்றார்.

அஷ்ட வக்கிரர் எல்லோரையும் பார்த்தபடி கம்பீரமாகச் சொன்னார், இது வேத விற்பன்னர்கள் கூடும் சபை என்று நம்பித்தான் நானும் வந்தேன். ஆனால் இதுவோ செருப்புத் தைப்பவர்கள் சேர்ந்திருக்கும் இடமாக அல்லவா இருக்கிறது என்றார்.

எங்களை எப்படி இவர் செருப்புத் தைப்பவர்கள் என்று அவமதிக்கலாம். என்று பண்டிதர்கள் சபை அலரியது.

அமைதியாக அஷ்ட வக்கிரர் விளக்கினார், ஒரு மரம் கோணலாக இருந்தால் மரவேலை செய்பவர் கவலைப்படுவார். மரத்தை தடவிப்பார்த்து அது நேராக இருக்கிறதா என்று ஆராய்வார். அதுமாதிரி ஒரு விலங்கைப் பார்த்தும் அது கோணலாக இருக்கிறதா, வளைந்துவிட்டால் ஆஹா இதன் தோல் வேலைக்கு ஆகாதே என்று செருப்புத் தைப்பவர் அதை வெறுப்பார். இவர்கள் பண்டிதர்கள். என் அறிவின் ஆழத்தை பார்த்திருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு என் உடம்பின் கோணலை, தோலின் கோணலை அளவிட்டு என்னை கேலி செய்கிறார்கள் எனவேதான் கேட்கிறேன் இது பண்டிதர் சபையா? செருப்புத் தைப்பவர்கள் கூடியிருக்கும் இடமா? என்று அஷ்ட வக்கிரர் கேட்கிறார்”.

இதைப் படிக்கும் நம்மவர்ளுக்கு எங்கே புரியப்போகிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் வேதனையின் ஆழம். என்ன இருந்தாலும் தனக்குன்னு வந்தாத்தானே தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்ன சொல்லீறீங்க. 

ஸ்டீபன் ஹாக்கிங் என்றொரு விஞ்ஞானி. மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு இணையாக கருதப்படும் தற்கால மனிதர். இன்றும் உயிரோடு வாழ்ந்து வருகிறார். அறிவியலின் தந்தை ஐசக் நியூட்டன் வாழ்ந்த காலத்தில் வகித்த லூகாசியன் பேராசிரியர் பதவியில் இன்று இருப்பவர்.  இயற்பியலாளர். பிரபஞ்சவியலில் ஆய்வுகள் செய்து பல புதிய கோட்பாடுகளை உருவாக்கியிவர். இவரின் கருந்துளை (Block hole) பற்றிய ஆய்வுகள் மிகவும் பிரசித்தி. பாமர மக்களுக்கும் புரியும்படி அறிவியல் புத்தகங்கள் உலகளவில் இன்றும் விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் அளவிற்கு எழுதியுள்ளார். முடிந்தால் The brief history of time, The theory of everything இந்த தலைப்புகளை கூகுள் பண்ணி பாருங்கள் நான் சொல்வது பொய்யில்லை என்பது புரியும். இவரின் சொற்பொளிவுகளை கேட்பதற்கு நுழைவுக் கட்டணம் மிகவும் அதிகம் ஆனாலும் நுழைவுச்சீட்டு கிடைப்பது கடிணம். ஒரு விஞ்ஞானியின் சொற்பொழிவை கேட்பதற்கா? என்று என்னலாம். இந்தியாவில் ஒருமுறை வழங்கிய சொற்பொழிவிற்கு குறைந்த கட்டணமாக ரூ. 15000/- வசூலிக்கப்பட்டது. இதெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் அவருக்கு உடம்பில் என்னவென்று சொல்லத்தெரியாத நரம்பு நோய் ஏற்பட்டு எல்லா பாகங்களும் செயலிலந்து விட்டன. கண் மட்டும் இமைக்கும் மற்றபடி மூளை வேலைசெய்கிறது அவ்வளவுதான். சர்கரநாற்காலியில் பொருத்தப்பட்டிருக்கும் கணினி அவரின் இமை அசைவுகளை செய்திகளாக மாற்றி ஒலிவடிவத்தில் கொடுக்கிறது அதன் மூலம் தான் எல்லா தகவல் பரிவர்தனைகளையும் செய்கிறார். ஒர் நேர்கானலில் இப்படி குறிப்பிடுகிறார் உடம்பில் என்ன இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதால்தான் எப்பொழுதும் என்மனம் ஒயாது பிரபஞ்சத்தினை பற்றி ஆழ்ந்த சிந்தனை செய்ய முடிகிறது. இயற்கையின் ஆச்சரியங்களை உணர்ந்து கொள்ள முடிகிறது என்கிறார். ஆனால் இவர் வெளிநாட்டுகாரர். ஒரு வேலை இங்கிலாந்தில் நிலமை வேறாக இருக்குமோ என்னவோ. இவர் மட்டும் நம்மூரில் இருந்திருந்தார் அறிவியல் ஒரு பொக்கிசத்தை இழந்திருக்கும்.

என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் இளநிலை வேளாண் பொறியியல் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலைதேடிக்கொண்டிருந்த காலம் அது. அப்பெல்லாம் அதிக வெளிவுலக பரிட்சயம் எனக்கு கிடையாது, நம்மை சுற்றியுள்ளவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்ற பிரஞ்கை எனக்குள் ஏற்பட்டிருக்காத நேரம். பணப்பிரச்சினை மற்றும் குடும்ப எதிர்பார்புகளை சமாளிக்க ஏதாவது ஒரு வேலை பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் வேலை தேடி அலைந்தேன். ஒரு சில தோல்விகளுக்கு பிறகு ஒரு தனியார் கம்பெனியில் வேலை கிடைத்தது. விவசாயிகளை சந்தித்து எங்கள் நிறுவன கருவிகளை விற்பனை செய்வதுதான் என் வேலை. நேர்முகத்தேர்வின் போதே அதிக கேள்விகள் கேட்டுத்தான் என்னை தேர்வு செய்தனர். பணியில் சேர்ந்த பொழுது எனக்கு முன் வேலைப் பார்பவனிடம் சிறிது காலம் பயிற்சி பெற்றுக்கொள்ள அவனது மேற்பார்வையில் இருக்குமாறு சொல்லி அவனது இடத்திற்கு என்னை அனுப்பி வைத்தனர். அவன் முதன் முதலில் என்னை பார்த்தவுடனே மேனேஜருக்கு போன் செய்து இவனை ஏன் என் தலையில் கட்டுரீங்க இவனை வைத்து எப்படி வேலை வாங்குவது என்று நீண்ட விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு என்னை அறியாமல் கண்ணில் நீர் வரத்தொடங்கியது. அன்று இரவு முழுவதும் அழுதேன். குடுப்பச் சூழல் அந்த வேலையை செய்தே ஆக வேண்டுமன்ற கட்டாயத்தில் நானிருந்ததால் மனவலிமையை வளர்த்து கொள்ள பழகினேன். அதற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் என் பணியினை பாராட்டி இன்கிரிமெண்ட் கிடைக்கும் அளவிற்கு மாறியது வேறுவிசயம். ஆனால் அதற்கு நான் பட்ட இன்னல்களை விவரிப்பது கடினம். 

உடலில் ஊணம் என்பது ஒரு குறையல்ல என்பதை மறந்து வாழத்தான் ஆசைப்படுகிறோம் நாங்கள். ஆனால் அப்படியெல்லாம் நீங்க இங்கு வாழ்ந்துவிட முடியாது என்று அடிக்கடி சமூதாயம் நினைவு படுத்திய வண்ணம் இன்றும் தொடர்ந்து கொண்டிதானிருக்கிறது. அனுபவம் அதிகம் கிடைத்துவிட்டதால் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை ஏனென்றால் நம் மக்கள் எல்லோருக்கும் மன முதிர்ச்சி ஏற்பட்டு ஊணமுற்றவர்களை ஒரு பிண்டமாக பார்பதை தவிர்த்து சகமனித அங்கிகாரம் தரவேண்டும் என்று நினைப்பது என் தவறு என்பதை உணர்ந்துவிட்டேன். என்னயிருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில் ஊணமுற்றவர்களாகிய என்போன்றோர் வாழத்தகுதியற்றவர்கள் தானே… நான் வேதனைப்படுவதால் என்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது இங்கு….

Monday, December 29, 2014

மனித நோய்கள் புத்தக விமர்சனம்


(நான் சமீபத்தில் மதிப்புரை செய்து மதிப்புரை.காம் வலைதளத்தில் வெளியகியிருக்கும் எனது கட்டுரையின் மீள் பிரசுரம்) 

அறிவியல் சார்ந்த நூல்கள் படிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும், அந்தவகையில் சமீபத்தில் நான் படித்த புத்தகம் ”மனித நோய்கள், உயிர் வேதியல் பார்வை”. மருத்துவர் அருள்செங்கோர் எழுதிய இந்நூல் தமிழ்க்கோட்டம் வெளியீடாக வந்துள்ளது. அறிவியல் சார்ந்த புத்தகம் எழுதுவதில் இருக்கும் மிகப் பெரிய சிக்கல்கள் என்னவென்றால் கலைச் சொற்களைக் கையால்வது. பெரும்பாலான அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் இல்லாத காரணத்தால் சுவாரசியமான மொழி நடையில், தமிழில் அறிவியல்  புத்தகங்கள் மிகவும் குறைவாகவே வெளிவந்துள்ளன. மேலும், ஆழமான அறிவியல் கருத்துக்களை விளக்கும் தமிழ் புத்தகங்களும் சொர்ப்ப அளவே உள்ளன என்ற ஏக்கத்துடன் இப்புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். புதிய தகவல்கள் பலவற்றை தெரிந்து கொண்ட திருப்தியை தந்தது.  துறைசாரதவர்களும் படித்து தெரிந்து கொள்ள செய்யப்பட்டிருக்கும் முயற்சி பாராட்டுக்குறியது. 

மொத்தமாக இருபத்தாறு தலைப்புகளில், மனிதனுக்கு ஏற்படக்கூடிய நோய்களை பற்றிய அறிமுகமும், அவை ஏன், எப்படி ஏற்படுகின்றன என்ற காரணங்களையும், ஒரு சில நோய்களுக்கு தடுப்பு முறைகளையும் அறிமுகப் படுத்துகிறது இந்நூல். இரத்தப் பரிசோதனை முதல் முதுமை வரையிலான விசயங்கள் சுலபமாக அனைவருக்கும் புரிந்திடக்கூடிய வகையில் எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது இதன் பலம். திருநர் பற்றிய கட்டுரை மிக முக்கியமான பதிவு என்றுதான் சொல்ல வேண்டும். நம் சமுதாயத்தில் திருநர்கள் நடத்தப்படும் விதம் மிகவும் கொடூரமானது. பெற்றோர்களே தன்னை வீட்டில் சேர்த்து கொள்ள மறுக்கிறார்கள் என்று எனது இரயில் பயணத்தின் போது ஒரு திருநங்கை என்னிடம் கூறினார் மணமுதிர்ச்சி அடைய இம்மாதிரியான அறிவியல் விளக்கங்கள் அதிகமாகப் பதியப்பட வேண்டும்.

இன்று நம்மிடைய மிகவும் பரவலாக அச்சுருத்திக் கொண்டிருக்கும் மாரடைப்பு, புற்றுநோய், குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் சிறுநீரகக் கல் போன்ற நோய்கள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு விதமான நோய்களைப் பற்றி விளக்குவதால் புத்தகத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் படிக்கலாம். 

பிற்ச்சேர்கையாக கலைச் சொல் அட்டவனை இணைப்பு, வார்த்தைகளுக்கு தவறான அர்த்தங்களை கற்பிதம் செய்துவிடாமலிருக்க செய்யப்பட்டிருக்கும் ஒரு நல்ல முயற்சி. மேலும், சொல்லப்பட்டிருக்கும் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் விதமாக தக்க சான்றுகள் இணைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குறியது. ஆங்காங்கே சில இடங்களில் ஆங்கில மூலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பது நெருடலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. படங்கள் அப்படியே வலைதளங்களிலிருந்து எடுத்தாளப்பட்டிருப்பது தவிர்த்து, தமிழ் விளக்கங்களுடன் மறுஆக்கமோ அல்லது புதிதாக விளக்கப் படங்களை உருவாக்கி சேர்த்திருக்கலம். புத்தகத்தின் பொழிவை சிதைக்காமல் இருந்திருக்கும். சில இடங்களில் பாடப்புத்தகத்தை படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இவற்றை தவிர்க்க, சிறு உதாரணங்களுடனும், சிறிய சம்பவங்களின் மூலமும் விளக்கியிருந்தால் சொல்லவரும் விசயத்தை பற்றின புரிதலை அதிகப்படுத்தியிருக்கும். 

புத்தகத்தின் முன்பகுதியில் உள்ள ”என் நன்றி உரை”யில் எழுதப்பட்டுள்ள சுய புராண சமாச்சாரங்கள் கொஞ்சம் ஓவராகப்படுகிறது. தான் எங்கு பிறந்தேன், எந்த தெருவில் குடி பெயர்ந்தேன், அந்த சம்பவம் எந்த நாளில் நடந்தது என்று வாழ்கை வரலாறு என்ற தலைப்பில் எழுதப்பட வேண்டிய விசயங்களை மிகவும் விரிவாக சொல்லியிருப்பதை தவிர்த்து புத்தகத்தின் நோக்கம், உருவான விதம், எழுதும் போது ஏற்பட்ட அனுபங்களை பகிர்ந்திருக்கலாம். ஏனெனில், மனித நோய்கள் பற்றி எழுத்தப்பட்டிருக்கும் இப்புத்தகத்தை பற்றின சிறு குறிப்பை கூட அதில் காணவில்லை. 
  
மனித நோய்களை மிக நெருக்கமாக அறிமுகப்படுத்தியிருக்கும் இப்புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. இது நமக்காக, நம்மைபற்றி நாமே புரிந்துகொள்ள தமிழில் எழுதப்பட்ட ஒரு ஆவணம். 


                                             -தா. அருள் செல்வம் 



நன்றி: மதிப்புரை.காம்

சுட்டி இங்கே: http://mathippurai.com/2014/12/24/manidha-noigal/  
 

Saturday, December 27, 2014

அறிவியல் அறிவோம்



   தமிழில் அறிவியல் தகவல்களை எனக்கு தெரிந்த அளவிலே சிறு சிறு நடைமுறை உதாரணங்களுடன் தரும் நோக்கில், ”அறிவியல் அறிவோம்” என்ற புதிய நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக சமூதாய பன்பலை வானொலியில் (107.4 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை) செய்து வருகிறேன். இது வாரம் தோறும் திங்களன்று ஒலிபரப்பு செய்யப்படுகின்றது. பன்பலை ஒலிபரப்பு கோயமுத்தூர் பகுதிகளில் மட்டும் கேட்கும் என்பதால் மற்ற ஊர்களுக்கும், உலகலாவிய தமிழ் மக்களுக்கும் வேளாண், அறிவியல் மற்றும் சமூதாய விழிப்புணர்வு செய்திகளை கொண்டு சேர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக வலைதளத்திலும் ஒலிபரப்பு செய்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் இதுவரை ஒலிபரப்பப்பட்டிருக்கும் எந்த நிகழ்ச்சியையும் கேட்கமுடியும்.

    வேளாண்மை சார்ந்த தகவல்கள், சமூதாய முன்னேற்ற செய்திகளை பாமர மக்களுக்கு கொண்டு சேர்பதில் சமூதாய வானொலி முக்கிய பங்கு வகிக்கிறது அந்த வகையில் அடியேனின் நிகழ்ச்சியையும் மனமுவந்து சிரமங்களை பாராமல் ஒலிபரப்பும்  நிர்வாகத்தினருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மேலும் கேட்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடக்கூடாதென என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுதான் இதுவரைக்கும் வந்த எல்லா நிகழ்ச்சியையும் வழங்கியுள்ளேன். ஆகையால் இவன் பேச்சையெல்லாம் கேட்க வேண்டுமா என்று இதை படிப்பவர்கள் நினைக்காமல் கீழ்காணும் வலைதளத்திற்கு சென்று ஒரு முறை கேளுங்கள் ஏதேனும் புதிய செய்தி கண்டிப்பாக அதில் இருக்கும். அப்படி இல்லையெனில் தெரிந்த விசயங்களை நினைவு படுத்தி பார்க்க உதவும்.

    ஒருவேளை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் பராவாயில்லை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு, பள்ளி குழந்தைகளுக்கு பரிந்துரை செய்யலாம். பாட புத்தகமல்லாத இவ்வறிவியல் விசயங்கள் அவர்களின் அறிவை மேம்படுத்திட உதவும். வரும் நாட்களில் அதிக நிகழ்ச்சிகள் தர ஆர்வம்  உள்ளது. காலம் அதற்கு ஒத்துளைக்கும் என நம்புகிறேன். இந்நிகழ்ச்சியினைப் பற்றிய தங்களின் மேலான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

இதுவரை வந்த நிகழ்ச்சிகள்
1.   மங்கள்யான் (Mangalyan sucess story) (13.10.14 முதல் நிகழ்ச்சி)
2.   நோபல் பரிசு 2014 இயற்பியல் (Nobel 2014 physics)
3.   நோபல் பரிசு 2014 வேதியியல் (Nobel 2014 chemistry)
4.   நோபல் பரிசு 2014 மருத்துவம் (Nobel 2014 medicine)
5.   நோபல் பரிசு தேர்வு செய்யும் முறை (Nobel prize selection procedure)
6.   நீர் (Water)
7.   நானோ தொழில்நுட்பம் (Nano Technology)
8.   உணவு பதப்படுத்துதல் (Food Processing methods)
9.   பாய்ஸ்டுரைசேசன் (Pasteurization)
10. ஒற்றை வைக்கோல் புரட்சி (The one straw revolution book review)
11. வெப்பம் (Heat)
அறிவுசார் சொத்துரிமைகள் வரிசையில்
12. காப்புரிமை (patent)
13. பதிப்புரிமை (copy rights)
14. புவிசார் குறியீடுகள் (Geographical Indications)

இன்னும் வரவிருப்பவை
வணிகக் குறியீடுகள் (Trade marks), உணவுப் பொருட்களின் மேல் விவரக்குறிப்பிடுதல் (Food Labeling) இன்னும் பல.....


சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒலிபரப்பானவை (வலைதளத்திலும் உள்ளது)
  1. எனக்கு பிடித்த பாரதி (11.09.2014)
  2. என் மனம் கவர்ந்த மகாத்மா (01.10.2014)
  3. நவ பாரத சிற்பி பண்டித ஜவகர்லால் நேரு (14.11.2014)
  4. மண் பயனுற வந்த மகாகவி (11.12.2014)
  5. தந்தை பெரியார் (24.12.2014)

வலைதள முகவரி: http://agridr.in/community_radio/2014/community_radio.html#october13
All programmes available at: TNAU agriportal/ e-community radio 

நன்றி:
சமூதாய வானொலி (107.4 மெகா ஹெர்ட்ஸ்),
பன்பலை ஒலிபரப்பு,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்,
கோயமுத்தூர் 641 003.

Saturday, October 25, 2014

எண்ணங்கள் மாற வேண்டும்


(எனது முதல் சிறுகதை முயற்சி)


ரகு வகுப்பில் ஒரு சுமாரான மாணவன். மற்ற மாணவர்களைப் போல் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசை ரகுவிற்கு இருந்தாலும், தன்னால் முடியாது என்ற எண்ணம் அதிகம் இருந்தது. பரீட்சையில் தான் படித்தவற்றை நினைவு படுத்தி எழுதுவதில் சிரமம் இருந்ததால் அதிக மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை, அதனால் சக மாணவர்கள் கேலி செய்வதை என்னி வருத்தப்பட்டான். ரகுவின் வகுப்பில் நாற்பதிற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படியான  நண்பர்கள் இல்லை.  

இந்த வருடம் ரகு பணிரெண்டாம் வகுப்பு படிப்பதனால் ஆண்டு இறுதித் தேர்வை மனதில் கொண்டு பள்ளி ஆரம்பித்த நாட்கள் முதலே ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விட டெஸ்ட் வைப்பதிலேயே அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர் இதனால் படிப்பின் மீதே ஆர்வம் இன்றி வாழ்க்கை இருள் சூழ்ந்துவிட்டாதாக எண்ணினான். படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு ஏதாவது வேலைக்கு சென்று விடலாம் என்று தோன்றினாலும், அவனது அம்மா இதற்கு கண்டிப்பாக சம்மதிக்க மாட்டார்கள் என அவனுக்கு திட்டமாக தெரிந்ததினால் வேண்டா வெறுப்பக பள்ளிக்கு வருவதும் செல்வதுமாக இருந்து வந்தான்.

ரகுவிற்கு அப்பா கிடையாது பத்து வயது இருக்கும் போது ஒரு விபத்தில் காலமகிவிட்டார் அது முதல் அவனது அம்மா தான் எல்லாம். ஒருகாலத்தில் நிலபுலங்களோடு செல்லவச் செழிப்பில் வாழ்ந்த குடும்பம் என்றாலும், அப்பாவின் ஊதாரித்தனத்தினால் அனைத்தும் இன்று அழிந்துவிட்டன. இதுமட்டுமில்லாமல் கடன் தொல்லை வேறு. ரகுவின் அப்பா இறக்கும் போது ரகு அவ்வளவாக விவரம் அரியாத பிள்ளையாகத்தான் இருந்தான். அதற்கு பிறகு அவனது அம்மா தான் எல்லாம். அவர் ஒரு உணவுவிடுதியில் கூலி வேலை செய்து ரகுவை படிக்க வைத்து கொண்டு இருந்தார்.

தனது வாழ்க்கைதான் இப்படி ஆகிவிட்டது, பணமில்லாமல் வாழ்க்கை நடத்துவதில் எத்தனை சிரமம். மூன்று வேலை உணவு கூட சரியாக கிடைப்பதில்லை. உடுத்துவதற்கு நல்ல துணிமனிகள் இல்லை. உறவினர்களும், மற்றவர்களும் பணமில்லாதால் மதிப்பதில்லை. இந்நிலை மகனுக்கும் நேர்ந்திடக்கூடாதென என்னி எவ்வளவு சிறமப்பட்டாவது ரகுவை படிக்க வைத்துவிட வேண்டுமென அவனது அம்மா தனது கஷ்டங்களை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார். மற்றவர்களைப் போல் நான் என்ன படிக்கிறேன் பரிட்சைகளில் ஏன் அதிக மார்க்குககள் வாங்குவதில்லை என்று அம்மா கேட்பதில்லை என்று சில நேரங்களில் ரகு வருத்தப்பட்டாலும், படிப்பறிவில்லாத  அம்மா தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பொய்யாக்கக்கூடாது என அதிகம் கவலைப்பட்டான்.

ரகுவின் அன்றாட வேலைகளில் பள்ளிக்கு வருவது மட்டும் தான் நரக வேதனையாக இருந்தது மற்ற நேரங்களில் அவன் சந்தோசமாகவே இருந்தான் மேலும் இந்த வருடம் பணிரெண்டாம் வகுப்பு ஆண்டுத்தேர்வு அரசாங்க தேர்வு என்பதால் அனைவருக்கும் எதிர்பார்புகள் இயல்பாகவே இருந்தன. குறிப்பாக அவனது அம்மாவிற்கு அதிகமாகவே இருந்தது. இது ரகுவிற்கு மனச்சுமையை ஏற்படுத்தியது. ஒரு நேரத்தில் யோசித்து பார்க்கும் பேது பதினொன்றாம் வகுப்பு வரை எப்படி பெயிலாகமல் வந்தோம் என்பதே வியப்பாக அவனுக்கு இருந்தது. காலையில் ஏழுமணிக்கு எழுவான் அம்மாவிற்கு கூடமாட எதாவது உதவிகள் செய்துவிட்டு புத்தகங்களுடன் சிறிது நேரம் போராடுவான் அன்றைய தினம் நடக்கவிருக்கும் வகுப்பு டெஸ்டுகளுக்கு மனப்பாடம் செய்வான் ஒன்பது மணிக்கு சைக்கிளில் பள்ளிக்கு கிளம்பினால் மாலை வரை ஏதோ கற்பனை உலகத்தில் உலாவிவிட்டு மாலையில் வீடு வந்து சேர்வான். மாலையில் கொஞ்ச நேரம் விளையாட்டு, கொஞ்ச நேரம் பக்கத்து வீட்டில் டீவி பார்ப்பது அப்புறம் புத்ததகத்தை திறந்து வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு உலகத்தில் சஞ்சரிப்பது, பொதுவாக தன்னுடன் படிக்கும் மாணவர்களை ஒப்பிட்டு பார்பதிலேயே அதிக நேரம் கழிந்துவிடும் அதற்கு பிறகு இரவு சாப்பாடு, உறக்கம் என்று ரகுவின் அன்றாட பொழுதுகள் இப்படியாக கழிந்தன.

ஒருநாள் பள்ளியில் அந்த அதிசயம் நடந்தது. ஏற்கனவே இருந்த இயற்பியல் ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றலாகி போனதால் அவருக்கு பதிலாக கிருஷ்னன் சார் புதிதாக இயற்பியல் பாடம் எடுப்பதற்கு அமர்த்தப்பட்டிருந்தார். அன்று தான் முதன் முதலாக ரகுவின் வகுப்பிற்கு பாடம் எடுக்க வந்தார், முதல் நாள் என்பதால் அறிமுக வகுப்பாக அது இருந்தது. எல்லோரிடமும் நீ வருங்காலத்தில் என்னவாக போகிறாய்? உன்னுடைய பொழுதுபோக்கு என்ன? பாடபுத்தகங்களை தவிர வேறு புத்தகங்கள் மற்றும் கதைகள் படிக்கும் பழக்கம் உண்டா? அப்படி ஏதும் இருந்தால் எந்தமாதிரியான புத்தகங்கள் ரொம்ப பிடிக்கும்? அந்த புத்தகம் பிடிப்பதற்கான காரணம் என்ன? என்பதுமாதிரியான வினாக்கள் அதிகம் கேட்டார். மாணவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் பதிலை உண்ணிப்பாக கவனித்தார் பேச கூச்சப்படுவர்களை ஊக்கப்படுத்தி தைரியமாக பதில் பேச வைக்க முயற்ச்சி செய்தார். ரகுவின் முறை வரும் போது அவனால் ஏதும் பேச முடியவில்லை அவனது பெயரை மட்டும் அறிமுகப்படுத்தி கொண்டு மற்ற கேல்விகளுக்கு பதிலலிக்காமால் தலையை குனிந்தவாறு சோகத்தில் நின்று கொண்டிருந்தான். கிருஷ்னன் சார் சில கேள்விகளை கேட்டுவிட்டு ரகுவை உட்கார செய்து விட்டார். அன்றைய பொழுது ரகுவிற்கு வித்தியாசமாக இருந்தது. இயற்பியல் பாட வேலை போனதே தெரியவில்லை மேலும் உள்ளுக்குள் ஒருவித பயம் தொற்றிக்கொண்டது முதல் நாள் என்பதால் வகுப்பில் கிருஷ்னன் சார் சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொண்டிருக்கலாம், வரும் நாட்களில் மற்ற ஆசிரியர்கள் போல் வகுப்பு டெஸ்டடுகளை ஆரம்பித்து தினமும் பாடங்களை மனப்பாடம் செய்து வர சொல்ல போகிறார் என்ற உணர்வு ரகுவிற்கு ஏற்பட்டது.

கிருஷ்னன் சார் வகுப்பிலுள்ள அனைவரிடமும் கனிவாகவும், அன்பாகவும், சின்ன சின்ன தவறுகளை பெரிதுபடுத்திக்கொள்ளாமலும் இருப்பதோடு தனிப்பட்ட மாணவனின் அறிவை மேம்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். குறும்புகள் செய்யும் மாணவர்களை கண்டு மகிழ்ச்சி அடைவார், இந்த வயதில் குறும்புகள் செய்யாமலிருப்பது தான் தவறு என்றும், வகுப்பறைகளில் தனது சின்ன வயது அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதும் உண்டு. ஒரு மாணவன் சரியாக படிக்காமலிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன குடும்பச்சூழ்நிலை, ஏழ்மை என மிக நீண்ட பட்டியல் அதற்கு கூறமுடியும். பள்ளிக்கு வருகின்ற எல்லோரும் நன்கு படித்து, பெரியநிலைக்கு வரவே ஆசைப்படுவோம் யாரும் மக்கு மாணவர்களாக இருக்கவிரும்புவதில்லை என்றும் கூறி, மாணவர்களிடம் தன்நம்பிக்கையை வளர்பதும் தனது அன்றாட வேலைகளில் ஒன்றாக கருதினார். இப்படியாக கிருஷ்னன் சார் மாணவர்களின் மனதில் தனியானதொரு இடத்தை பொற்றார். மற்ற ஆசிரியர்கள் போல் இவரில்லை என மாணவர்கள் சகஜமாக நெருங்கி பலக ஆரம்பித்தனர்.

நாட்கள் கடந்தன. கிருஷ்னன் சார் வகுப்பென்றால் அதிகம் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது. பாட சம்மந்தமாக நிறைய குட்டிக் கதைகள் சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் நடைமுறை உதாரணங்கள் சொல்லிபாடம் எடுக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் எல்லா ஆசிரியர் போல் தான் இவரும் இருப்பார் என்று தோன்றிய ரகுவிற்கு கிருஷ்னன் சார் மீது இவர் வேறுமாதிரியானவர் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. இயற்பியல் வகுப்பொன்றால் சந்தோசமும்,  இன்றைக்கு என்ன கதை சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்பும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட தொடங்கின. குறிப்பாக ஒரு விசயத்தை ரகு கவனிக்க ஆரம்பித்தான் கிருஷ்னன் சார் அதிகம் டெஸ்டுகள் வைப்பதில்லை என்றும், மாறாக மாணவர்களுடன் கலந்துரையாடுவதிலும், மாணவர்களை முந்தைய நாள் எடுத்த தலைப்பை பற்றி தாங்கள் புரிந்து தெரிந்து கொண்டவற்றை பகிர்ந்துகொள்ள சொல்வதிலுமே ஆர்வம் காட்டினார், தான் நடத்தும் பாடங்ககளை எந்த அளவிற்கு புரிந்து வைத்துள்ளார்கள் என்று தெரிந்துகொள்ளவதிலேயே அதிக கவனம் செலுத்துவது ரகுவிற்கு அதிசயமாக இருந்தது.

ஒருநாள் வகுப்பில் அணு உலைகள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கையில் அணுவை பற்றின புரிதல் மனிதனுக்கு எப்போது ஏற்பட்டது, ஆரம்ப நாட்களில் விஞ்ஞானிகள் எவ்வாறு இவ்விசயத்தை அனுகினர், பூமியில் உள்ள பொருட்கள் எல்லாம் அணுக்களால் ஆக்கப்பட்டது என்று உலகத்திலிலுள்ள எல்லோராலும் ஏற்றுக்கொண்ட பிறகு அறிவியலின் வளர்ச்சி எதை நோக்கிச் சென்றது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்கிற விஞ்ஞானிதான் முதன் முதலில் அணுவை பிளந்தால் அளப்பறிய ஆற்றல் கிடைக்கும் என்ற கருத்தை சொன்னதாகவும் விளக்கினார். அதேடுமட்டுமில்லாமல், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை அவரது ஆசிரியர்கள் படிக்க லாயக்கற்றவன் என்று கூறியதையும், பின்னாட்களில் ஆல்பர்ட் உலகம் போற்றும் மாமேதை ஆனதையும் சொல்லிவிட்டு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருப்பதாகவும், எல்லோரும் சரியான பயிற்சியும், விடா முயற்சியும் மேற்கொண்டால் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை பொறலாம் என்று பொருமையாகவும் அன்போடும் கிருஷ்னன் சார் அன்று நடத்திய பாடம் ரகுவுடைய சிந்தனையை வெகுவாக பாதித்தது.   

 அதற்குபிறகான நாட்கள் ரகுவின் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தின. ஒருநாள் கிருஷ்னன் சார் தனிமையில் இருக்கும் போது தாமக வழிய சென்று தனது பிரச்சினைய கூறி வருந்தினான். அதற்கு கிருஷ்னன் சார் மனப்பாடம் செய்து பரிட்சை எழுதுவது உனக்கு உள்ள பிரச்சினன மட்டுமள்ள எல்லோருக்கும் இருக்ககூடியதுதான் என்று கூறி படிப்பின் மீது ஆர்வம் வரக்கூடிடய செயல்களில் ஈடுபட்டார். பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவேண்டிய வழிமுறைகளை கற்றுக்கொடுத்தார்.

 ஆண்டு இறுதித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கையில் இயற்பியல் பாடத்தில் தாம் முழுமதிப்பெண்கள் கண்டிப்பாக எடுத்துவிடுவோம் என்ற நம்பிக்கை ரகுவிற்கு அதிகம் ஏற்பட்டு இருந்தது. மேலும் மற்ற பாடங்களில் பரிட்சை எப்படி எழுத போகிறோம் என்ற கவலையும் இல்லாமலில்லை. கிருஷ்னன் சார் போன்று எல்லா ஆசிரியர்களும் கிடைத்து விட்டால் என்னை போலுள்ள முட்டாள் மாணவர்களும் படிப்பின் மீது ஆர்வம் காட்டமுடியும் என்ற சிந்தனை ரகுவிற்கு தோன்ற ஆரம்பித்தது. 






 தா. அருள் செல்வம்
(18.10.2014; 10.30 am)